இந்துமத எதிர்ப்புப் பிரச்சாரம்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
இந்துமத எதிர்ப்புப் பிரச்சாரம்
ஜாதிப் பிரச்சனை மதத்தோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் துவக்க காலத்திலேயே புரிந்து கொண்டிருந் தார் பெரியார். அய்ம்பதுகளில் இது பற்றிய அவரின் கருத்து மேலும் மேலும் உறுதிப்பட்டது. 1949 பிப்ரவரியில் அவர் பேசிய பேச்சு இது - “இந்து மதத்தில் நம்பிக்கை இருக்கும் எவனுக்கும் மான உணர்ச்சி ஏற்படவே ஏற்படாது. இந்து மதம் என்றாலே திராவிடன் சூத்திரனும் பஞ்சமனும்தான். இந்து மத உணர்ச்சி ஒன்றினால்தானே திராவிடன் சூத்திரப்பட்டத்தைப் பற்றிச் சிறிதுகூட வெட்கப்படுவதில்லை. திராவிடன் பக்தனாக, பாகவ தனாக, அடியாராக ஆசைப்படுகிறானே ஒழிய, அதற்கா கப் பக்திப் பிரவாகமெடுத்து ஓடும்படி பாடுவதும், பஜனை செய்வதும், நாமமும் பூச்சும் மணியும் கொட் டையும் அணிவதுமான காரியத்தைச் செய்வதில் உற்சாக மாக இருக்கிறானே ஒழிய அவன் பிறவி ஏன் இழி பிறவி, சூத்திரப் பிறவி, கடை ஜாதி பிறவி என்று எவனுமே யோசிப்பதில்லையே! இதற்கு மத நம்பிக்கை அல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும்?”
இதுவொரு முக்கியமான சிந்தனை. மக்களிடம் இருக்கக் கூடிய மத நம்பிக்கையை வைத்துத்தான், அதை வளர்த்துத்தான் தனது ஜாதிய ஒடுக்குமுறை குணத்தை மறைத்து வந்தது அல்லது சகலரையும் ஏற்கும்படி செய்து வந்தது பிராமணியம். எனவே இந்து மதம் பிராமணியம் காக்கும் மதமாக இருக்கிறது, அது உண்மையில் பிராம ணிய மதமாக இருக்கிறது என்கிற யதார்த்தத்தை அம் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இதைத் தன் தோள் மீது போட்டுக் கொண்டார் பெரியார். தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடாத காரணத்தால் மக்கள் மனம் கோணுமே, வாக்கு குறையுமே என்று கவலைப் படாமல் அவரால் இந்த விஷயத்தைப் பிரச்சாரம் செய்ய முடிந்தது.
இந்து மதம் ஜாதியம் காக்கும் மதம் என்றால் அதிலிருந்து விலகி வேறொரு மதத்திற்குப் போகுமாறு சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏன் கோரக் கூடாது எனும் கேள்வி எழுந்தது. அம்பேத்கர் இதற்கான பதிலாக புத்த மதத்திற்குப் போவதைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவோம். பெரியார் இந்தப் பாதையை ஏற்கவில்லை . 1956 நவம்பரில் அவர் கூறினார்”இப்போது புத்தர் கொள்கை மதம் போல ஆகிவிட்டது. பர்மா, சிலோன் முதலிய இடங்களில் சாயபு என்றால் என்ன அடையாளம் உண்டோ அது போல பவுத்தனுக்கும் கோவில், மண்டி போடுதல் இவையெல்லாம் பவுத்தமத அடையாளமாகி மதமாகிவிட்டது. இதைத்தான் நான் அம்பேத்கரிடம் கூறினேன். இந்து மதத்தில் உள்ள பார்ப்பனர்க்குப் பயந்து அங்கு போனால் இந்தப் பிட்சுக்களைக் கட்டிக் கொண்டு யாரால் அழமுடியும் என்று கூறினேன். இப்போது உள்ள பிடிமானத்தை விட்டுவிட்டால் நாளைக்கு இந்து மதத்தைப் பற்றி ஒரு சின்னவார்த்தை சொன்னால்கூட தவறு சுமத்தப்பட்டுவிடும் என்றேன்’’.
இதில் சில முக்கியமான உண்மைகள் உள்ளன. புத்தர் காலத்தில் பவுத்தம் ஒரு சீர்திருத்த இயக்கமாக இருந்தது. பிற்காலத்தில்- குறிப்பாக மகாயானம் தோன்றிய பிறகு- அதுவும் ஒரு மதமாக மாறிப் போனது. அங்கு போவதால் ஜாதியம் ஒழியாது, மாறாக அங்கும் ஜாதியம் கொண்டு போகப்படும். இதுதான் இந்தியாவில் நடந்தது. அதுமட்டு மல்ல, மதம் என்றாலே சடங்குகளும், ஆச்சாரங்களும் தொடரும். ஆகவே மதமாற்றத்தை ஏற்கவில்லை பெரியார்.
இன்னொரு பெரிய உண்மை ஒரு பகுதியினர் மதம் மாறுவதால் இந்து மதத்திலேயே இருக்கப் போகிற பெரும்பான்மையான சூத்திரர் - பஞ்சமர் பிரச்சனை தீரப் போவதில்லை என்பது. மாறாக மேலும் சிக்கலாகும். மதம் மாறியவர்கள் இந்து மதம் பற்றி விமர்சித்தால் மாற்று மதத்துக்காரர்கள் எப்படிப் பேசலாம் என்று பிராமணிய வாதிகள் பாய்வார்கள். இதைப் பெரியார் நன்கு உணர்ந் திருந்தார். எனவே அந்தத் தவறைச் செய்ய அவர் விரும்பவில்லை .
“ராமசாமி” என்கிற பெயரை வைத்துக் கொண்டே ராமாயணத்தில் இருந்த பிராமணியச் சிந்தனைகளைப் புட்டுபுட்டு வைத்தார். நிறைமாத கர்ப்பிணியாகிய சீதையைக் காட்டுக்கு அனுப்பிய, சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிய ராமனின் அநியாய ஆட்சியை அம்பலப்படுத்தினார். 1940களில் மட்டுமல்லாது 1965-66ல்கூட ராமாயண எரிப்புப் போராட்டம் நடத்தினார்.
இந்து மதச் சடங்குகளில் உள்ள மூடத்தனங்களை - மூட நம்பிக்கைகளை மட்டுமல்லாது ஜாதியக் கூறு களையும் அடையாளங் காட்டினார். சூத்திரர்களுக்குச் சடங்குகள் செய்யும் போது அவர்களுக்கு பூணூல் மாட்டிவிடுவதையும், அவை முடிந்ததும் அதைக் கழட்டிவிடுவதையும் சுட்டிக் காட்டினார். இதன் பொருள் தெளிவானது. “சாதாரணமாகச் சூத்திரர்களுக்கு பிராமணி யச் சடங்குகளைச் செய்யும் உரிமை கிடையாது. காசுக் காகவும், போனால் போகட்டும் என்றும் செய்கிறோம். அப்போதும் அந்த வேளைக்கு மட்டும் உங்களை இரு பிறப்பாளராக ஆக்கிச் செய்கிறோம், மற்றபடி சூத்திரன் சூத்திரனே”. இப்படிச் சொல்லாமல் சொல்வதாகும் என்றார்.
1950களில் அவர் செய்த பிரச்சாரத்தின் தன்மையைக் கவனிக்கும் போது அது புராணங்கள் மற்றும் இதிகாசங் களில் இருந்த பிராமணிய அம்சங்களை அம்பலப்படுத் துவதாகவும், இந்து மதச் சடங்குகளில் இருந்த உயர்சாதி யக் கூறுகளை எதிர்ப்பதாகவும் இருந்தது. ஆகவே அத்தகைய இந்து மதம் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக் கும் தேவையில்லை என்று கூறுவதாக அமைந்தது. இவர்களுக்கு மதமே தேவையில்லை என்கிற நிலைப் பாட்டுக்கு அப்போது வந்ததாகத் தெரியவில்லை. அந்த நிலை எடுக்க கடவுள் மறுப்பு நிலைபாட்டைத் தி.க.வின் கொள்கையாக ஆக்கவேண்டும். அப்படி ஆக்குவது வெகு மக்களை பிராமணிய எதிர்ப்பிற்குத் திரட்ட உதவுமா என்று அவர் சற்றே யோசித்ததாகத் தெரிகிறது.
“நம் கடவுள் ஜாதி காப்பாற்றும் கடவுள், நம் மதம் ஜாதி காப்பாற்றும் மதம், நம் அரசாங்கம் ஜாதி காப்பாற்றும் அரசாங்கம், நம் இலக்கியம் ஜாதி காப்பாற்றும் இலக்கியம், நம்மொழி ஜாதி காப்பாற்றும் மொழி”. இப்படியொரு பரபரப்பான நிர்ணயிப்பை 1961 செப்டம்பரில் தந்தார் பெரியார். இதற்கு ஆதாரமாக எத்தனையோ செய்தி களைச் சொன்னார். ஆனால், இதைச் சற்று மாற்றி யோசித்தால் ஜாதி காப்பாற்றாத கடவுளையும், மதத்தையும் ஏற்கலாம் எனும் அர்த்தமும் வந்தது. இதே பேச்சின் கடைசிப்பகுதி இது- “சிவனையும், விஷ்ணுவையும், கிருஷ்ணனையும் ஒழித்தால் கடவுள் போய்விடாது. ராமன் போய்விட்டால் கடவுள் போய்விடும், கிருஷ்ணன் போய்விட்டால் கடவுள் போய்விடும் என்பது முட்டாள் தனம். அவர்கள் கடவுள் என்று எதிலே கண்டுபிடித் தார்களோ தெரியவில்லை. வெறும் புளுகு புராணக் கதையில் கண்டுபிடித்த சங்கதிதான். ராமாயணம் இல்லை யென்றால் ராமன் இல்லை. கந்தபுராணம் இல்லையென் றால் கந்தன் இல்லை. விஷ்ணுபுராணம் இல்லையென்றால் விஷ்ணு இல்லை. இந்த மாதிரி புராணங்களிலிருந்து உற்பத்தி செய்து நம் தலையில் போட்டு, அவனுடைய படங்களை ஏற்கச் செய்து விட்டான் என்றால் அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? எந்த மடையனாவது இவர்களைக் கடவுள் என்று சொல்ல முடியுமா?”
பிராமணிய மதத்தின் புராணக் கடவுளர்களைத்தான் மறுத்தாரே தவிர உருவமில்லா ஏகக் கடவுளைப் பெரியார் மறுக்காதது போல இது உள்ளது. அவர் தன்னளவில் கடவுள் மறுப்பாளராக வெகு காலத்திற்கு முன்பே மாறியிருந்தார். ஆனால் கடவுள் மறுப்பைத் தனது இயக்கத்தின் கொள்கையாக இன்னும் மாற்ற வில்லை என்பது இதன் அர்த்தமாகும். அப்படி மாற்றுவது இயக்க வளர்ச்சிக்கு உதவுமா என்று யோசித்ததாகப்படு கிறது. “கடவுள் இருந்து தொலைக்கட்டுமே’’ என்று கூட விட்டேற்றியாகப் பேசியிருக்கிறார்.
இந்த நிலைப்பாட்டிலிருந்து அடுத்த சில ஆண்டு களில் தனது இயக்கத்தை கடவுள் மறுப்பு கோட்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தினார் பெரியார். 1967இல் தஞ்சை மாவட்டத்தின் விடயபுரத்தில் நடந்த தி.க.வினருக்கான பயிற்சி வகுப்பில்தான் அந்தப் புகழ்பெற்ற “கடவுள் இல்லை, இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ எனும் நாத்திகப் பிரகடனத்தைத் தனது இயக்கத்திற்குத் தந்தார். 1971இல் அவர் எழுதிய “கடவுள் ஒரு கற்பனையே” எனும் நூலில் கடவுள் மறுப்புக்கான நுணுக்கமான வாதங்களை எல்லாம் வைத்தார். ஒரு தேர்ந்த தத்துவவாதியை இந்த நூலில் காணலாம். ஜாதியை ஒழிக்க மட்டுமல்ல, மனிதகுலப் பொது முன்னேற்றத்திற்கே கடவுள் மறுப்பு வேண்டும் என்று அதில் பலமாக வாதிட்டிருக்கிறார் பெரியார். பெரியாரின் இயக்கம் நாத்திகத்தை தனது கோட்பாடாக வரித்துக் கொண்டது பிராமணியத்திற்கு கெடுதலாக இருந்ததா? தொலைதூர நோக்கில் பார்த்தால் கெடுதலே. பிராமணி யம் தனது வருணாசிரமக் கட்டமைப்பைக் காக்க கடவுள் வழிபாட்டை ஒரு ஆதாரத் தூணாகக் கொண்டிருந்தது. அதையும் அசைக்கப் பார்த்தார் பெரியார் எனும் போது கெடுதலே. மத நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் மிக ஆழமாக மக்கள் மனதில் ஊறிப் போயிருக்கும் விஷயங்கள். அவ்வளவு எளிதில் அவற்றைக் கைவிட மாட்டார்கள். பிராமணியத்தை எதிர்க்கவே பெரியார் கடவுள் மறுப்புவரை வந்தார். ஆனால் பிராமணிய வாதிகள் மட்டுமல்ல சில பெரியாரியவாதிகளே கூட கடவுள் மறுப்பை நிலைநாட்டவே பிராமணியத்தை எதிர்த்தார் என்று விஷயத்தைத் தலைகீழாக வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். சொல்லவும் செய்தார்கள். ஏன், பெரியார் சிலை பீடத்தில் இந்த நாத்திகப் பிரகடனத்தையே எழுதிவைத்தார்கள். இது பிராமணியத்திற்கு மிக வசதியாகப் போனது. “பெரியார் இயக்கமா அது நாத்திகக் கூட்டமாயிற்றே” என்று சொல்லி அதன் பிராமணிய எதிர்ப்பு எனும் மய்யக் கோட்பாட்டை மறைக்க ஆரம்பித் தது. இந்த வகையில் பிராமணியத்திற்கு இது உடனடி ஆதாயத்தைத் தந்தது.
.- தொடரும்
No comments:
Post a Comment