திருமணங்களை ஆடம்பரமாக நடத்தாமல், 30 பேர் முன்பு - இன்று 50 பேர் வரை அனுமதி - என்ற அளவில் கரோனா தொற்று, ஓர் சமூக மாற்றத்தை தடாலடியாக ஏற்படுத்திவிட்டது.
இதன் வசதியை அனைவரும் - சம்பந்தப்பட்ட மணமக்கள் குடும்பத்தவர்கள் உணர்ந்துள்ள போதி லும், 'மிச்சசொச்ச' உற்றார், உறவு, நண்பர்கள் - செல்வாக்கு - வரவுகள் இல்லையே என்ற ஆதங்கம் இருக்கக்கூடும் என்றாலும், பலரும் கடைப்பிடித்தால் நிச்சயம் இம்முறை நிலைப்பதோடு, நம் மக்களும் 'கடன்பட்டார் நெஞ்சம் போல்' கலங்கி நிற்காமல், செலவழிக்கத் தூண்டியதை சேமித்து நல்லதொரு வளத்தைப் பெற வழியேற்படும் என்பது போகப் போகப் புரியும்.
அதுபோலவே நமது இளைய தலைமுறையினர் வாங்கும் சம்பளம் கைநிறைய இருந்த காரணத்தால் - சேமிப்பு - சிக்கனம் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே, ஆடம்பரமாக 3 நட்சத்திர ஓட்டல்களில் அடிக்கடி விருந்துண்ணல், பலவகை தேவையற்ற செலவுகளைச் செய்தல் மூலம், 'தங்களது வாழ்க்கை எளிமையாகவும், உண்மையா கவே இனிமைமிக்கதாயும் - எல்லாவற்றையும் விட மேலான 'எவரிடமும்' கைநீட்டி கடன் கேட்காத - வாங்காத - சுயமரியாதை வாழ்வாக அமையாத' ஒரு சூழல் இருக்கிறது.
கரோனாவின் நெருக்கடி கற்க மறுத்த பாடத்தை அவர்களுக்கு கட்டாயக் கல்வி போல் கற்றுக் கொடுத்துள்ளது.
தேவையற்ற செலவுகளை ஒதுக்குவதோடு, ஒருமுறைக்குப் பல முறை செலவு தேவையா என்று யோசிக்கும் நிர்ப்பந்தத்தை நமது இளைய மற்றும் நடுத்தர வயதுள்ள நடுத்தர வகுப்பினருக்கு ஒரு வாழ்க்கை முறையாக அமைய வேண்டிய உரைப் பாயிரத்தை எழுதிக் காட்டுகிறது கரோனா!
வீட்டு உணவு - கலந்துண்ணல், உடற்பயிற்சி, இதுவரை கவலைப்படாமல் இருந்த உடல் நலம் பற்றிய கண்ணோட்டம் இவைகள் எல்லாம் பற்றி - ஒரு நாள், ஒரு பொழுதாகிலும் சிந்தித்து, நம்மை நாமே மன ஆய்வு செய்தவர்களாகி, மாற்றத்தை வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ள கரோனா நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தி யுள்ளது!
சடங்கு, சம்பிரதாயம், திருமணங்கள் - வரவேற்பு - வீட்டு விசேஷங்கள் என்று அலைந்து திரிந்து, நேரத்தையும், பணத்தையும் - உறவுகளைத் திருப் திப்படுத்தி - செலவழிப்பது இப்போது தவிர்க்கப் பட்டு, மின்னஞ்சல், தொலைபேசி வாழ்த்து மூலமே செலவுகள் 'கட்டுசெட்டாகி' விட்டது, எத்தகைய மறைமுக நன்மை பார்த்தீர்களா?
ஈமச்சடங்குகள் கூட கூட்டமின்றி எவர் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டுமோ அப்படி நடக்கிறது.
சம்பிரதாயங்களும், சடங்குகளும்கூட விடை பெற்றன - என்பதனால் ஏற்பட்ட நட்டம் தான் என்ன?
மிஞ்சிப் போனால் காணொலிகள் மூலம் ஒரு வருக்கொருவர் துக்கத்தை துயரத்தை விசாரிப்பது மூலம் ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறோம்!
சிக்கனம் பற்றி தந்தை பெரியார் அவர்கள் போதித்தபோது ஒரு கருத்தைச் சொன்னார். மிக உயர்ந்த கருத்து அது!
"ஏராளமான வசதியுள்ளவர்கள் எளிமையைக் கடைப்பிடிக்கும் போதுதான் எளிமை ஏற்றம் பெறுகிறது" இல்லையா? வசதி குறைவானவன் - இயல்பான சிக்கனவாதியாகவே இருந்து தீர வேண் டியவன் தானே என்று சமூகம் தீர்ப்பெழுதி விடுமே!
"அகிம்சை என்பதற்கு எப்போது தனிப்பெருமை, பலமுள்ளவன் பலமற்றவனிடம் கூட பணிந்து பொறுமை காட்டுவதில்தானே தனிப் பெருமை பெறுகிறது" என்றார் காந்தியடியார். இந்த இரண்டும் நம்மை வெகுவாகச் சிந்திக்க வைக்கும் சீரிய நற் போதனைகள் அல்லவா?
"எந்த கெட்ட வாய்ப்பிலும் ஏதோ சில நன்மை கள் தானே விளைவதுண்டு" என்பது காலம் நமக்குத் தரும் பாடம். கரோனாவும் - தொற்றாக இருந்தும் காற்று மாசைத் தூய்மைப்படுத்தியும், கங்கை நீரையே சுத்தப்படுத்தியும் கூட உதவி விட்டது. கங்கைக்கு ஏற்பட்ட, யமுனைக்கு ஏற்பட்ட தீமையில் விளைந்த நன்மை என்கின்றனரே!
எனவே பாடம் கற்போம்; நிற்போம் அதன் வழியில்!
No comments:
Post a Comment