முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
சிறுதொண்டன் கதை
பேசும் பொற்சித்திரமாம், பிள்ளைக் கனியமுதாம், பெற்ற பிள்ளை சீராளனையே சிவனாரின் சிவவேடம் கேட்டருளியபடி, சிறுவன் சீராளனைக் கண்ட துண்டமாக வெட்டி வேக வைத்துப் படைத்து பக்திப் போதையில் திளைத்த சிறுத்தொண்டரைக் காண்கிறோம்!
இதனைப் படித்துப் படித்துப் பாடிப் பாடிப் பரவசமடைந்து மெய்சிலிர்த்து விதிர்விதிர்த்து வியர்த்து அங்கமெலாம் பொங்கிப் பூரித்து ஆலவாய் அப்பனின் அருட்சோதனையை எண்ணி எண்ணி மகிழ்ந்தாடும் மக்களையும், பக்தர்கள் என்ற நிலையிலே பார்க்கிறோம்! பரிதாபம்!
ஆண்டவனுக்காக என்று சேமித்து வைக்கப்பட்ட நெற்களஞ்சியத்திலிருந்து, பஞ்ச காலத்தில் பசியால் பரிதவித்த ஆண்ட வனது அருட் குழந்தைகளாம் மக்கள் எடுத்துப் புசித்தனர். பிறகு, வளமான நாட்களில் திரும்பச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்துடனே என்பது கேட்டுப் பெறாது, சிவன் சொத்தைத் தின்றனர் என்பதற்காக உற்றார், உறவினர், பெண்டு பிள்ளை களை ஏன்? பச்சைக் குழந்தை யைக் கூட வாளால் வெட்டிச் சாய்த்துப் பக்தியின் எல்லையை (போதையை) காட்டிக் கடைசியில் கைலை வாசனின் ‘கடாட்சம்’ பெற்ற கொலைக்கஞ்சா கோட்புலி நாயனாரையும் நம்மால் மறக்க முடிவது இல்லையே!
கண்ணைப் பறித்து அப்பின கண்ணப்பர், பேயாகி உடலம் தேய்த்து உருக்குலைந்த காரைக்காலம்மை போன்ற நாயனார்களை யும், அதிகத் துன்பத்துக்களாகிய அப்பரையும், சுலபத்திலே சிவனருள் பெற்ற சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோரின் சிவத் தொண் டையும் சீர்தூக்கிப் பாராமலிருக்க முடிய வில்லையே நம்மால், நமது அறிவால் - ஆராய்ச்சியால்!
விநாயக புராணத்திலே, எண்ணத் தொலையாத விளை யாட்டுக்கள், வேடிக்கைகள், ஆண்டவரின் பிறப்புகள் பற்றி!
கந்தபுராணத்திலே வரும் ஆறுமுக அவதாரமும், அதற்காக மன் மதன் சிவனாரின் மீது ஏவிய மன்மத பாண மும், அதனால எரியுண்ட மன்மதனின் சோக முடிவும், அசுரர்களை அழித்த கதையும், இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் காணக் கிடக்கின்றன.
வேண்டுமென்றே நயவஞ்சகமாகத் தனது பொருளைப் பறித்துக் கொண்டு பொய்யனாக்க முயன்றதற்காக அர்த்த மற்று அறமுமற்று கட்டுப்பட்டுக் கெட்டழிந்த அரிச்சந்திர னின் கதை யாருக்குத் தேவை? இன்னும் என்று ஏன் கேட்கக் கூடாது?”
கலைஞரின் புராண புரட்டல்களைத் தோலுரித்த உண் மையை உரத்துச் சொல்லும் பகுத்தறிவு வினாக்கள் - விளக்கங் கள் இப்படி ஏராளம் படைத்துள்ளமை தொடர்கிறது... போது மென்று நினைத்து நிறுத்திட வேண்டி உள்ளது. எந்த கடவுள் பக்தரும் கலைஞரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது!
ஆபாசக் களஞ்சியம், அர்த்தமற்ற அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும், மனித தன்மைக்கும் பொருந்தாத விபரீத உடலுறவுகள், உற்சாகக் களியாட்டங்கள், கேளிக்கைக்கோலாகலங்கள் இவைகள்தானே பெரும் பாலான புராணங்கள் என்று நாட்டிலே கூறப்படுவன! வேறென்ன?
எதற்கெடுத்தாலும், எந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கும் ஒரு புராணம், பழைய கதை இருக்கத்தானே இருக்கிறது இந்த நாட்டில்! மக்களின் உள்ளங்களிலே பதிந்து போதையேறிக் கிடக்கிறதே!
காக்கை கறுப்பு ஏன்? அதற்கொரு புராணம்! யானைக் குத் துதிக்கை இருப்பது ஏன்? அதற்கொரு சாமிக்கதை கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்? ஒரு புராணம்! அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப்பானேன், அதற்குமொரு கதை - இராமனுடன் சம்மந்தப்படுத்தி!
ஆத்திக உலகத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார் கலைஞர் தமது எழுத்தாயுதத்தால்! இந்த பகுத்தறிவு பாய்ச் சலுக்கு பக்தி உலகம் பதில் சொன்னதா? இல்லை... இல்லை...!
இராஜகோபாலாச்சாரியார் முதல்வர் வாய்ப்பைப் பயன் படுத்தி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த போது - அரை நேரம் படிப்பு - அரை நேரம் ஜாதித் தொழில் என்று சொன்ன போது - நிதி நெருக்கடி என ஆயிரமாயிரம் பள்ளிகளை மூடிய போது கலைஞர் உள்ளத்தில் எழுந்த கோபம் எரிமலையென வெடித்தது. போர் முரசு கொட் டினார். நாட்டு மக்களை குலக் கல்வித் திட்டத்துக்கு எதிராக - குல்லுகப் பட்டரின் சூழ்ச்சிக் கல்வித் திட்டத்துக்கு எதிராக அணி திரட்டிட ஆர்த்தெழுந்தார். ஆவேசத்துடன் களம் கண்டார். இரத்த நாளங் களில் முறுக்கேற்றிடும் அவரின் பேச்சைக் கேளுங்கள்:
“நாடாண்ட இனமல்லவா திராவிட இனம்? இமயத்தில் கொடி பொறித்த மன்னர் மரபில் வந்தவரல்லவா நாம்? கடாரம் வென்ற தமிழர்கள் அல்லவா நாம்? போர்த் திறம் மிக்கவர்கள் அல்லவா நாம்? களம் பல கண்டவர்களல்லவா நாம்? கடல் கடந்து வாணிபம் செய்தவர்களல்லவா நாம்? கடலில் முத்துக் குளித்து செல்வத்தைப் பெருக்கியவர்க ளல்லவா நாம்? கலை வளர்த்த வர்களல்லவா நாம்? நாகரிகத்தில் உலகுக்கு வழிகாட்டியவர் களல்லவா நாம்?
அன்று பிச்சை கேட்க நம்மிடம் இச்சகம் பேசியவர்கள், இன்று நமக்கு இதோபதேசம் செய்கிறார்கள்! நம்முடைய உப் பைத் தின்று உடலை வளர்த்துக் கொண்டவர்கள், நம்முடைய தயாள குணத்தால் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவர்கள், நம்முடைய பெருந்தன் மையால் நிலையில் உயர்ந்தவர்கள், இன்று உயரத்தில் அமர்ந்து கொண்டு ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார்கள்! அதுமட்டுமா? தாங்கள்தான் வாழப் பிறந்தவர்கள் - ஆளப் பிறந்தவர்கள், நாமெல் லோரும் உழைக்க வேண்டியவர்கள் என கட்டளைப் பிறப்பிக் கின்றனர். பாராண்ட இனத்தைப் பார்த்து பராரியாக வந்த இனம் பரிகாசம் செய்கிறது. நாடாண்ட சமுதாயத்தை நாடோடிக் கூட்டம் நையாண்டி செய்கிறது! ஆம்! நம்மை எல்லாம் துச்சமென மதிக்கிறது ஆரியமும் அதன் தலைவர் ஆச்சாரியாரும்!
ஆச்சாரியாரின் ஆணவ பதில்!
கேட்டார்கள் அரசியல் நாணயமுள்ளவர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், “ஆச்சாரியாரே, இத்தனை பேர்கள் எதிர்க் கிறார்கள்; யாருடைய ஆதரவும் காணோமே உங்கள் திட்டத்திற்கு; யார் பேச்சையும் கேட்காமல் ஏன் கொண்டு வருகிறீர்கள் இந்த திட்டத்தை?” என்று.
பதில் சொன்னார் ஆச்சாரியார்! அரசியல் சரித்திரத்தில் இதுவரை யாரும் கேட்டிருக்க முடியாத பதில்! என்ன அது?
“நான் யாரைக் கேட்க வேண்டும்? என் மனதில் பட்டது, செய்தேன். சங்கரரும், இராமாநுஜரும் தங்கள் மதக் கோட் பாடு ளை மக்களிடம் கூற, பரப்ப, யாருடைய ஆலோ சனையைக் கேட்டார்கள்? ஆண்டவன் செய்தியாக அவர்கள் எண்ணத்திலே தோன்றியதைச் சொன்னார்கள். அதைப்போல்தான் நானும்.”
இதற்கு கலைஞரே பதில் சொல்கிறார்... “அன்று நம் தயவை நாடி வந்த நாடோடிக் கூட்டமாக இருந்ததால், சாகசம் பேசி நம்மைப் பணிய வைத்தது. இன்றோ ஆட்சி பீடமே அதன் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இச்சக வார்த்தைகள் அதற்குத் தேவைப் படவில்லை. அதிகார மமதையோடு கட்டளையே போடுகிறது. ஆம், சொந்த நாட்டினருக்கு, வந்த கூட்டம் உத்தரவிடுகின்றது. பார்த்துக் கொண்டு தான் இருக்கி றோம். பரபரப்பு அடையவில்லை - நம் பண்புக்கேற்ப!”
இப்படியாய் ஆரியத்தை அலறவிட்டவர் டாக்டர் கலைஞர். இன்றைக்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை அன்றைக்குத் தொலைநோக்கோடு எடுத்துப் பேசிய தலைவர் அவர். அவரின் பகுத்தறிவுப் பான்மை தமிழர் சமுதாயத்தை தலைநிமிர வைத்தது; தந்தை பெரியாரின் அடியொற்றி தமிழர் நல திட்டங்களை ஆட்சி அதிகாரத் திலே இருந்த போது சாதிக்க வைத்தது; நெருக்கடிகள் - ஏளனங்கள் - இழிமொழிகள் அவரை சூழ்ந்து தாக்கிய போதும் துணிச்சலோடு திராவிட சமுதாயத்தின் உரிமை களைப் பற்றியே சிந்தித்து செயல்பட வைத்தது.
அதனால்தான் “தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்றாலும், இரண்டையும் சமமாகக் கருதுபவன் தான் என் தம்பி கருணாநிதி” என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப் பட்டார் கலைஞர்.
“பகுத்தறிவாளர் - நாத்திகர்” கலைஞர் உடலால் மறைந்து இருக்கலாம். உள்ளத்து உணர்வால் வாழ்கிறார் என்பதே உண்மை. வாழ்க டாக்டர் கலைஞர்!
- முற்றும்
No comments:
Post a Comment