21ஆம் நூற்றாண்டிலும் நரபலியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 8, 2020

21ஆம் நூற்றாண்டிலும் நரபலியா

புதுக்கோட்டை மாவட்டம் தைல மரக்காட்டில் 13 வயது சிறுமி கொடூரமாக நரபலி செய்யப்பட்டுள்ளார். இதற்கு அப்பெண்ணின் தந்தையே துணை போனார் என்பதுதான் அதிர்ச்சிக்குரியதாகும்.


மகளை நரபலி கொடுத்தால் செல்வம் குவியும் என்று பெண் மந்திரவாதி வசந்தி என்பவர் கூறியதன் அடிப்படையில் பெற்ற மகளையே நரபலி கொடுக்க முன் வந்துள்ளார் - பெண்ணின் தந்தையாகிய பன்னீர்செல்வம்.


இதற்கு உடந்தையாக பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவரும் இருந்திருக்கிறார். மந்திரவாதி வசந்தி, பெண்ணின் தந்தையும் உறவினரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மந்திரம், பில்லி, சூன்யம் என்ற கொடூரமான மூட நம்பிக்கைகள் மனிதர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன என்பது எத்தகைய கொடுமை!


எல்லா வகையான கொடுமைகள், கொடூரங்கள், புத்தி கெட்ட தன்மைக்கெல்லாம் ஹிந்து மதம் என்ற கொடூர மதம் தாய் மடியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.


உடன்கட்டை ஏறுதல், நரபலி கொடுத்தல் என்பது எல்லாம் பார்ப்பனர்களால் மிலேச்சர்கள் என்று அடைமொழி கொடுக்கப்பட்ட வெள்ளைக்காரர்களால்தான் தடை செய்யப் பட்டன.


இந்து மதத்தின் இதிகாசங்கள் இரண்டில் மகாபாரதமும் ஒன்று. அதில் வரும் அரவான் கதாபாத்திரம் - நரபலியின் சீலத்தை (?) பறைசாற்றக் கூடியதே.


40 நாள் மகாபாரத உபந்நியாசத்தில் இந்த அரவானைப் பலி வாங்கும் நிகழ்ச்சி பிரசித்தி  பெற்றது. இரவு முழுவதும் மக்கள் கண் விழித்து இந்தக் கண்ணராவி காட்சிகளைப் பார்ப்பார்கள். இத்தகு நிகழ்வுகளும், பிரச்சாரங்களும், மக்கள் மத்தியில் மிருகப் புத்தியைத் திணித்து வந்திருக்கின்றன என்பதில் அய்யமில்லை.


அர்ச்சுனனுக்கும், நாகவள்ளிக்கும் (பாம்பு) பிறந்தவன் தான் அரவான். உலகிலேயே அனைத்து இலட்சணங்களையும் பெற்றுப் பிறந்தவர்கள் மூன்று பேர்கள்தானாம். ஒருவன் அர்ச்சுனன், மற்றொருவன் கிருஷ்ணன், மூன்றாமவன் அரவான்.


பாரதப் போர் துவங்குமுன்பு அனைத்து இலட்சணங்களை யும் பெற்ற ஒருவனைப் பலியிட துரியோதனனுக்கு ஆலோ சனை கூறியது சகுனி. இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட கிருஷ்ணன், அமாவாசையன்று தானே நரபலியிடுவதாகத் துரியோதனனிடம் கூறினான். அந்த அமாவாசையை ஒரு நாள் முன்னதாகவே கொண்டு வந்து அந்த நரபலியைத் தானே - செய்வதற்கு முனிவர்களை அழைத்து அமாவாசைக்கு முன்தினமான சதுர்த்தியன்று. அமாவாசை வரும்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான் கிருஷ்ணன். இதைக் கேள்விப்பட்ட சந்திரனும், சூரியனும் கண்ணனிடம் ஓடி வந்தார்களாம். நாங்கள் இருவரும் எதிர் எதிரே வந்தால்தானே அமாவாசை. இதனை நீங்கள் முடிவு செய்தால் எப்படி என்று கேட்க, இதோ இருவரும் எதிர் எதிரே வந்துவிட்டீர்களே. ஆக இன்று தான் சதுர்த்தி அமாவாசை என்று கூறி ஒரு நாளைக்கு முன்னதாகவே அரவாணைப் பலியிடுகிறான். அந்தப் போரில் பாண்டவர்கள் வெல்லுகிறார்கள்.


இதுவரை மலையாள மாந்திரிகர்கள் பில்லி, சூன்யம் வைக்க, எடுக்க குறிசொல்லும் மற்றும் சுடுகாட்டுப் பூஜைகள் செய்யும் அனைவருமே இந்த ஒரு கதையைச் சொல்லியே நரபலி செய்தால் அனைத்தும் கிடைக்கும் - வெற்றி கிட்டும். இதனை அந்தக் கிருஷ்ண பகவானே சொல்லிப் போந்தார் என்று கதைப்பார்கள்.


புருஷமேதா யக்ஞத்தில் 179 வகையான மனிதர்களைப் பலியிடலாம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


பிற்கால சோழ அரசர்கள் காலத்திலும் கூட ஆட்சியை யார் பிடிப்பது என்ற பிரச்சினையில் நரபலிகள் நடந்துள்ளன.


இப்படி மனிதர்களைப் பலி கொடுப்பதையே மதத்தின் மார்க்கமாக்கி வைத்திருந்ததால், மதத்தின்மீது அபார நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மனப்பாங்கு எந்த ரீதியில் வளர்ந்து வரும்?


அதுவும் பேராசையைத் தூண்டக் கூடிய வகையில் அவை அமைக்கப்பட்டிருந்தால் அத்தகு வழி மோசமானதாக இருந்தாலும், அதன்மீது மோகம் இருக்கத்தானே செய்யும்!


கர்ணப் பரம்பரை என்று சொல்லுவார்களே அவை எல்லாம் இது போன்ற கழிசடைகள்தாம். இப்பொழுது நீதிமன்றங்களில் இருக்கக் கூடிய மெத்த படித்த நீதிபதிகள்கூட பரம்பரைப் பரம்பரையாக வந்த நம்பிக்கைகளில் தலையிட முடியாது என்று அதிபுத்திசாலித்தனமாகத் தீர்ப்புகளை வரிந்து தள்ள ஆரம்பித்துள்ளார்கள்.


நாட்டின் கொடூரமான மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது முதலில் நீதிமன்றங்களிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும்.


நரபலி போன்ற காட்டு விலங்காண்டித்தனமான எண்ணம் எந்த நிலையிலும் மனிதப் புத்தியில் உதிக்கக் கூடாது என்கிற வகையில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காலந் தாழ்த் தாது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மக்கள் மத்தியில் மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.


நமது நாட்டு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சியில் விஞ்ஞான கருவியைப் பயன்படுத்தி அஞ்ஞான மூடத்தனங் களை ஒளிபரப்புவதை நிறுத்திட வேண்டும்.


No comments:

Post a Comment