விடுதலை போர்ப் பிரச்சார ஏடானது ஏன்?
கி.வீரமணி
விடுதலை நாளேட்டினை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டு வந்தபோது, இரண்டாவது உலகப் போர் (1939-45) மூண்டது.
பிரிட்டனை ஜெர்மனியும், ஜப்பானும் எதிர்த்தன. பிரிட்டன் மற்றும் அதனை ஆதரித்து அந்த அணியில் இருந்த நாடுகளை நேச நாடுகள் என்றும், ஜெர்மனி, ஜப்பான் போன்ற இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகளை அச்சு நாடுகள் என்றும் அழைப்பது வாடிக்கை.
பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து, இந்திய நாட்டில் உள்ள தேசிய காங்கிரஸ் யுத்தத்திற்கு பணம் கொடுக்காதீர்; யுத்தத்திற்குச் செல்வதற்குப் பட்டாளத்திற்கு ஆள் எடுக்கிறது அரசு; அதில் சேராதீர்கள்! என்று தீர்மானம் போட்டார்கள். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாகவே நாம் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே நடந்துகொண்டனர்.
காங்கிரஸ்காரர்கள் இதனை வைத்து, தந்தை பெரியார் அவர்களையும், அவர்தம் இயக்கத்தினரையும், வெள்ளையர்களுக்கு வால் பிடிப்பவர்கள், பிரிட்டிஷ்தாசர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வதுண்டு. தேசியவாதிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான தோழர் பி.இராமமூர்த்தி போன்றவர்கள்கூட இதனை வைத்து தந்தை பெரியாரின் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த முயன்றதும் உண்டு.
தந்தை பெரியார் அவர்களும் அவர்தம் இயக்கத்தினரும் இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு ஆதரவாகவும், அச்சு நாடுகளான ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாட்டுத் தலைவர்களின் முயற்சியை முறியடிப்பதில் முழு மூச்சாகவும் அன்றைய வெள்ளைக்கார அரசுக்கு ஒத்துழைப்புத் தந்தது நூற்றுக்கு நூறு உண்மை! அதோடு. விடுதலை நாளேட்டினை, அரசுக்குக் குத்தகைக்கு (lease) விட்டது. யுத்தப் பிரச்சார ஏடாகவும் அது யுத்தம் முடிகிற வரையில் நடந்து வந்ததும் உண்மையாகும்!
ஏன் அந்த நிலை எடுத்தார் தந்தை பெரியார்? எதற்காக விடுதலை நாளேட்டினை பிரிட்டிஷ் அரசுக்குத் குத்தகைக்கு விட்டார் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஆரிய இனத்தின் மேன்மைக்காகவே இட்லரின் யுத்தம்
ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ் கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித் தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும்; ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்று அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம். ஆரிய வர்த்தம், சமஸ்கிருதக் கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட!)
பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்திருத்தங்கள், சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவைகளைச் செய்து ஆரிய மனு தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேச பக்தி என்ற பெயரால் மனுபக்தி, பார்ப்பன மேலாண்மையை பாதுகாக்கச் செய்தனர்! ஜப்பான்காரன் பர்மாவைப் பிடித்து கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர், மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் அந்த இரண்டு மொழிகளையும் படிக்கவே ஆரம்பித்தனர் என்பது யாருக்குதான் தெரியாது? 'விடுதலை' ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்களே அரசு ஏடாக அது தொடர்ந்தபோதும் ஆசிரியராகத் தொடர்ந்தார். நமது பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தளபதி அண்ணன் அழகிரி அவர்கள் எல்லாம் போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists) நியமனம் பெற்றே பணி புரிந்தார்கள்.
இட்லர் வெற்றி பெற்று இருந்தால்...
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய இட்லர் வெற்றிபெற்று இருந்திருப்பாரேயானால், இந்தியாவுக்கு
சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக்கொள்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்களுக்கும் அவர்தம் இயக்கத்திற்கும் மக்களிடையே உள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி, நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கு போர்க் கால நிகழ்வுகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்றைய வெள்ளைக்கார கவர்னர், கவர்னர் ஜெனரல்கள் எல்லாம்கூட கேட்டுக்கொண்டனர். அவர்களது தயவுக்காகவோ - அதிகாரத்திற்காகவோ அய்யா அதனை ஏற்கவில்லை.
தனது கொள்கையான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தை நாட்டைக் காப்பாற்ற இது சிறந்த வழி என்பதை, எதையும் முன்னோடியாக சிந்திக்கும் தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார்கள்.
அக்கறை உள்ளவர் செயல் எது?
பாமர மக்கள் வழியிலே சென்று சிந்திப்பதைவிட, அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று அறிவுறுத்தும் வகையிலேயே அவரது அணுகுமுறைகள் எப்போதும் அமையும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்ததே சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுதான் உண்மையான நாட்டு நலத்தில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ள ஒரு செயல்! 'விடுதலை' ஏன் அரசு ஏடாக ஒரு காலகட்டத்தில் வெளிவந்தது என்பதற்கான மூலகாரணம் இப்போது விளங்குகிறதா?
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம் ஜெர்மனி வீழ்ந்ததன் பின்னரே, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
அதன் 75-ஆம் ஆண்டு விழா இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹிட்லரின் வீழ்ச்சியே
உலக நாடுகளில் இன்று துளிர்த்திருக்கும்
ஜனநாயகச் சிந்தனைக்கும் மூன்றாம் உலக நாடுகளின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது.
இந்தப் பின்னணியில், இரண்டாம் உலகப் போருக்கான பிரச்சார ஏடாக விடுதலை செயல்பட்டது ஏன் என்பதைக் குறித்து விவரிக்கிறது
இந்தக் கட்டுரை.
No comments:
Post a Comment