வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (2)

கி.வீரமணி


நமது இயக்கம் யாருக்காக?


தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே  என்ற அந்தக் குற்றச்சாட்டுக்குப்  பெரியார் விளக்கம்



திராவிடர் கழகம்


வீண் ஜம்பம் செய்யவில்லை!


இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன், திராவிடர் இயக்கத்திற்கு முக்கியமான கொள்கை என்னவென் பதை. இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனன் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப் பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதே யாகும். எனவே, நானோ, திராவிடர்  கழகமோ  நமக்குள்ளாக இருந்து வரும் ஜாதிகளுக்காக, இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று வீண் ஜம்பம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.


ஆரியனும், அவனது ஸ்தாபனமாகிய காங்கிர சும் - வேண்டுமானால் சொல்லி பெருமையடை யலாம். காரணம், வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். நம்மை கடவுள் பேரால், அரசியல் பேரால் அடிமைப்படுத்தி, நம் நாட்டில் நமக்கு வழி யில்லாமல் செய்த கரையான் போன்று அவர்கள் இங்கிருப்பதால் ஏதோ தானம் செய்வது போன்று அக்கூட்டம் ஆதிதிராவிடர்களுக்கு இதைச் செய் தேன், இதைச் செய்தேன் என்று கூறி ஆதிக்கத்தின் பித்தலாட்ட சூழ்ச்சியை மறைக்கச் செய்யலாம். நாம் ஏன், நமது திராவிடர் இயக்கம் ஏன் அவ்வித கீழ்நிலையில் செல்ல வேண்டும்? எனவே தோழர் களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர் - திராவிடர் என்ற வித்தியா சங்கள் வேண்டாம். அதைவிட ‘பறையன் என்று சொல்லாதே', ‘சூத்திரன் என்று கூறாதே' என்று உணர்ச்சியடையச் செய்யுங்கள்.


அம்பேத்கரின் நிலைப்பாடு!


தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும், அறிஞருமான டாக்டர் அம் பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப் பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர். நான் எதிர்பார்த்திருந்தேன், அவரின் ஒத்துழைப்பை இவ் வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால் எதிர்பாராதவிதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங் கொடுக்கும்படி செய்தாரோ, அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய - இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டு விட்டார். இன்னும் கூற வேண்டுமானால், இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் தத்து வத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.


எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வட நாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டி யிருக்கிறது போலும். நான் அதைப்பற்றி தப்பாகவோ, குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன? நம் நாட்டிலுள்ள  தலைவர்கள் என்று சொல்பவர்களே, தாழ்த்தப்பட்டோரின் விடு தலையை குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத் தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால், வட நாட்டு அம்பேத்கரைப் பற்றி நாம் குறை கூற முடியுமா? (இது 1947இல் பெரியார் பேசியது!)


திராவிடர் இயக்க மூச்சு உள்ளவரை இது ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டே தீரும்!


என்னையோ அல்லது திராவிடர் இயக்கத் தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லா விட்டாலும் ஒன்று கூறுகிறேன்.  தோழர்களே, திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.


தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங் கள். திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனு பவிக்க உரிமையுண்டு.


கடைசியாக ஒன்று மட்டும் நிச்சயம். திராவிட நாடு பிரிவினை போராட்டத்தின் போது டாக்டர் அம் பேத்கர் போன்றவர்களும்கூட எதிர்த்தாலும், திரா விட  நாட்டுப் பழங்குடி மக்கள் (தாழ்த்தப்பட் டோர்- எஸ்.சி.ஆர்.) என்னுடனும், திராவிடர் இயக்கத்துடனும் தொண்டாற்றுவார்கள் என்ற உறுதி எனக்குண்டு. ஏன்? பழங்குடி மக்களும், திராவிடர் இயக்கமும் அல்லது சுயமரியாதை இயக்கமும் நகமும் சதையும் போன்றவை. இதை எவராலும் பிரிக்க முடியாது என்பதை பலமுறை கண்டிருக்கிறேன். எனவே, திராவிட நாடு பிரிவினையின் பெரும்பாலான நலன் பழங்குடி மக்களுக்குத்தான் என்பதை இன்றில்லா விட்டாலும் வருங்காலத்தில் உணர்வார்கள்.''


(‘குடிஅரசு',  8.7.1947).


வருங்கால சந்ததிகளுக்கான அடிச்சுவடுகளே!


எதையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படை யாய்ப் பேசிடும் தலைவர் நம் அறிவு ஆசான் தன்னலம்  கலவாத தனிப்பெரும் தொண்டின் சிறப்பே ஆயுதம் ஏந்தாமல் - ரத்தம் சிந்தாமல் - மக்களுக்கு எவ்வித இடையூறும் கேடும் ஏற்படுத் தாமல், தம்மை வருத்திக் கொண்டு, தான் கொண்ட லட்சியத்தை அடையத் தக்க விலை இதுவே என்ற முழு நிறைவுடன், தானும் பாடுபட்டு, தனது தோழர்களையும், இயக்கத்தையும்  வழிநடத்தச் செய்து, அவர் படைத்த தடம் மணல் சாலை அல்ல; உறுதிமிக்க சிமெண்ட் சாலையே என் பதை உலக மயமாகும் பெரியார் தத்துவங்கள்மூலம் வரலாற்றில் இன்று துல்லியமாய் கண்டு மகிழ்கிறது!


வருங்கால சந்ததிகளுக்கு, நாம் காட்டும் சரியான தடம் அய்யாவின் அந்த அடிச்சுவடுகளே!


புரிந்துகொள்ளுங்கள்!.


(தொடரும்)


No comments:

Post a Comment