86-ஆம் ஆண்டில் ‘விடுதலை’ கோவை மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை' விளைச்சல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 8, 2020

86-ஆம் ஆண்டில் ‘விடுதலை’ கோவை மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை' விளைச்சல் விழா


கோவை  ஜூன் 8, 04.-06.-2020 அன்று இரவு  காணொலி மூலம் கோவை மண்டல கழகம் சார்பில் ‘விடுதலை’ விளைச்சல் விழா நடைபெற்றது.


கோவை மண்டலத் தலைவர் இரா.கருணாகரன் தலைமை வகித்து உரையாற்றினார், கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர் வரவேற்று உரையாற்றினார். அமைப்பு செயலாளர் த. சண்முகம், பெரியார் மருத்துவ குழும தலைவர் டாக்டர் இரா. கவுதமன்,மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, தாராபுரம் மாவட்டத் தலைவர்  க.கிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, கோவை மாவட்டச் செயலாளர் தி.க செந்தில்நாதன், தாரா புரம் மாவட்டச் செயலாளர் க.சண்முகம் மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்விஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்


இரா. ஜெயக்குமார்


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  தொடக்கவுரையாற்றினார். அவர்தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘விடுதலை’ நோக்கம் பிறழாமல் நடத்தவேண்டும். அதற்கு அரசு விளம்பர வருவாய் எதிர்பார்க்கக் கூடாது. சுதந்திர ‘விடுதலை’ தான் வேண்டும். எவ் வளவு பொருள் நட்டம் வந்தாலும் தொடர்ந்து நடத்துவோம் என்று அன்றே தந்தை பெரியார் சொன்னதை தமிழர் தலைவர் தனது காணொலி உரையில் கூறிப்பிட்டார்கள். தற்போதும் ‘விடுதலை’க்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் விடுதலை அனுப்புவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய விடுதலை வளர்ச்சி நிதி நன்கொடையினை கழக தோழர்கள் முன்வந்து வழங்கி ‘விடுதலை’யை  தோழர்கள் தாங்கி பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து, பொள்ளாச்சி பொறி யாளர் தி பரமசிவம், வீரமலை, முருகானந்தம், மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், ப.க. அக்ரி நாகராஜ், வெற்றிச்செல்வன், கணியூர் தங்கவேல், கணியூர் பெரியசாமி, கணியூர் சிவக்குமார்,கணியூர் சுரேஷ், இல.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் மு.தவமணி கழக பேச்சாளர் க.வீரமணி ஆகியோர் உரையாற்றினார்கள்!


பேராசிரியர் நம். சீனிவாசன்


சிறப்புரையாற்றிய பேரா. நம்.சீனிவாசன் (இயக் குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்) தனது உரையில் குறிப்பிட்டதாவது: சிறப்பாக நடை பெறுகின்ற காணொலி கருத்தரங்கில் முக்கிய தலைவர்கள் பத்திரிகைகள் குறித்து முதலில் தெரிந்து கொள்ளலாம். 1893 காந்தி தென் னாப்பிரிக்கா சென்றார். இந்தியன் ஓப்பனிங் என்ற பத்திரிகையின் முதுகெலும்பாக இருந்தார். 1915 இந்தியா வருகிறார். 1919 யங்இந்தியா பத்திரிகை தொடங்குகிறார். நவஜீவன் தொடங்குகிறார். 1932இல் நிறுத்தம். 1933 ஹரிஜன் பத்திரிக்கை நடத் தினார். இவ்வாறாக தலைவர்கள் தமது கருத்துகளை வெளியீடுவதற்கு பத்திரிகை தொடங்கி உள்ளனர். அன்னி பெசன்ட் அம்மையார் லிங்க், நியூ இந்தியா நடத்துகிறார். பாபாசாகெப் அம்பேத்கர் மூக்நாயக் பத்திரிகை தொடக்கத்தில் நடத்தினார். பகிஷ்கர்பாரத் என்ற பத்திரிக்கையை நடத்தினார். அயோத்திதாச பண் டிதர் ஒரு பைசா தமிழன் என்று பத்திரிகை நடத் தினார். இரட்டை மலை சீனிவாசன் ஒரு ஜாதியின் பெயரால் பத்திரிகை நடத்தினார். அண்ணா அவர்கள் திராவிட நாடு, காஞ்சி பத்திரிக்கைகளை நடத்தினார். திரு.வி.க. நவசக்தி பத்திரிகை நடத்தினார்.  வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு என்ற பத்திரிகையை நடத்தினார். பாலகங்காதர திலகர் கோசலி, மராட்டா நடத்தினார். ராஜாஜி சுவராஜியா பத்திரிகை நடத் தினார். சிங்காரவேலர் தொழிலாளர். ஜீவானந்தம் ஜனசக்தி நடத்தினார்கள்.


திராவிட இயக்கம் நடத்திய இதழ்கள்


தமிழ்நாட்டில் 1942தொடங்கி 1962 வரை திரா விட இயக்கம் நடத்திய இதழ்கள் 262 ஆகும். ஆங்கில இதழ்களும் நடத்தப்பட்டது. அண்ணா அவர்கள் ஹோம் லேண்ட் பத்திரிகை நடத்தினார். சண்டே அப்சர்வர் வி.பாலசுப்பிரமணியம் நடத்தினார். தமிழ்நாட்டில் நாளிதழ்கள் மிகமுக்கியமான பங்கு வகிக்கிறது. தினமணி 1934 தொடங்கப்பட்டது. ‘விடுதலை’ 1935 தொடங்கப்பட்டு வாரம் இரு முறையாக நடத்தப்பட்டது. 1942 தினத்தந்தி நாளிதழ் தொடங்கப்பட்டது. 1951 தினமலர் தொடங்கப் பட்டது.  1977தினகரன் பத்திரிகை தொடங்கப்பட்டது. இயக்க பத்திரிகை கட்சி பத்திரிகை என்ற அடிப் படையில் 1963 ஆண்டு தொடங்கப்பட்டது தீக்கதிர். 2013 இந்து தமிழ் தொடங்கப்பட்டது. முரசொலி1942 தொடங்கப்பட்டு ஓராண்டு மட்டுமே துண்டு வெளி யீடாக வந்தது. முதலாம் ஆண்டு வெளியீட்டு விழா நிறைவு விழாவில் பேராசிரியர் அன்பழகன். நாவலர் நெடுஞ்செழியன். மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அந்த பத்திரிகை வர வில்லை. அதற்கு பிறகு 1946 முதல் 1948 வரை மாத இதழ்களாக 25 இதழ்கள் வந்திருக்கிறது. 1953 முதல் மாத இதழாக சென்னையில் இருந்து வெளிவந்தது. 1960 முதல் முரசொலி நாளிதழாக வெளி வருகிறது. 1996 பிப்ரவரி முதல் சங்கொலி பத்திரிகை வருகிறது. இது தமிழ்நாட்டின் நாளிதழ்களில் வரலாறு.


மிகப் பெரும் பத்திரிக்கையாளர் தந்தை பெரியார்


தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரும் சிந்தனை யாளர் மிகப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். அதே சமயத்தில் அவர் ஒரு மிகப்பெரும் பத்திரிக்கை யாளராக என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தந்தை பெரியாருக்கு பிரச்சாரம் தான் முக்கியம். பெரியார் சொல்கிறார் நாதஸ்வரம் ஆக இருந்தால் ஊதியாக வேண்டும், தவிலாக இருந்தால் அடிபட்டு தான் ஆகவேண்டும். எனக்கு குரல், தொண்டை இருக்கிறது பேசியாக வேண்டும். பிரச்சாரம் செய்தாக வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வரை இடைவிடாத பிரச்சாரம் செய்தார். அதற்கு  பத்திரிக்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். யார் ஆதரித் தார்கள் யார் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை பற்றி கவலை இல்லாமல் நானே எழுதி நானே அச்சுக் கோத்து நானே அச் சடித்து நானே படிக்கின்ற நிலைமைக்கு சென்றாலும் தொடர்ந்து பத்திரிக்கையை வெளியிடுவேன் என்று தந்தை பெரியார் அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு பத்தி ரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது என்று பார்ப்போம்! இந்த காணொலி கூட்டம் தற்போது கோவையில் நடைபெறுகிறது.


கோவையில்தான் உருவானது


தந்தை பெரியாருக்கு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கோவையில் தான் உருவானது. 1922 ஆம் ஆண்டு கோவை சிறைச்சாலையில் தந்தை பெரியார் இருக்கிறார். அப்போதுதான் அய்யா அவர்களுக்கு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிறது.


குடிஅரசு


1923, 19ஆம் தேதி குடிஅரசு பத்திரிக்கை பதிவு செய்கிறார். குடிஅரசு முதல் இதழ் 1925 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி வருகிறது. இதுதான் தந்தை பெரியார் நடத்திய முதல் பத்திரிக்கை.


1925 தொடங்கி வந்து கொண்டே இருக்கின்றது. கடைசியாக 19.11.1933 இல் கடைசி இதழ் வருகிறது. அதற்கு பிறகு அரசு தடை செய்கிறது. அரசு தடை செய்த காரணத்தினால் 1934 முழுவதும் ஓராண்டு வரவில்லை. 13.1.1935 தான் மீண்டும் வருகிறது. அதற்கு பிறகு 29.12.1940இல் நின்றது. 16.10.1943 வரைக்கும் மூன்று ஆண்டுகள் குடிஅரசு இதழ் வரவில்லை. குடிஅரசு பத்திரிகை தனது கடைசி பயணத்தை நிறுத்தி கொண்டது. 1949 ஆண்டாகும். தந்தை பெரியார் சிந்தனைகளை நமக்கு மொத்தமாக வழங்குகின்ற ஏடு 637 இதழ்கள் உள்ளது. குடிஅரசு பிணைத் தொகை 3000 கட்டாததால் அது நின்று விடுகிறது. 1933 ஆண்டு இந்த ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும் என்கிற கட்டுரை எழுதியதற்காக குடிஅரசு தடைசெய்யபடுகிறது.


புரட்சி, பகுத்தறிவு


தந்தை பெரியார் நின்று விடவில்லை. குடிஅரசு அளவில் அதே வகையில் புரட்சி என்கின்ற இதழ் வரும் என்று அறிவிக்கிறார். அதேபோல் 1933ஆம் ஆண்டில் நவம்பர் 26ஆம் தேதி  வெளியிடுகிறார். ஆசிரியர் பெயர் இல் லாமல் வெளியிட்டதற்காக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படு கிறது. 1933ஆம் ஆண்டில் மட்டும் 3 வழக்குகளை தந்தை பெரியார் அவர்கள் சந்தித்திருக்கிறார். பிணைத் தொகை 2000 கட்டவேண்டும் சொன்னார்கள். இந்த புரட்சி இதழ் 7மாதம் மட்டுமே வெளிவந்தது. அதற்கான நட்டம் 5000 ரூபாய்  1934ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு புரட்சி இதழ் நின்று விட்டது. அதற்கு பிறகு தந்தை பெரியார் உடனே பகுத்தறிவு என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார். பத்திரிக்கை நடத்துவதை தந்தை பெரியார் மிகப்பெரும் போர் ஆயுதமாக கருதிய காரணத்தினாலே தொடர்ந்து நடத்துகிறார். பகுத்தறிவு நாளிதழ் 7 மாதமாக வெளிவருகிறது. அதுவும் தடை செய்யப்படுகிறது. பின்பு அதை வார ஏடாக மாற்றுகிறார். பிறகு மாத ஏடாக மாற்றி 1938ஆம் ஆண்டு நின்றுவிடுகிறது.


ரிவோல்ட்


தந்தை பெரியார் நடத்திய ஆங்கில பத்திரிகை ரிவோல்ட் என்பதாகும். 1928 தொடங்கி 1930 வரை 55 இதழ்கள் வந்தது. நீதிக்கட்சி நடத்திய பத்திரிகை திராவிடன். ஆசிரியராக பக்தவச்சலம் பிள்ளை உதவி ஆசிரியராக சுவாமி ருத்தரகோடிஸ்வரன் ஆகியோர் இருந்தனர். ‘விடுதலை’ 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கியது. 1.6.1935 தொடங்கி 29.5.1937 வரை வாரம் இருமுறையாக வெளிவந்தது. 1.7.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது. திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் கொள்கைகளை நமக்கு பாதுகாத்து தருவது இந்த ஏடுகள் தான். புரட்சி ஏடு 30 இதழ்கள். குடிஅரசு,  பகுத்தறிவு நாளிதழ் கிடைக்கவில்லை. வார இதழ் 20, மாத இதழ் 44. ‘விடுதலை’ 86 ஆண்டுகளாக இதுவரை ‘விடுதலை’ 29 ஆயிரத்து 510 நாளிதழ்கள்   வெளிவந்து இருக்கிறது. முதல் இரண்டு ஆண்டுகள் வாரம் இருமுறையாக பத்திரிகை வந்தது. ‘விடுதலை’ பத்திரிகையை 1943ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி 1945 செப்டம்பர் 30 தேதி வரை யுத்த பிரச்சாரத்திற்கு தந்தை பெரியார் வழங்கிவிட்டார்.


அந்த காலகட்டத்தில் ‘விடுதலை’ பத்திரிகை இயக்க பத்திரிகையாக வரவில்லை. பெரியார் கைக்கு 6.6.1946 இல் வந்தது. 'விடுதலை' பத்திரிகை ஏன் யுத்தபிரச்சாரத்திற்கு கொடுக்கப்பட்டது என்று ஒரு அற்புதமான கட்டுரையை ஆசிரியர் அவர்கள் ஒரு மலரில் பதிவு செய்து இருக்கிறார்கள்.


‘விடுதலை’யின் சாதனைகள்


விடுதலை பத்திரிகை ஏராளமான சாதனைகளை செய்து இருக்கிறது.


ராஜகோபால ஆச்சாரியார்  4 ஆண்டு நான்கு மாதம் முதல்வராக இருந்தார்.  1937 தொடங்கி 1939 வரை 28 மாதம் முதல்முறையாக, மீண்டும் 1952 முதல்வராக வந்தார். 1954இல் ராஜினாமா செய்தார். அப்போது 24 மாதம் ஆக 4 ஆண்டு 4 மாதம் முதல் வராக இருந்தார். ராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்த போது ‘விடுதலை’ அவரை எதிர்த்து எழுத பயன்படுத்தியது ஒரு அற்புதமான வரலாறு ஆகும். 1938இல் ராஜாஜி இந்திமொழியை திணிக்கின்றார். தமிழர் படை என்ற படை 1.8.1939 தொடங்கி 11.9.1939  திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணம் செய்து 42 நாட்கள் அந்த படை பயணம் மேற்கொண்டது. 234 சிற்றூர் வழியாக 60 நகரங்களில் 87 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அந்த தமிழர் படை பெரும் படையாக சென்னை சென்று அடைந்து போது ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்திஎதிர்ப்பு பிரச்சாரம் குலக்கல்வித் எதிர்ப்பு பிரச்சாரம் படை நாகபட்டினத்திலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி செல்கிறது முதல்வர் ராஜாஜி உடல் நலம் சரியில்லை என்று காரணம் சொல்லி வெளியேறுகிறார்.


பேராயுதமாக.....


இந்த சாதனையை பெரியார் நிகழ்த்த ஒரு பெறும் ஆயுதமாக இருந்தது விடுதலை பத்திரிகைதான். குடிஅரசு 1949ஆம் ஆண்டு நின்றுவிடுகிறது அதற்கு பிறகு விடுதலை தான் திராவிடர் கழகத்திற்கு பேரா யுதமாக திகழ்கிறது. வன்முறை யில் நம்பிக்கை இல்லாத இயக்கம் திராவிடர் கழகம். பத்திரிக்கைத் தான் ஆயுத மாக திகழ்கிறது. திராவிடர் கழக வரலாறு எடுத்துக் கொண்டால் 1950 தொடங்கி 10 ஆண்டுகள் 1960 வரை ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன.


இளந்தமிழா போருக்கு எழு!


வடவர் சுரண்டல் எதிர்ப்பு அறப்போராட்டம். வகுப்புரிமை போராட்டம். விநாயகர் உருவபொம்மை எரிப்பு போன்ற ஏராளமான போராட்டங்களுக்கு அறிவாயுதமாக இருந்தது ‘விடுதலை’ பத்திரிகை தான். மிசா காலகட்டம் 1975 ஜூலை 25 தொடங்கியது.  மிசாவால் தமிழ் நாட்டில் பத்திரிகை தணிக்கை இருந்தகாலத்தில் ‘விடுதலை’ பத்திரிகைக்கு ஏராள மான தொல்லைகள் இருந்தது. இளந்தமிழா போருக்கு எழு என்ற கட்டுரை எழுதியதற்காக அன்னை மணியம்மையார் சிறைபிடிக்கப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. ஒவ்வொரு பிரச்சினையிலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை கழக தோழர்களுக்கு அறிவிப்பது கழக ஏடு ‘விடுதலை’தான். தலைவர் என்ன நினைக்கிறாரோ, தொண்டர் அதையே நினைக்கவேண்டும் அதில் சுருதி பேதம் வரக்கூடாது அப்படி வராமல் இருக்க நாம் அனைவரும் ‘விடுதலை’ வாசிக்க வேண்டும். கழக தலைவர் ஆசிரியர் அவர்களை நாம் சந்திக்கும் போது, சால்வை வேண்டாம் சந்தா தாருங்கள் என்றே அவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்.


ஒரு முறை கழகபொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்கள் ஆசிரியர் அவர்களிடம் அய்யா விடுதலை பத்திரிகை ஆசிரியராக நீங்கள் பெருமையாக நினைப்பது எதை? என்று கேட்கிறார். ஆசிரியர்   அவர்கள் தந்தை பெரியார் அவர்களோடு 1962 முதல் 1973 வரை 12 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து இருக்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் நான் எழுதிய என்னுடைய கருத்துக்கு கீழே இது எனது கருத்து அல்ல என குறிப்பிட்டது கிடையாது என்பதே பெருமையாய் கருதுகிறேன் என்று சொல்கிறார்.  அப்படிப்பட்ட ‘விடுதலை’ நாளிதழை வாங்கி படியுங்கள்  என்று வேண்டுகோள் விடுத்து விடுதலை தொடங்கியது முதல் 'விடுதலை' வளர்ந்தது வரை  'விடுதலை' பத்திரிகையில் நாம் அடைந்த நன்மைகள் என ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரப்பூர்வமான செய்திகளை மிக சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்து கூறினார்.


கூட்டத்தில் பங்கேற்றோர்


மதுரை பவுன்ராசா, பெரம்பலூர் தங்கராசு, வேட்டவலம் பட்டாபிராமன், கோவிந்தசாமி, காரமடை அ.மு.ராஜா, பெல் ஆறுமுகம், திருவாரூர் இரா.சிவக்குமார், உரத்தாடு அ.உத்திராபதி, நா.அன்பரசு, காரைக்குடி பழனிவேலு, சுப்பையன், ஆத்தூர் செல்வம், , திருவெறும்பூர் தமிழ்ச்சுடர், தஞ்சை  குணசேகரன், சிதம்பரம், பிரான்ஸ் தங்க. ரமேஷ், மதுரை தமிழ் ஓவியா மாரிமுத்து, புதுச்சேரி சிவ.வீரமணி, தாமு.முரளிதரன், அரப்பாக்கம் சின்னத் துரை, திலகமணி, திருத்துறைப்பூண்டி கிருஷ்ண மூர்த்தி, கணியூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்


மாணவர் கழக தோழர்கள் இராசி. பிரபாகரன், த.கவுதமன், தமிழ் நியூட்டன் ஆகியோர் காணொலியை ஒருங்கிணைத்தனர். நிறைவாக கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு நன்றி கூறினார்.


No comments:

Post a Comment