கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
'விடுதலை' விளைச்சல் விழாவாக, விடுதலையின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு காணொலி நிகழ்ச்சி 1.6.2020 அன்று மாலை 5 மணி முதல் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரும், 58 ஆண்டுகள் விடுதலையின் ஆசிரியராக தொண்டாற்றி வருபவருமான ஆசிரியர் அய்யா அவர்கள் சிந்திய முத்துக்கள் கண்களைப் பணிக்கச் செய்தன; உணர்ச்சியைத் தூண்டின; உள்ளொளி பளிச்சிட்டன; விடுதலையைத் தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும் என்ற மன உணர்வை ஏற்படுத்தின.
“சொந்த புத்தி தேவையில்லை - அய்யா தந்த புத்தியே போதும்“ என்று அடிக்கடி கூறும் ஆசிரியர், 'விடுதலை'யை வளர்த்திட அறிவுலக ஆசான் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதை அய்யாவின் கூற்றிலிருந்தே எடுத்தியம்பிய போது - கேட்ட, பார்த்த தோழர் ஒவ்வொருவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆகி இருப்பர். காலை 7.30 மணிக்கு வந்து இரவு 10 மணிவரை விடுதலைக்காக உழைத்திட்ட அய்யாவின் அருள் உள்ளத்தைப் பற்றி கேட்டபோதும், எப்படிப்பட்ட 'விடுதலை' உங்களுக்குத் தேவை? அடிமை விடுதலையா? சுதந்திர விடுதலையா? என்பதன் விளக்கத்தை சொன்னபோதும், எதுவரை விடுதலை தேவை? என்ற வினாவை அய்யாவே எழுப்பி எவ்வளவு காலம் விஞ்ஞானம் தேவைப்படுகிறதோ - அவ்வளவு காலத்துக்கும் விடுதலை தேவை என சொன்ன போதும்,சந்தித்த எதிர்ப்புகள், துரோகிகள் தந்திட்ட தொல்லைகள், அரசின் எதிர்ப்பு, பிரகலாதன், விபீஷணர்களின் துரோகம் என்பதையெல்லாம் தாண்டித்தான் இயக்கத்தையும், விடுதலையையும் பாதுகாத்து வந்த அய்யாவின் தொண்டை விவரித்த போதும்.. மலையளவு கஷ்டம்... எனினும் நிலை குலையாமல் பெரியார் இயக்கத்தை நடத்திய பாங்கு... கசிந்துருகச் செய்தன.
இயக்கத்தின் போராயுதம் அறிவாயுதமான விடுதலையே! காற்றுக்கு எப்படி வேலி போட முடியாதோ அப்படி 'விடுதலைக்கும்' வேலி போட முடியாது. சூறாவளிகள், சுனாமிகள், எதிர் நீச்சல்களைச் சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் - ஏடு!
தோழர் போடி ரெகுநாகநாதன் ஒரு கேள்வியை எழுப்பினார் ஆசிரியரிடம். “கட்செவி பரவலில் 'விடு தலையை' கொண்டு செல்லும்போது, பொருளாதார இழப்பு நாளைக்கு பெருமளவில் ஏற்படுமே அய்யா?” என்றார்.
ஆசிரியர் பதில் உரைத்தபோது - “கண்டிப்பாக ஏற்படும்; அதற்காக இன்றைய சூழலில் விடுதலையை பரப்பாமலிருக்கவும் முடியாது - எவ்வளவுக்கெவ்வளவு விடுதலை பரவினாலும் நமக்கு மகிழ்ச்சியே! நட்டத்தைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம். தோழர்கள் நட்டமடைய விட மாட்டார்கள்; கை கொடுப்பார்கள்” என்றார். உடனடியாக நான் முடிவெடுத்தேன். இப்போதே உதவிட வேண்டும் என்று! கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள் - மாறுபட்ட சிந்தனை நம்மிடம் எப்போதும் இல்லை!
(விடுதலை வளர்ச்சி நிதி என்றோ, காப்பு நிதி என்றோ, பாதுகாப்பு நிதி என்றோ... எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள் அய்யா அவர்களே! என் சார்பில் பத்தாயிரம் ரூபாயும், 70 ஆண்டு கால விடுதலை வாசகரான எனது மாமியார் தோழர் லீலாவதி நாராயணசாமி சார்பில் பத்தாயிரம் ரூபாயும் ஆக 20,000/- ரூபாய் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்வீர் அய்யா).
என்றும் உங்கள் மாணவன்,
துரை சந்திரசேகரன்
வடலூர்
No comments:
Post a Comment