- காஞ்சி அருள்பிரகாசம்
Institute of Hydraulics & Hydrology என்கின்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் பூண்டி என்னும் ஊரில் இருப்பதை பலர் அறிய மாட்டார்கள். இந்த நிறுவனம், நீர்ப்பாசனத் திட்டங்களின் முன் மாதிரிகளை உருவாக்கி, ஆய்வு செய்து, தங்களுடைய தொழில்நுட்ப முடிவுகளை அறிக்கையாக, ஆவணமாக அரசுக்குத் தரும்.
1944 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப் பட்டது பூண்டி நீர்த் தேக்கம். அப்போது அந்த இடத்தில் Irrigation Research Station என்னும் நீர்ப்பாசன ஆய்வு நிலையம் செயல்படத் துவங்கியது. தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் கீழ் செயல்பட்ட இந்த ஆய்வு நிலையம் தங்களுடைய பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலமாகத் தொழில்நுட்பத்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான ஒரு தொழில்நுட்பம்தான் ஜி வடிவ கான்கிரீட் திம்மைகளைப் பயன்படுத்தி, அணைக்கட்டுகளில் நீர்விழுப்பாதை (Spillway) யில் நீர் ஓட்டத்தின் போது உண்டாகும் நீரின் ஆற்றலை அமிழச் செய்யும் முறையாகும். பவானிசாகர் திட்டத்தில் முதல்முதலாக இம்முறை செயல்படுத்தப்பட்டது. அதையே பின்னாளில் கடல் அரிப்பைத் தடுக்க, எண்ணூர் ராயபுரம் கடற்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு நிலையம், 1973 ஆம் ஆண்டு, கலைஞர் முதல் அமைச்சராக இருந்த போது, full fledged Institute of Hydraulics and Hydrologyஆக மாற்றம் செய்யப்பட்டது. நிலநீர் மற்றும் கடல்நீர் வளங்களையும் ஆய்வு செய்யும் அளவிற்குத் தரம் உயர்த்தப்பட்டது. கணினி ஊக்கி முறைகள் மற்றும் மின்னியல் அளவை கருவிகள் கொண்ட நவீனமயமான முழுமையான ஆய்வுக் கூடமாக உருவாக்கப்பட்டது. தமிழ் நாட்டின் நீரியல், நீர்வள இயல் துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு இன்றும் சிறப்புடன் செயல்படுகிறது.
அதன் இயக்குனராக பணிபுரிந்தவர் திரு.பொ .குமாரசாமி என்பவர். இந்திய அளவில் பல்வேறு விருதுகள் பெற்ற சிறந்த பொறியாளர். பூண்டி குமாரசாமி என்ற பெயரில் பிரபலமானவர். பெரியார் கொள்கைகளில் பற்று கொண்ட பகுத்தறிவாளர். அவர் அங்கு பணிபுரிந்த காலகட்டத்தில் தந்தை பெரியார் ஒருமுறை இந்த ஆய்வுக் கூடத்தைப் பார்வையிட்டு இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பாருங்கள்! சக்கர நாற்காலியில் அய்யா அமர்ந்து இருக்கிறார். திரு குமாரசாமி அவர்கள், ஆய்வகத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார். அதை அய்யா கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகில் ஒருவர், வாளி ஒன்றை ஏந்தி நிற்கிறார். அய்யாவின் சிறுநீர்ப்பையில் பொருத்தப்பட்ட, பிளாஸ்டிக் குழாயுடன் இணைக்கப்பட்ட அந்த வாளியில் தான் சிறுநீர் சொட்டும்.
அய்யாவின் மறைவிற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். தன்னுடைய தள்ளாத வயதிலும், இதுபோன்ற ஆய்வுக் கூடங்களைக் காணவேண்டும் என்கின்ற ஆவல் அந்த கிழவருக்கு வந்ததை
எண்ணி என்னவென்று சொல்வது!
அதே காலகட்டத்தில்தான் கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் முதல்முதலாக அமைக்கப்பட்ட கணினி செயல்பாட்டைப் பார்க்கச் சென்றதைப் பலர் அறிந்திருக்கக் கூடும்.
இப்படி, சாகிற வயதிலும் சலிக்காமல் அறிவார்ந்த செயற்பாடுகளை நேரில் சென்று காணும் ஆர்வம் எத்தனை பேருக்கு இருக்கும்? விஞ்ஞானிகளின் ஆய்வுகளை அறிய அவர் காட்டிய ஆவல் உண்மையில் ஆச்சரியமானது!
அதனால்தானோ அவரை சமூக விஞ்ஞானி என்கிறோம்!
அரக்கர்களின் ஆசான், பேரரக்கர் பெரியார் என்றால் அது மிகை இல்லை!
No comments:
Post a Comment