முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
‘உலக உத்தமர் காந்தி கொல்லப்பட்ட நாள்கூட வெள்ளிக் கிழமைதான்’, ‘ஏசுவின் மறைவும் வெள்ளிக் கிழமையில் நடைபெற்ற துயர சம்பவம்தான் என்பதையும் ஒப்பு நோக்கலாம். டாக்டர் கலைஞர் சொல்ல - அறிவுறுத்த விரும்புவது யாதெனில் எல்லா நாளும் நல்ல நாளே! அவற்றில் உசத்தி - தாழ்த்தி பார்ப்பது அறிவுக்கு ஒவ்வாத செயலே என்பதுதான்.
சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் எனும் நூலில் கடவுளை மனிதனே படைத்தான் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார். “அனைத்தையும் படைத்தவன் ஆண்டவன்தான் என்கிறான் மனிதன். இந்த மனிதன் படைத்ததுதான் என்ன? இது தெரியாதா? மனிதனின் படைப்புதான் ஆண்டவன்” என்கிறார். இது எத்தனை பெரிய உண்மையை தனக்குள்ளே அடக்கிக் கொண்டுள்ள சொற்றொடர்! ஆம்! அனைத்தையும் படைப்பவனாகக் கருதப்படும் கடவுளையே மனிதன் தான் படைத்தான் என்பது கடவுள் மூடநம்பிக்கையின் மீது கலைஞர் கொடுத்த சம்மட்டி அடி அன்றோ!
நெஞ்சுக்கு நீதியிலே ஒரு சம்பவம்...
“கன்னியாகுரிச்சி மாரியம்மன் கோயிலுக்கு எனக்கு முடியிறக்குவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். ஆனால் குறிப்பிட்ட நல்ல நாளில் அந்த ஊருக்குப் போவதற்கான வசதி கள் இல்லாமல் போய்விட்டன. அதற்காக என் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? கன்னியாகுரிச்சிக்குப் போகாமல் உள்ளூரிலேயே என் தலையை மொட்டை அடித்துத் தலை முடியை ஒரு கலயத்தில் போட்டு பத்திரமாகத் தோட்டத்திலே வைத்து அதற்குரிய காணிக்கைப் பொருளை மட்டும் கன்னி யாகுரிச்சி கோயிலுக்கு அனுப்பிவிட்டார்களாம். யாராவது போனாலோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் போனாலோ, அப் போது கொண்டு போய் கலயத்தில் உள்ள என் தலைமுடியைக் காணிக்கை செலுத்தி விடலாம் என்று அப்பாவும், அம்மாவும் கூறிக் கொண்டே இருந்தனர். மிக விலை உயர்ந்த பொருளைக் காப்பாற்றுவது போலவே கலயத்தை கவலையோடு காப்பாற்றி வந்தனர். இரண்டாவது முறையாக எங்கள் வீட்டில் நுழைந்த திருடன், அனைவரும் விழித்துக் கொண்டதால், எதுவும் கிடைக்காமல் அந்தக் கலயத்தை உண்டியல் கலயம் என்று எண்ணித் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். அதை அவன் பிரித்துப் பார்த்த பிறகல்லவா தெரிந்திருக்கும் செய்தி.”
நகைச்சுவை ததும்பிடும் செய்திதான். பின்னாளில் நாடே போற்றும் நாத்திகராக வரப்போகிறார் என்பது அந்த கலயத் துக்கும் தெரியாது - திருடிச் சென்று ஏமாந்த திருடனுக்கும் தெரி யாது. எப்படியோ கலைஞரின் முடி கிடைக்காமல் ஆண்டவன் ஏமாந்து போனார் என்பதே உண்மை!
நரகலோகத்துக்குப் போகிறவர்கள் யார்?
“யாராவது இறந்துவிட்டால், இன்னார் சிவலோக பதவி அடைந்துவிட்டார், அல்லது வைகுந்த பதவி அடைந்து விட்டார் என்று செய்தி போடுகிறார்கள். மனிதனுக்கு இறந்தும் பதவி ஆசை விடவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம். எல்லோரையும் இப்படிப் போட்டு விட்டால் யார்தான் நரக லோகத்திற்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை?”
(மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று)
ஆம்! கருமாதி (உத்திரகிரியை) பத்திரிகை அச்சிடுகிறவர்கள் அப்படித்தானே அச்சிடுகிறார்கள். இன்னார் சிவலோக பத வியோ அல்லது வைகுந்த பதவியோ அடைந்துவிட்டார் என் பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக... என்று. கடவுளின் பாதாரவிந்தங்களை அடையும் செயல் வருத்தத் திற்குரியதா? என்பதைத்தான் கலைஞர் அவர்கள் மேலே கண்டவாறு எள்ளி நகையாடுகிறார்.
அறிவாளியை ‘அற்புதம்’ செய்பவராக...
கலைஞரின் ‘மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று’ நூலில் இதோ மடமையை மாய்த்திடும் முக்கிய செய்தி. மதவாதிகள் எந்த அளவு திட்டமிட்டு வைதீகத்தை - பழைமையை ஏற்றி விடுகிறார்கள் என்பதற்கு ஆதாரமான செய்தியும்கூட...
“எண்ணை விளக்கு! எழுதிக் கொண்டே இருக்கிறார் இராம லிங்க அடிகளார். விளக்கு அணைந்து போகின்ற சூழ்நிலை! பக்கத்திலே செம்பிலிருந்த தண்ணீரை எண்ணை என எண்ணிக் கொண்டு விளக்கிலே ஊற்றினார். அவர் எண்ணை என்று எண்ணிக் கொண்ட காரணத்தினால் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது என்று சொல்வதன் வாயிலாக புராணங்களை - அற்பு தங்களை நம்பாதே! எந்த இராமலிங்க அடிகள் சொன்னாரோ, அதற்கு மாறாக அவரையே அப்படி அற்புதங்கள் செய்யக் கூடிய சித்தர் என்று குற்றவாளி ஆக்கியிருக்கின்றது சமுதாயம்.”
அற்புதங்களை வெறுத்த, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த, கலையுரைத்த கற்பனையெல்லாம் நிலையெனக் கொண்டாடிய சமுதாயத்தின் போக்கைக் கண்டித்த வள்ளலாரையே அற்புதச் சித்தராக கடவுளின் அவதாரமாக ஆக்கிய மதவாதிகளைக் கண்டித்தவர் கலைஞர் என்பது மேற்கண்ட கருத்துக்கள் மூலம் தெளிவாகிறதல்லவா?
நால் வருணம் சரியா? முறையா?
“ஆண்டவனுடைய தலையிலே பிறந்தவர்கள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்றும், தோளிலே பிறந்தவர்கள் அடுத்த ஜாதிக்காரர்கள் என்றும், தொடையிலே பிறந்தவர்கள் அதற்கு அடுத்த ஜாதிக்காரர்கள் என்றும். காலில் பிறந்தவர்கள் மிகமிகத் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு கற்பனையை எழுதியோர்களைப் பார்த்து கேட்க விரும்புவது எல்லாம் - ஆண்டவன் ஒருவன் தான். அவனுடைய உடலிலே எந்தப் பகுதியிலே பிறந்தாலும் அவன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். இதில் ஏன் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் - மத்தியமாக வாழ்பவன் என்ற பேதங்கள்?”
(ஒளி படைத்த கண்ணினாய் வாவா)
பிரம்மாவின் முகத்திலே பிறந்தவர்கள் பிராமணர்கள்; தோளிலே பிறந்தவர்கள் சத்திரியர்கள்; இடையிலே பிறந்தவர்கள் வைசியர்கள்; காலிலே பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாக மனுசாஸ்திரம் சொன்னது.
நான்கு வருணத்தாரையும் தானே படைத்ததாக பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் பகன்றதாகவும் செய்தி உண்டு. ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்தானே - அப்படி இருக்கையில் நால்வருண வேறுபாடு முறையா? என்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்.
இதற்கு மேலும் புரியாதவர்கள் புரிந்து கொள்ளட்டுமே என்று எடுத்துக்காட்டுடன் கீழே கண்டவாறு விளக்கியுள்ளார் கலைஞர்.
“அத்திமரத்தை எடுத்துக் கொண்டால் உச்சியிலும், கிளை யிலும், அடிமரத்திலும் காய்கள் காய்க்கின்றன. எங்கே காய்த் தாலும் அதனை அத்திக்காய் என்றுதான் சொல்கிறோமே தவிர, அடிமரத்தில் காய்ப்பதை பரங்கிக் காய் என்றோ, கிளையில் காய்ப்பதை புடலங்காய் என்றோ, உச்சியில் காய்ப்பதை வெண்டைக் காய் என்றோ அழைப்பதில்லை. அதுபோலத் தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவரும், தோளிலும், தொடையிலும், காலிலும் தோன்றியவர்களும் மனிதர்கள்தானே தவிர அவர்க ளில் உயர்வு - தாழ்வு எதுவும் இல்லை” என்கிறார் பகுத்தறிவாளர் கலைஞர்.
(நூல்: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா)
முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்துக்கள் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தியவை; விசையொடிந்த தமிழர் தேகத்தில் வன்மையை ஊட்டியவை; ஆரியத்தின் சூழ்ச்சியினை, வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கியவை; காழ்ச்சிந்தை - மறச் செயல்கள் மிகவும் தேவையென தூண்டியவை; கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் என்று கோரியவை. புராணங் களை அக்குவேறு ஆணிவேராக பிடுங்கி எறிந்திடச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை. இதோ கலைஞரின் “புராணப் போதை.....”
புராணம் - ஒரு போதை! மக்களின் மயக்கத்திற்கு மன மயக்கத்திற்குக் காரணமாக விளங்குகிறது!
புராணப் போதை வழிவழியாக, பழக்க வழக்கம் ஊட்டப் பட்டு, ஊறிப்போயிருக்கிறது, மக்களின் மனதில், எண்ணத்தில்!
புராணம் - பக்திக்கதை - பரந்தாமன் திருவிளையாடல், படித்தால் புண்ணியம் - பாவம் போகும் - படிக்காவிட்டாலும் கூட, படிப்பதைப் பக்கம் நின்று கேட்டாலே கூடப் பாவம் தீர்ந்து பரகதியில் முக்திகிட்டும் என்ற முன்னுரையுடனே, முதலில் மக்களிடையே தரப்படுகிறது; போதிக்கப்படுகிறது.
பேசாமல் படி, கேள்விக்குறி எழுப்பிடாது கேள். ஆராய்ச்சி செய்திடாது, அதன்படி நட! சந்தேகித்தாலே சங்கடம் வரும் - பகவான்மீது பாரத்தைப் போடு! பலன் கிடைக்கும். புராணத்தைப் புரட்டிப்பார், கேள் -எத்தனை எத்தனை பக்திமான்கள் பாவந் தீர்ந்து புண்ணியமெய்தி உள்ளனர் என்று! பசப்பு வார்த்தைகளால், மயக்கப்படுகின்றனர் மக்கள்.
இந்தப் போதை தெளிந்திட, நீங்கிட, மக்களிடமிருந்து நீங்கிட பெருமுயற்சி செய்தாக வேண்டும்.
புராணங்கள் என்று கூறப்படும் பல்வேறு புராணங்கள் நாட்டிலே ஏடுகளாகவும், கவிதைகளாகவும், கதைகளாகவும், காவியங்களாகவும், ஓவியங்களாகவும் மக்களின் கண் கருத்து காட்சி, எண்ணம் எதிலும் நடமாடுகின்றன!
பெரிய புராணம், விநாயக புராணம், கருட புராணம், கந்த புராணம், அரிச்சந்திர புராணம், அருணாசல புராணம் இன்னும் எது எதுவோ, எத்தனை எத்தனை ஆண்டவன் அவதாரங்களோ அத்தனைக்கும், எல்லா ஸ்தலங்களுக்கும் ஒன்றல்ல, பலப்பல புராணங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகக் கூட காணப்படுகின்றன.
கருடபுராணத்திலே மனிதர் எந்தெந்தத் தவறுகளைச் செய் தால், நரகத்தில் எத்தகைய கொடூரங்களை யெல்லாம் அனுப விக்க வேண்டும் என்பதும், எந்தெந்த தானங்களை யார் யாருக் குச் செய்தால் அந்தரலோகத்துச் சுந்தர வாழ்வாம், சொர்க்க வாழ்வு வாழ்ந்திட முடியும் என்பதெல்லாம் வர்ணிக்கப்பட்டிருக் கின்றன!
பெரிய புராணத்தைப் பற்றி எவ்வளவு கூறினாலும் விடியாது! மனைவியையே மகேஸ்வரனுக்குத் தானம் வழங்கிய பக்தனை யும், இயற்பகை நாயனாரையும், அவ்வித மனைவித் தானங் கேட்ட தயாபரனையும் படிக்கிறோம்!
இத்தோடு நிறுத்தினாரா கலைஞர்! இனிமேல்தான் படுபாதகர்களை - படுபாதகம் செய்தவர்களை பட்டியலிடுகிறார்... பக்தி எனும் போதை தலைக்கேறி விட்டால் பித்தம் பிடித்தவரை விட பேதமைச் செயல்களை செய்ததாக புராணங்கள் புகட்டுகின்றன என்பதைப் படியுங்கள்!
- தொடரும்
No comments:
Post a Comment