'விடுதலை' ஏடு 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திட்ட நாளான ஜூன் 1இல் காணொலி மூலம், நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர் வாசகர்களுடன் 'விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் உரையாடியது, கலந்து உறவாடியது - இதழியல் துறையில் இதுவரை நிகழாத ஒரு முன் மாதிரியாக வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்து விட்டது.
தமிழர் தலைவரின் உரையிலும், வாசகர்களின் கேள் விக்கு பதில் விளக்கம் அளித்ததிலும் ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையைத் தூண்டக்கூடிய விளைச்சல்கள் நிகழ்ந்தன.
ஒன்று: தமிழர் தலைவர் பேசும் பொழுது, 'விடுதலை' யின் வெற்றி வாசகர்களின் உழைப்பில் உள்ளது எனக் குறிப்பிட்டார். உலகின் அரசியல் பொருளாதாரத்தை உலுக்கிப் போட்ட பொதுவுடைமைத் தத்துவம், உழைப்பு (labour), மூலதனம் (capital) ஆகிய இரண்டையும் மய்யமாக வைத்து நடைமுறையாவதாகும். உழைப்பு, மூலதனம் என்ற சொல்லாடல்களுக்கு புத்தாக்க விளக் கங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. 'மூலதனம்' என்பது நிதி சார்ந்த 'மூலதனத்தை' மட்டுமே குறித்த நெடுங்காலச்சிந்தனையிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பரிமாணங்களுடனும் 'மூலதனம்' இருக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. சேவை சார்ந்த தொழில்களில், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் மன மகிழ்ச்சி, மன நிறைவு ஆகியவைகளை வழங்கிட 'விரைந்து' சேவைகள் வழங்கப்பட வேண்டும். அத்த கைய தொழில்களில் விரைந்து சேவை வழங்குவது ஒரு விதமான மூலதனமாகக் கருதப்படுகிறது. Speed is the Capital என விரைந்து சேவை வழங்குவது கண்ணுக்கு புலப்படாத வலுவான மூலதனமாக உருவாகி வருகிறது.
தமிழர் தலைவரின் உரையில் 'விடுதலை' வாசகர் களின் உழைப்புதான் 'விடுதலை'யின் வெற்றிக்குக் காரணம் என கூறும் பொழுது 'உழைப்பு' எனும் அடிப் படைக் கூறு 'ஏடு வாசிப்பதும்' ஒருவித உழைப்பே என பரிமாணம் பெறுகிறது. தொழிலாளர்களின் உழைப்பு, உற்பத்தி சார்ந்தது. 'விடுலை' படிக்கும் வாசகர்களின் 'உழைப்பு' கருத்தியல் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிப்பதாகும். புத்தகம் படிப்பதும், ஏடுகள் வாசிப்பதும் ஒரு வித 'உழைப்பே - மானுடத்தை மேம்படுத்தும் உழைப்பு எனும் அடிப்படைக் கூறுக்கு புதிய விளக்கம் அளிப்பதாக இருந்தது தமிழர் தலைவர் ஆற்றிய உரை..
இரண்டு: தொடக்கக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத தந்தை பெரியார் உயர் கல்வி நிலையங்களும், பல்கலைக் கழகங்களும் உருவாக்காத சிந்தனைச் சொல்லாடல்களை நடைமுறைப்படுத்தினார். பள்ளிகளில் பாடம் படிக்காத பெரியார், பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டத்தில் பாடமாக இடம் பிடித்தார் - இதைப் புலப்படுத்தும் விதத்தில் தந்தை பெரியார், இந்த நாட்டிற்கு கிடைத்த அரசியல் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது நமக்கு வேண்டுவது, 'அடிமை விடுதலையா? சுதந்திர விடுதலையா?' என்று கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார். எவ்வளவு சிறப்பான சொல்லாடல்களை தந்தை பெரியார் எளிய முறையில், கருத்துச் செரிவுடன் பயன்படுத்தி உள்ளார்!
ஆங்கில மொழிக் குறிப்பில் எதிர்மறையான இரண்டு சொற்களைச் சேர்த்து முரண்தொடையாகப் (oxymoron) பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அழகும் அவ லட்சணமும் என எதிரான சொற்களைச் சேர்த்து 'pretty ugly' எனும் ஆங்கிலச் சொல் உண்டு. எடுத்துக் காட்டுகள் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தந்தை பெரியார் இலக்கணக் குறிப்பு, மொழிக் குறிப்பு ஏதுமின்றி கருத்து, சிந்தனை அடிப்படையில் அத்தகைய குறிப்புப் பயன்பாட்டை வழங்கியுள்ளார்; கையாளுகிறார். விடுதலையும், அடிமைத்தனமும் எதி ரானவை. இரண்டையும் சேர்த்து 'அடிமை விடுதலையா?' எனக் கருத்து வளமிக்க சொல்லாடலைப் பயன்படுத் தியுள்ளார். 'சமூக விடுதலையை மறுக்கின்ற அரசியல் விடுதலையால் ஆகப் போவது ஒன்றுமில்லை' என்னும் கருத்து புலப்படும் வகையில் பேசியிருப்பது மொழி அறி ஞர்கள் கூட நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது.
அடுத்துக் கூறுகிறார் தந்தை பெரியார் - 'சுதந்திர விடுதலையா?' சுதந்திரம், விடுதலை ஆகிய சொற்கள் மேலோட்டமாகப் பார்க்கையில் ஒரே வித பொருளைக் குறிப்பதாகத் தோன்றும். சமூக விடுதலையை உள்ளடக் கிய முழுமையான விடுதலையை 'சுதந்திர விடுதலை' என தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். ஜாதி அமைப்பில் உருவான ஏற்றத் தாழ்வுகளை, சமூக இழிவு, சமூக சமத்துவமின்மை, சமூக அடிமைத் தனத்தை, உள்ளடக்கிய விடுதலையைக் குறிப்பிட்டு, 'சுதந்திரம்' பெற்றாலும் அடிமைகளுக்கான விடுதலை அதில் இருக்காது எனும் பொருளில் 'அடிமை விடுதலை' சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் தந்தை பெரியார்.
இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக நிலவிய, இன் றும் அதன் தாக்கம் தொடருகின்ற சமூக நிலைமையை இரண்டு சொல்லாடல்களை வைத்து 'அடிமை விடுத லையா?' சுதந்திர விடுதலையா?' என ரத்தினச் சுருக்கமாக பாமரருக்கும் புரியும்படி பேசிட தந்தை பெரியாரால்தான் முடியும்.
'விடுதலை' விளைச்சல் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை தந்த சிந்தனை விளைச்சலுக்கு நன்றி. தந்தை பெரியார் தந்த தத்துவத்தை தமிழர் தலைவரின் விளக்கத்துடன் ஆழ்ந்து கேட்கும் பொழுது பல வித சிந்தனை ஊற்றுகள் வெளிக் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. நன்றி!
- வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment