பட எரிப்பு அரசியல் போராட்டம் அல்ல; அது ஓர் இனப் போராட்டமே!
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
2.6.2020 வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி
இதற்கிடையில் 1957 அக்டோபர் மாதத்தில் அவர் பேசிய பேச்சுக்களில் பெரிதும் காரம் இருந்தது. தனது காலத்திலேயே ஜாதியத்தை ஒழித்துக் கட்டியாக வேண்டும் என்கிற அவசரம் இருந்தது, துடிப்பு இருந்தது. கூடவே இன்னொரு உத்தியும் இருந்தது. இந்தப் பேச்சுக்களைக் கேளுங்கள்
“ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன். ஜாதி ஒழிய வேண்டுமா, வேண் டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள் ‘காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன்’’ என்று. ஒன்றுமில்லாத குப்பைச் சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30-40 பேர் செத் திருக்கிறார்கள், 3,000 வீடுகளுக்குத் தீ வைத்திருக் கிறார்கள்! வெட்டி நெருப்பில் எறிந்தார்கள்! வெட்டித் தலையைக் கொம்பில் சொருகிக் கொண்டு ஆடினார்கள்! ஒன்றுமில்லாத சப்பைச் சங்கதிக்கு இம்மாதிரி செய்திருக் கிறார்கள்! நம்முடைய மக்கள் என்றென்றும் கக்கூஸ் எடுக்க வேண்டியது, தெருக்கூட்ட வேண்டியது, உடலு ழைப்புச் செய்து சூத்திரராகவே இருப்பது, நாம் கைகட்டிக் கொண்டு சும்மாவே இருப்பதா?. . .
“பஸ்சில் ஒரு பார்ப்பனர் ‘முத்துராமலிங்கத்தேவர் உயர்ந்த மனிதர், அவரைக் கைது செய்தது அக்கிரமம்‘ என்று பேசியதாகச் சொன்னார்கள். காரணம் என்ன? முத்துராமலிங்கத் தேவர் யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாது. ஆனால், எதற்குப் பேசுகிறான்? அந்த எதிர்ப்பு காமராசருக்குச் சேரும். காமராசரை அவர்களுக்குப் பிடிக்கவில்லை அதனால் பேசுகிறார்கள். இந்த இனப் பற்றை நாம் உணர்ந்து பழக வேண்டும். . ...
“இப்போது முதுகுளத்தூரில் ஜாதிப் பெயரால் சண்டை நடக்கிறது. சிலர் எலெக்ஷனால் சண்டை என்கிறார்கள். எலெக்ஷனும் ஜாதி அடிப்படையில் நடந்து பல கொலை கள், பல கிராமங்களைத் தீக்கிரையாக்கி இருக்கிறார்கள்! ஆதி திராவிடர்களுக்குப் பலமேது? அவர்கள் எவ்வளவு தூரம் பலத்துடன் சண்டை போட்டிருப்பார்கள்? ஏதாவது ஓரிரண்டு பேர் அடித்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக் கானவர்கள் உதை வாங்கித்தான் இருப்பார்கள். போலிஸ் சுட்டதால் 5 பேர் செத்ததாகக் கூறிக் கலகம் செய்கிறார்கள். 5 பேரைச் சுட்டே இருக்கட்டும். அதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கலவரம் அடக்கப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லி ஆகா சுட்டுவிட்டார்கள், காமராசரை ஒழிக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்?
“ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது, கேட்க உரிமையில்லை என்றால் இது என்ன சுயராஜ்ஜியம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனுக்குக்கூட ஒரு சிறுகாயம் என்னால் பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வள வுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்ப வன் நான். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?”
1957 செப்டம்பரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத் தூர் பகுதியல் பெரும் கலவரம் வெடித்தது. பிராமணியம் ஊட்டியிருந்த ஜாதி வெறியின் மிச்சசொச்சம் பிற்படுத்தப் பட்டவரைத் தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கச் சொன்னது. தங்கள் உரிமை கேட்டு சற்றே அவர்கள் தலை நிமிர்ந்தால் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடச் சொன்னது. பிரதான எதிரி பிராமணியமே என்பதை அறியாது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடித்துக் கொண்டார்கள், பிராமணிய வாதிகள் உள்ளூரச் சிரித்தார்கள். இதை உணர்ந்து கொண்ட பெரியார் பிராமணியத்திற்கு எதிராக இடைத் தட்டு, அடித்தட்டு ஜாதியினர் என்று சகலரையும் திரட்டப் பார்த்தார். அதற்காகவே, அரசியலமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்தினார். அதில் பங்கேற்க வருமாறு மக்களை அறைகூவி அழைத்தார். இந்த அளவுக்குச் சரியே. கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தாழ்த்தப் பட்டவரே என்பதை உணர்ந்து, அவர்கள்பால் ஆதரவு காட்டியதும் சரியே. ஆனால், பிராமணிய எதிர்ப்பாகப் புறப்பட வேண்டிய போராட்டம் தனிமனித பிராமணர்கள் மீதான தாக்குதலாகப் திசைமாறும் ஆபத்தும் இந்த அறைகூவலில் இருந்தது. “வெட்டாமல், குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது” என்றால் யாரை? அது தனி மனித பிராமணர்களேயே எனப் புரிந்து கொண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயம் இருந்தது, விஷயம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகத் தேயும் நிலைமை இருந்தது.
விளைவு என்னாயிற்று என்றால், எந்தக் காமராஜர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தாரோ அந்த ஆட்சியே பெரியார் மீது வரிசையாகக் குற்றச்சாட்டுகள் சொன்னது, வழக்குப் போட்டது. அந்த ஆண்டு டிசம்பரில் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்தது. 1958 மே மாதத்தில்தான் அவர் விடுதலையானார்.
தேசப்பட எரிப்புப் போராட்டம்
1960 ஜூனில் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் நடத்தினார் பெரியார். இதில் 2000த்துக்கு மேற்பட்ட தி.க.வினர் பங்கு கொண்டார்கள். போராட்டத்தின் கோரிக்கை தனித் தமிழ்நாடு. திராவிட நாட்டைக் கைவிட்டு இதை வலியுறுத்த ஆரம்பித்தார் பெரியார். மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகும் திராவிட நாடு கேட்டு வந்த அண்ணாவிடமிருந்து வேறுபட்டார். ஆனால், தமிழ்த் தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தால் - உதாரணமாக இந்தி தேசிய இனத் தால்-ஒடுக்கப்படுகிறது, சுரண்டப்படுகிறது, ஆகவே பிரிந்து போகிறோம் என்று சொல்லவில்லை. மத்திய அரசில் பிராமணியம் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆகவே பிரித்துக் கொடு என்று கேட்டார். பிராமணிய ஆதிக்க மானது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தி பேசும் மக்கள் உள்ளிட்ட சகல தேசிய இனத்தவருக்கும் கெடுதல் செய் தது. இந்தியாவின் சகல தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின், மாதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சினை அது. இந்த நிலையில் பிரிவினை அதற்குத் தீர்வும் அல்ல, அது தமிழர்கள் மத்தியில் எடுபடப் போவதும் இல்லை. இது பெரியாருக்குத் தெரியாது என்றும் கூற முடியாது. ஓர் அதிர்ச்சி வைத்தியமாகவே, அதிரடிப் பிரச்சாரமாகவே தனிநாடு கோரிக்கையையும், தேசப்பட எரிப்பு போராட்டத்தையும் முன்னிறுத்தினார்.
அந்த ஆண்டு மே இறுதியில் “விடுதலையில்” பெரி யார் எழுதிய தலையங்கங்கள் இதை உறுதி செய்கின்றன. ஒன்றின் தலைப்பு “இந்திய யூனியன் ஆட்சி என்பது (இந்து) மதப் பாதுகாப்பு ஆட்சியே”. மற்றொன்றின் தலைப்பு “பட எரிப்பு அரசியல் போராட்டம் அல்ல; அது ஓர் இனப் போராட்டமே ஆகும்”. இவற்றிலிருந்து சில பகுதிகள்
“இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன - மனுதர்மவாதிகளின் ஆட்சியில் இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் ‘மதம் மனிதனது சொந்த விஷயம்‘ என்ற பாவனையில் கூட அரசாங்கம் நடப்ப தில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஓர் இடத்திலாவது இது மதச் சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதா? மதச் சார்பு ஆட்சி என்ப தற்கு நமது அரசமைப்புச் சட்டமே ஆதாரம். மதப் பாது காப்பு என்றால் மனுதர்ம - வருணாசிரமப் பாதுகாப்பு அல்லாமல் வேற என்ன?”
மூல அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சுயாதிபத்திய ஜனநாயகக் குடியரசு” என்று மட்டுமே இருந்தது என்பதை அறிவோம். 1975- 77 அவசரநிலை ஆட்சி காலத்தில்தான் “மதச்சார்பற்ற” (Secular) எனும் சொல் சேர்க்கப்பட்டது. எனவே அந்த 1960ல் இதை இடித்துரைத்தது மிகச் சரியான நிலைபாடு.
“இந்திய உலகண்டத்தின் ஆரம்பகால சரித்திரம் தொட்டே நம் நாட்டில் ‘அரசியல் போராட்டம்‘ என்ற ஒன்று நடைபெற்றதாகக் காணப்படுவதே இல்லை. நடை பெற்றவை எல்லாம் மத இயல், சமுதாய வகுப்பு இயல், இனப் போராட்டங்களே ஆகும். 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலவரமானது உண்மையில் வெள்ளையனு டைய ஆதிக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படு வது கூடாது, அரசியல் ஆதிக்கம் அந்நியரிடத்திலா இருப்பது என்ற கருத்தில் நடைபெற்றது அல்ல. லார்டு டல்ஹவுசியாவின் சீர்திருத்தங்கள் ஒரு சிலரான பார்ப்பனர்களுக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல் வியை நாடெங்கும் எல்லோரும் படித்துப் பயன்பெறும் வண்ண ம் பரப்பிய முறை, ரயில் நீராவி எஞ்சின், தந்தி சாதனம் போன்ற விஞ்ஞானச் சாதனங்களைப் புகுத்தி யமை என்பவை. இவை கண்டு வைதீக மேல்ஜாதிக் காரர்கள் வெகுண்டார்கள். இத்தகைய அறிவு வளர்ச்சி எங்கே தங்கள் ஆதிக்கத்திற்கு உலை வைத்துவிடுமோ என்று அஞ்சி, எதைச் செய்தால் இவற்றை ஒழித்துக் கட்டலாம் என நினைத்து, அதைக் கண்டு பிடித்து, பாமர மக்களான சிப்பாய்களாக இருந்த ஜாதி மத வெறியர்களை ‘ உங்கள் சாதியும் மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான்’ எனக் கூறி வெள்ளையர்களை எதிர்க்கச் செய்தனர்”. 1857 கிளர்ச்சி பற்றிய ஒரு தெளிவான மதிப்பீடோடு பெரியார் இருந்தார் என்பதை இது புலப்படுத்துகிறது.
“இன்றைய டில்லி ஆட்சி பார்ப்பன மேல் ஜாதிக் காரர்கள் ஆட்சியே... இந்து லாவின்படி பவுத்தர்களையும் இந்துக்களாக எண்ணி அதையே அவர்களுக்கும் பயன் படுத்திய போதிலும் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வடநாட்டில் புத்த மார்க்கத்தைத் தழுவினார்கள் என்றவுடன், அவர்களை அதற்காகப் பழிவாங்கும் தன்மையில் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தந்து வந்த கல்வி, உத்தியோகச் சலுகைகள் இனி தரப்பட மாட்டாது என்று இந்திய யூனியன் மறுத்தது இது இந்து மத சர்க்கார்தான் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு”.
அம்பேத்கரால் பவுத்தத்திற்கு மாற்றப்பட்ட தாழ்த் தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் மத்திய அரசால் மறுக்கப்பட்டன என்பதை அறிவோம். இது எத்தகைய அநியாயம் என்பதற்கு ஓர் அருமையான வாதத்தைப் பெரியார் முன்வைத்ததை நோக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்துக்கள் என் பதில் பவுத்தர்களும், சமணர்களும், சீக்கியர்களும் அடங் குவர் எனச் சொல்லப்பட்டது. அதனால் அவர்களுக்கும் இந்து சட்டமே செல்லும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் அந்த மதங்களுக்கு மாறினால் அவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமை கிடையாது எனப்பட்டது. இது சுத்தமான முரண் அல்லவா என்று கேட்டார் பெரியார். பிற்காலத்தில்தான் அவர்க ளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்படி அரசானது மதச்சார்பற்றதாக இல்லை, பிராமணிய ஆட்சியாக இருக்கிறது என்று சொல்லித்தான் தனித்தமிழ்நாடு கேட்டார் பெரியார். இதுவொரு மிரட்டல் உத்தியே என்பதைச் சொல்லத் தேவையில்லை..
.- தொடரும்
No comments:
Post a Comment