பெரியார் கேட்கும் கேள்வி! (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (3)


“கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவா யில்லை. செய்கையில் செய்து காட்டி - அதாவது கடவுள் விபச்சாரத்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாக வும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக் கொண்டு போவதாகவும், உற்சவங்கள் செய்துக் காட்டி அவைகளுக்காக பல கோடி கணக்கான ரூபாய்களும், மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும், உணர்ச்சியும் பாழாக்கப் படுகின்றன. இக்காரியங்கள் 20ஆம் நூற்றாண்டில் செய்யக் கூடியவையா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு அவைகள் மேற்கண்ட மாதிரியான காரியங்களைச் செய்ததாக புராணங் களையும், இதிகாசங்களையும் கற்பித்துக்கொண்டு திரிவது பற்றி மனி தனுக்கு வெட்கம் வரவேண்டாமா?


இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல் வது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா? கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்ளு வானா?


இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கின்ற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்ளு கிறதா?


கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் - சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம், மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கிறோமே அவை எதற்கு?


சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்னாயிற்று? என்று கேட்க வேண்டாமா?


விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக் கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப் போய் விட்டதா? என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷாவருஷம் கல்யாணம்? கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு - ஆடம்பரம் - பணச் செலவு ஏன்?


சாமி கல்யாண சமாரதனைச் சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா?  கண்டபடி பதார்த்தங்களைப் பாழாக்குவது ஏன்?


இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன?


நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 95 பேர் தற்குறிகள். நமது நாடு உலகிலேயே ஏழ்மை நாடு என்கின்றோம். இப்படிப்பட்ட நம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?


- தந்தை பெரியார்


(1927 - சுயமரியாதை இயக்கத்தைத்


தோற்றுவித்தது ஏன்?)


- ‘மணியோசை’


No comments:

Post a Comment