ஆந்திர நாத்திக அறிஞர் கோபராஜு ராமச்சந்திர கோரா (1902-1975) நிறுவிய நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ. விஜயம் உடல் நலக் குறைவு காரணமாக 22.5.2020 அன்று காலமானார். மறைந்த விஜயம் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது. 31.5.2020 அன்று மாலையில் தொடங்கி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மறைந்த விஜயம் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்; வீர வணக்கம் செலுத்தினார்.
தமிழர் தலைவரின் வீர வணக்க உரை
தமிழர் தலைவர் தாம் ஆற்றிய உரையின் பொழுது குறிப்பிட்டதாவது:
நாத்திகப் போராளி விஜயம் அவர்களது மறைவு நாத்திகர் மய்யத்திற்கு மட்டுமின்றி, உலக நாத்திகர் குழாமிற்கே பேரிழப்பாகும். ஆந்திர நாத்திக அறிஞர் ராமச்சந்திர கோரா - சரஸ்வதி கோரா ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்த விஜயம், விஜயவாடா நாத்திகர் மய்யத்தினை திறம்பட நடத்தி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நாத்திகர் அமைப்புகள் மற்றும் அயல்நாட்டு நாத்திக அறிஞர்களுடன் தொடர்பில் இருந்து சமுதாயப் பணி ஆற்றிவந்த நல்ல பகுத்தறிவுச் சிந்தனையாளர்; செயல்பாட்டாளர் ஆவார்.
ஆந்திர நாத்திக அறிஞர் கோரா காலம் தொட்டு, தந்தை பெரியாருடனும், சுயமரியாதை பகுத்தறிவு இயக்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருகிறது விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம். கோரா அவர்களது மறைவிற்குப் பின்னரும் கோரா குடும்பத்தைச் சார்ந்தோர் நாத்திகர் மய்யத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து அதனை நல்ல முறையில் நடத்தி வரும் காலங்களிலும், இன்று வரை பெரியார் தம் இயக்கத்துடன் இணக்கமாக இருந்து வருகின்றனர். பல தலைமுறை கடந்து தொடர்ந்திடும் நாத்திக சமுதாயம் படைப்பதற்கான பணியாக இருந்து வருகிறது.
தலைமுறைகளாகத் தொடரும்
கொள்கைப் பிணைப்பு
1972ஆம் ஆண்டில் கோரா, தமிழ்நாட்டிற்கு பயணம் செய்து, தந்தை பெரியாருடனும் சேர்ந்து கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நாத்திக பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அரசின் செயல்பாடுகளில் மதம் சார்ந்த ஈடுபாடுகள் கூடாது; இந்திய அரசின் மதச் சார்பற்ற தன்மை கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என வலிமையாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தனி மனித நட வடிக்கைகளிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் களையப்பட வேண்டும். மக்கள் நலம் சார்ந்த நடைவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என இரு தலைவர் களும் மாட்டுக்கறி விருந்து, பன்றிக்கறி விருந்து என நடத்தி மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொருளற்றவை என பிரச்சாரம் செய்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.
கோரா அவர்களின் மறைவிற்குப் பின் பொறுப்பிற்கு வந்த அவரது வாழ்விணையர் சரஸ்வதி கோரா (1912-2006) காலத்திலும், அவரை சென்னை பெரியார் திடலுக்கு அழைத்து, இணைந்து பணியாற்றிய நிகழ்வுகளைப் போற்றி அம்மை யாரைப் பெருமைப்படுத்தினோம். பெரியார் இயக்கத்துடன் கொள்கைப் பாசத்தோடு அந்த அம்மையார் திகழ்ந்தார்கள்.
பின்னர் பொறுப்பேற்ற கோரா தம்பதியினரின் மூத்த மகன் லவணம் (1930-2015) அவர்களது காலத்தில் அவரது அயராத உழைப்பில் நாத்திகர் மய்யத்தின் பணிகள் சற்று விரிவடைந்த நிலையில், தொடர்ந்து பெரியார் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார். அடுத்து தலைமைப் பொறுப்பேற்று அண்மையில் மறைந்த விஜயம் (1936-2020) அவர்களது காலத்தில் நாத்திகர் மய்யம் 'விரிந்து பரந்து, கிளை பரப்பிடும் நாத்திகக் கொள்கைப் பூங்காவாக திகழ்ந்தது; பல தரப்பட்ட சமூகநலப் பணிகள், நூலாகப் பராமரிப்பு என திகழ்ந்தும் வருகிறது. விஜயம் ஏற்பாடு செய்த உலக நாத்திகர் மாநாடுகள் பலவற்றில் நாம் பங்கேற்று உரையாற்றிடும் வாய்ப்பினைப் பெற்றோம். நாம் திருச்சியில் இருமுறை நடத்திய (2011 & 2019 ஆண்டுகளில்) உலக நாத்திகர் மாநாட்டில், விஜயமும், மொத்த கோரா குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற நாத்திகர் மய்யத்தின் பவள விழா (75 ஆண்டுகள்) நிகழ்ச்சியிலும், உலக நாத்திகர் மாநாட் டிலும் கலந்து கொண்டு விஜயம் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றோம். அந்த வகையில் பெரியார் இயக் கத்தின் நீட்சியாகத் திகழும் கொள்கைக் குடும்பமே (Extended Family) விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் ஆகும்.
நாத்திகக் கொள்கை நாணயத்தின் இரு பக்கங்கள்
நாத்திகக் கொள்கையினைப் பரப்புவதில் பெரியார் இயக்கமும், கோரா இயக்கமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக செயல்பட்டு வருகின்றன. விஜயம் அவர்களது காலத்தில் அத்தகைய செயல்பாடு பெரிதும் சிறப்பாகவே நடைபெற்று வந்தது. சிந்தனையிலும் செயலிலும் பெரும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தவர் விஜயம். விஜயத்தின் அயராத உழைப்பில் நாத்திகர் மய்யம் உலகளவில் குறிப் பிடத்தக்க அமைப்பாகத் திகழ முடிந்தது. அத்தகைய பெருமையினை ஏற்படுத்தியவர் விஜயம் ஆவார்.
நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார்; இருப்பினும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது; நாம் பகுத்தறிவாளர் என்ற நிலையில் மனதை தேற்றிக் கொள்ளவேண்டும். விஜயம் தொடர்ந்த நாத்திகப் பணிகளை மேலும் வலுப்படுத்திடும் செயல்களில் ஈடுபட்டு நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும். மனித இழப்பு என்பது வானில் நிலவும் மேகங்கள் போல. மேகங்கள் கலைந்து செல்லும் இயல்பு படைத்தவை - நிலையானவை அல்ல; விஜயம் மறைவும், அதனால் ஏற்பட்ட துயரமும், நிலையானவையாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. விஜயம் மேற்கொண்ட நாத்திகக் கொள்கைப் பிரச்சாரப் பணிகளே நிலையானவை. விஜயம் விட்டுச் சென்ற பிரச்சாரப் பணியினைத் தொடர்ந்து நடத்துவதில்தான் நாம் ஆறுதல் கொள்ள முடியும்; அவை மறைந்த விஜயம் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்; விஜயவாடா நாத்திகர் மய்யம் அத்தகைய ஆக்க ரீதியான பணியில் பயணப்பட பெரியார் இயக்கம் என்றென் றும் துணையாக இருக்கும்; இணைந்து பணி புரிவோம். மக்கள் மனதில் நிலைக்கும் அறியாமை இருள் கலைந்திட பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இன்னும் வலிமையாக மேற்கொள் ளுவோம். விஜயத்தின் குடும்பத்தினருக்கும், அவரது உடன் பிறப்புகள், அவர்தம் உறவுகள், நாத்திகர் மய்யத்தின் தோழர்கள் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்து, மறைந்த விஜயம் அவர்களுக்கு வீர வணக்கத்தினை செலுத்துகிறோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
காணொலிமூலம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாத்திகர் அமைப் பின் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், கோரா குடும்ப ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களும் உரையாற்றினர்; நினைவேந்தல் செய்தியினையும் ஒளியிழை மூலம் அனுப்பி யிருந்தனர்.
பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றியோர்
வீ. குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம் - சென்னை), நரேந்திர நாயக் - (தலைவர், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA)), பேராசிரியர் தானேஸ்வர் சாகு (தலைவர், ஒடிசா பகுத்தறிவாளர் சங்கம்), முனைவர் சுரேஷ் கோதேராவ் (செயலாளர், மராட்டிய அமர்தஸ்திருத நிர்மூலள் சமிதி), பேராசிரியர் வி.பாலமோகன்தாஸ், (நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர்), ராம்மோகன் ராவ் (ஜன விஞ்ஞான வேதிகா, - அய்தராபாத்), முனைவர் பார்த்தராய் சௌத்திரி (அகர்தலா, திரிபுரா), மனோஜ் மாலிக் (மனிதநேய சுதந்திர சிந்தனையாளர் சங்கம், சண்டிகர்) ராஜா சுரேஷ், (மனிதநேய பகுத்தறிவாளர் சங்கம், ஒடிசா), பசந்தி ஆச்சார்யா, ஜி. சுமந்த் ரெட்டி, நந்தேஷ் சேனாபதி, டாக்டர் ஏ.வி. சுப்ரமணியம், சமீர் அஸ்ரப், மாலி காந்தி, ஹபீஸ் அப்துல், சுமிதா, ஷரிப் கோரா, ரஞ்சித் பெங் களூரு, மாலதி, சி.எல்.என். காந்தி, பேராசிரியர் ஆர்.வி.ஆர். சந்திரசேகரராவ் (மேனாள் துணைவேந்தர் திறந்தநிலைப் பல்கலைக் கழகம்), பேராசிரியர் ராகவலு (மேனாள் துணை வேந்தர், நாகார்ஜுனா பல்கலைக் கழகம்), ஜி.வி. சுப்பாராவ் மற்றும் பலர்.
நினைவேந்தல் செய்தி அனுப்பியவர்கள்
யு. கலாநாதன் (புரவலர், இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு), ராதாபட் (தலைவர், காந்தி சமாதான அறக்கட்டளை) பேராசிரியர் சுனந்தா சேட் (வரலாற்றுப் பேராசிரியர் & கோராவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதி யவர்), பாபு கோக்னேனி, (மேனாள் பொறுப்பாளர், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம் (IHEU)), அருட் தந்தை பி.எஸ். அமல்ராஜ் (தலைவர், ஆந்திர ஜெசூட் சங்கம்),
நினைவேந்தல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் லவணம் எழுதிய நாத்திகத் தெலுங்கு மொழிப் பாடல் இசையுடன் பாடப் பெற்றது.
நிகழ்ச்சியினை விஜயத்தின் புதல்வர் விகாஸ் கோரா ஒழுங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பினை கோராவின் பேரன் ரகத் கோரா மேற்கொண்டார். மற்றும் விஜயத்தின் உடன் பிறப்புகள் டாக்டர் சமரம், நியான்தா, மாரு, நவ் கோரா மற்றும் அவர்தம் பிள்ளைகள் என ஒட்டு மொத்த கோரா குடும்பத்தினரும், நாத்திகர் மய்யத்தின் ஊழியர் தோழர்களும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள கால கட்டத்தில் மறைந்த விஜயம் அவர்களின் நினை வேந்தல் நிகழ்வு, அறிவியல், கணினி தொழில் நுட்பத்துடன் காணொலி வாயிலாக பல்வேறு இடங்களில் இருந்துகொண்டே பங்கேற்றோர் உரை யாற்றியது, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகத் திகழுவது நாத்திகக் கொள்கையே எனப் பறைசாற்றிடும் வகையில் நினைவேந்தல் அமைந்தது. நினை வேந்தலில் பங்கேற்று உரையாற்றிய அனைத்து தலைவர் களுக்கும், நினைவேந்தல் செய்தி விடுத்திருந்த பெரு மக் களுக்கும் விகாஸ் கோராவும், கோரா குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment