‘‘ஒப்பற்ற தலைமை!'' பொழிவு 2: காணொலியில் தமிழர் தலைவர்
‘‘என் வெற்றியின் இரகசியம் என்ன?''
கலி.பூங்குன்றன்
‘ஒப்பற்ற தலைமை' என்னும் தலைப்பில் இரண்டாவது சொற்பொழிவைக் காணொலிமூலம் ஆற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் எத்தகைய எதிர்ப்பு களையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது?
மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பொது மக்களின் எதிர்ப்பு, மதவாதிகள், சனாதனவாதிகள், அரசியல்வாதிகள், துரோகச் சக்திகள் என்று அடுக்கடுக்காக எதிர்ப்புகளைச் சந்தித்து எதிர் நீச்சல் போட்டவர் பெரியார்.
எதிர்ப்புகள், கல்வீச்சுகள், செருப்பு வீச்சுகள், அழுகிய முட்டை வீச்சுகள் என்ற வகையில் எதிர்ப்பு இல்லாமல் எந்த ஒரு பொதுக் கூட்டமும் முடிந்ததில்லை. முட்டையில் ஓட்டைப் போட்டு மலத்தை வைத்தெல்லாம் பெரியார்மீது வீசி யிருக்கின்றனர்.
அதற்காக அவர் அசந்தாரா - இல்லை; அவற் றையெல்லாம் தன் சால்வையால் துடைத்துக் கொண்டே தன் பேச்சை நிறுத்தாமல் அடைமழை பொழிந்தவர் தந்தை பெரியார் (மயிலாடுதுறைப் பொதுக்கூட்டத்தில் நான்கரை மணிநேரம் சொற்பொழிவாற்றினார் - செய்யாறு பக்கத்தில் வாழ்குடை என்னும் ஊரில் ஒரு சுயமரியாதைத் திருமணத்தில் அய்ந்தரை மணிநேரம் பேசி இருக்கிறார்).
சின்னாளப்பட்டி பொதுக்கூட்டத்தில் சரமாரி யான கல்வீச்சுகள்! தன் உடலில் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து முண்டாசு கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். பேச்சைக் கேட்க வந்தவர் களையும் முண்டாசு கட்டிக் கொள்ளச் சொன்னார்.
அவ்வளவு எதிர்ப்புக் காட்டிய அந்த ஊர், பிற்காலத்தில் கழகத்தின் பாசறையாயிற்று. சின் னாளப்பட்டிக்காரர்கள் வெளியூர்களில் இருந் தாலும், கழக உணர்வோடும், நன்றி உணர்வோடும் இருக்கக் கூடியவர்கள் - அங்கெல்லாம் வந்து நம்மைச் சந்திக்கத் தவறாதவர்கள்.
எங்கள் கடலூரில் ரிக்ஷாவில் பெரியார் சென்றபோது செருப்பை வீசினார்கள். (அந்த இடத்தில் தந்தை பெரியார் சிலை இப்பொழுது இருக்கிறது).
சிவகங்கையிலே தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டபோது காங்கிரஸ்காரர்கள் (அப்பொழு தெல்லாம் எதிர்ப்பாளர்கள் காங்கிரஸ்காரர்கள் தாம்) செருப்புத் தோரணங்களைக் கட்டியி ருந்தார்கள; ஆத்திரத்தால் அந்தக் கொடிகளை அவிழ்க்கச் சென்ற தோழர்களைத் தடுத்தனர் தந்தை பெரியாரும், அண்ணாவும்!
காங்கிரஸ்காரர்கள் நமக்காக அரும்பாடுபட்டு பழைய செருப்புகளையெல்லாம் தேடித் தேடிச் சென்று மெனக்கெட்டு தோரணம் கட்டி வர வேற்கிறார்கள் - அவர்கள் மனம் கோணலாமா?
அதேநேரத்தில், காங்கிரஸ் தோழர்களுக்கு ஒரு தகவல் - இந்த நாட்டை 14 ஆண்டுகள் செருப்பு ஆண்டு இருக்கிறதே - அது தெரியுமா? என்று கேட்டார்.
(வனவாசம் சென்றிருந்த இராமன் செருப்பை வாங்கி வந்து பரதன் 14 ஆண்டுகள் அதனை வைத்து ஆட்சி செய்யவில்லையா?)
இதனைக் கேட்டவர்கள் வெட்கப்படும்படி நகைச்சுவையுடன் தந்தை பெரியார் தெரிவித்தக் கருத்தைக் கவனிக்கவேண்டும்.
ஒருமுறை ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் திருக்கைவாலால் தாக்குவது (திருக்கை மீன் வால் என்றால், முள்ளு முள்ளாக இருக்கும்; அதனால் அடித்தால், சதைப் பிய்த்துக் கொண்டுவிடும்!) என்று திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், எதிரிகள், எதிர்பார்த்த வழியில் வராமல் எதார்த்தமாக வேறு பாதையில் பெரியார் வேன் சென்றுவிட்டதால் தப்பினார்; ஆனால், பொதுக்கூட்டம் முடிந்து திரும்பிய கழகத் தோழர்கள் தாக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் நாகம்மையார் வாசக சாலை ஆண்டுவிழா, 10 ஆயிரம் பேர் கூடிய கூட்டம். வழக்கம்போல காங்கிரஸ்காரர்கள் கலாட்டா செய்தனர். கற்களையும், மண்ணையும் வாரி இறைத்தனர். ஊளை சத்தம் போட்டனர். மிரு கங்கள் போல் கத்தினர்.
நமது தோழர்கள் எதிர்த்து அவர்களை நோக்கி அடக்கச் சென்றபோது, தந்தை பெரியார் உரத்த குரலில், ‘அங்கே போகாதீர்கள்; மீறிச் சென்றால் இந்தக் கூட்ட மேடையை விட்டு நான் போய் விடுவேன்!' என்று சொன்னதும், நமது தோழர்கள் அமைதியானார்கள்.
எதிரிகள் கத்திக் கொண்டே இருந்தனர். ஆனாலும், பொதுக்கூட்டமோ இரவு 11.30 மணிவரை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆனால், மறுநாள் காலையில் பத்திரிகையில் என்ன எழுதினார்கள் தெரியுமா? கேள்வி கேட்டு ஈ.வெ.ரா.வை மடக்கினார்கள்; அண்ணாதுரை இந்தியை எதிர்த்துப் பேசினார். மக்கள் எதிர்ப் பைத் தெரிவித்தனர் என்றெல்லாம் பொய்ச் செய்தியைப் போட்டார்கள்.
உண்மை என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் அண்ணாவே கலந்துகொள்ளவில்லை என்பது தான் - இப்படியாக அவதூறு பொய்ப் பிரச் சாரங்கள்.
இந்த வன்முறையோடு நின்றுவிட்டதா? குதர்க்கமாகக் கேள்விகளை எழுதிக் கேட்பார்கள். நீ ஏன் தாடி வைத்திருக்கிறாய்? உன் மீசை ஏன் நரைத்துப் போயிருக்கிறது? நீ ஏன் மறுபடியும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை? என்றெல் லாம் கேட்டார்கள்.
சில ஊர்களில் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள கோவில்களில் வேண்டுமென்றே மணியை வேக வேகமாக அடித்து, பேசுபவர் களுக்குத் தொந்தரவு கொடுப்பார்கள்.
(முதலமைச்சர் கலைஞர் சென்னை தியாக ராயர் நகரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, இவ்வாறு செய்ததுண்டு, முதலமைச்சர் எச்சரித்த போது, நிறுத்தப்பட்டது - இந்தத் தகவலையும் கழகத் தலைவர் தெரிவித்தார்).
இப்படி ஒரு பக்கம் எதிர்ப்புகளுக்கிடையே பிரச்சாரம் என்றால், இன்னொரு பக்கத்தில் அரசின் எதிர்ப்பு, ‘விடுதலை', ‘குடிஅரசு' ஏடுகளுக்கு ஜாமீன் தொகைக் கேட்பு - இந்த ஆட்சி ஏன் ஒழியவேண்டும் என்று ‘குடிஅரசு' எழுதியதற்காக 124-ஏ பிரிவின்கீழ் ராஜதுவேஷ வழக்கு.
வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் இந்த நிலை என்று இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந் ததாகச் சொன்னார்கள் அல்லவா - அதற்குப் பிறகுகூட 1949 ஆம் ஆண்டில் ‘விடுதலை'க்கு ரூ.2000 பறிமுதலாகி விட்டது. ரூ.10 ஆயிரம் ஜாமீன் கட்டினால்தான் புதிய அனுமதி கிடைக்கும் என்ற நிலை - இப்படியெல்லாம் இன்னொரு பக்கத்தில் அரசுத் தொல்லைகள்.
மூன்றாவதாகத் தந்தை பெரியாரின் உடல் நோய் தொல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெல்லாரி சிறையில் இருந்தது முதற்கொண்டு வயிற்றுத் தொல்லை அவரை வாட்டியது.
அய்யாவுக்கு இருந்த குடலிறக்க நோய் (ஹிரண்யா) 75 ஆண்டுகாலமாக அவரை வாட்டி யது- அதனோடுதான் நாள்தோறும் அலைந்து அலைந்து பிரச்சாரம் செய்தார்.
‘‘நான் இன்னும் நான்கைந்து ஆண்டுகள்தான் உயிர்வாழ முடியும் - என் உடல்நிலை அப்படி இருக்கிறது. நான் பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்கூட உள்ளுக்குள்ளிருக்கும் உறுப்பு வீங்கி தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பதை உணர்கிறேன்'' என்று பேசுகிறார் தந்தை பெரியார். 1944 ஆம் ஆண்டு வாக்கில் இந்த நிலை.
இப்படியொரு சூழ்நிலையில்தான் அய்யா விடத்திலே மணியம்மையார் வந்து சேர்கிறார். நான்கு ஆண்டுகள்தான் உயிர் வாழ முடியும் என்று சொன்ன தந்தை பெரியார், அதற்குப் பின் 30 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால், அவரை வாழ வைத்த பெருமை - கடமையைச் செய்த வர்தான் அன்னை மணியம்மையார் என்று கழகத் தலைவர் குறிப்பிட்டபோது அனைவருக்கும் ஒரு மாதிரியான நெகிழ்ச்சி ஆட்கொண்டது என்றே சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில்தான் பேசினார். (1973 டிசம்பர் 19இல்) பேசிக் கொண்டிருந்தபோதேகூட வலியால் துடித்தார். அதோடு இறுதி மரண சாசனமாக முழங்கினார்.
அன்று இரவு நோய்த் தொல்லை அதிகமாகி சென்னைப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட் டார் - மறுநாள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 21, 22 ஆகிய நாள் களில்கூட நன்றாகத்தான் இருந்தார். உரையாடிக் கொண்டுமிருந்தார். 23ஆம் தேதிதான் சங்கடமானது. 24ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மறைவுற்றார்.
இதற்கிடையில் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் பற்றி அய்யாவிடம் கேட்டேன். அடுத்து சில நாள் களில் திருவண்ணாமலையிலிருந்து பொதுக் கூட்டம் ஆரம்பம்.
உடல் நிலை இப்படி இருக்கும்போது நிகழ்ச்சிகளைத் தள்ளி வைக்கலாம், அய்யாவின் கருத்து என்ன என்று கேட்டபோது - அய்யா சொன்னார், Òஏன் ஒத்தி வைக்க வேண்டும் - பேசப் போவது நான்தானேÒ என்று கடுமையாகப் பேசினார்.
மற்றவர்களாக இருந்தால் என்ன சொல்லியி ருப்பார்கள்? நினைத்துப் பாருங்கள் - அதனால்தான் அவர் பெரியார்.
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தால் ஒரு பக்கம் எதிர்ப்பு - இன்னொரு பக்கம் அரசு எதிர்ப்பு - மற்றொரு பக்கம் உடல் நலக்குறைவு என்ற நிலை-
நான்காவதாக உடன் இருந்தவர்களாலே ஏற்பட்ட எதிர்ப்பு-தொல்லைகள்!
பெரியார்-மணியம்மை திருமணம் என்ற காரணம் காட்டி எதிர்ப்பு!
சாமி. சிதம்பரனார் அவர்களை எல்லோருக்கும் தெரியும் "தமிழர் தலைவர்" என்று அய்யாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர். அவர் அய்யாவை விட்டு விலகி இருந்த நேரம்;
ஆனால் பெரியார் - மணியம்மை திருமணம் என்ற ஏற்பாட்டை வரவேற்றவர் - ஏற்றுக் கொண்டவர். அந்தக் கால கட்டத்தில் 40 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலை எழுதினார். தோழர் எம்.கே.டி. சுப்பிரமணியம் அவர்கள் 'தீப்பொறி' என்ற ஓர் இதழை நடத்தி வந்தார் கொஞ்ச காலம்.
அந்தத் 'தீப்பொறி' பதிப்பகத்தின் சார்பில் சாமி. சிதம்பரனார் எழுதிய அந்த நூல் வெளியிடப்பட்டது. நூலின் பெயர் "எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா." என்பதாகும். (அதே போல மணவை திருமலைச்சாமி அவர்கள் பெரியார் மணியம்மை திருமணத்தை ஆதரித்து 'துவேஷப் புயல்' எனும் நூலை எழுதினார்.)
பெரியார் யார்? அவர் எத்தகைய கொள்கையாளர் - நெஞ்சுரம் கொண்டவர்-எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்ட மாவீரர்- அவர் கொள்கை- இயக்கம் தோற்காது என்ற முறையில் ஆணித்தரமாக எழுதப்பட்டது சாமி.சிதம்பரனாரின் அந்த நூல்- விட்டுக் கொடுக்காத வீரர்.
தான் சொல்லும் கருத்தில் உறுதியாக இருந்தவர்-அந்தக் கருத்தை மற்றவர் ஏற்க வேண்டும் என்று நினைப்பவர்.
பிறர் கருத்துக்குத் தலைகுனிந்து வளைந்தவர் அல்லர். அவர் ஒரு புரட்சிக்காரர் - அவரின் சீர்திருத்த இயக்கம் வெற்றி பெற்றதற்கு இதுவேதான் அடிப்படைக் காரணம்.
அரசியல் என்றால் விட்டுக் கொடுக்க வேண்டும்; ஆனால், சமுதாயப் புரட்சி இயக்கத்தில் விட்டுக் கொடுக்க முடியாது- கூடாது - சரித்திரத்தில் சமூகப் புரட்சி இப்படித்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
பிறர் கருத்தைக் கடன் வாங்கியது கிடையாது. எவர் போற்றுகிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதைப் பொருட்படுத்தாத புரட்சிக்காரர் இவர்!
கடவுள் காட்டும் வழி என்று மற்றவர்கள் சொல்லலாம். ஆனால், அத்தகையவர் அல்ல பெரியார். தாம் மேற்கொண்ட புரட்சிப் பணிக்கு எதிர்ப்புத் தோன்றுவது இயல்பே என்று எதிர்பார்த்துதான் - அந்தத் தொண்டை மேற்கொண்டார் அவர்.
பெரிய எதிர்ப்புகள் எல்லாம் வெடித்துக் கிளம்பின - ஆனால், அவை எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியாது - அவரை வெல்லவும் முடியாது.
பழிப்பதாலோ வசைபாடுவதாலோ அவர் கொள்கை அழியாது.
இன்று அவரது இயக்கம் பொதுமக்கள் இயக்கமாகி விட்டது. திராவிடர் கழகக் கொள்கை அவசியம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகி விட்டது.
பெரியார் வாய்ச் சொல் வீரரல்ல-செயல் வீரர்! உள்ளத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்.
உடன் உள்ளவர்களானாலும், உற்றார், உறவினர் களானாலும் அவர் பயணம் தடைப்படாது. இளைஞர் களுக்கு உணர்ச்சி ஊட்டுகிறார். இப்பொழுது எதிர்ப்பவர்கள்கூட வருங்காலத்தில் இவரைப் பின்பற்றுவார்கள்.
இன்றைக்குப் பெரியாரை எதிர்க்கும் கும்பல் நாளை போற்றத்தான் செய்யும்.
எதிர்ப்பால் வளர்ச்சிதான் அடை வார் - பலமான எதிர்ப்பு இல்லா விட்டால், பெரியாரின் இயக்கம் பலமாக வளர்ந்திருக்காது என்று சாமி. சிதம்பரனார் எழுதியுள்ளதைப் பட்டியலிட்டுக் காட்டிய கழகத் தலைவர் - இந்தக் கருத்துகளை நமது இளைஞர்கள் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
1956இல் தந்தை பெரியார் பேசுகிறார்; "எனக்கு எப்பொழுதும் உண்மையின்மீது மிகவும் பற்று உண்டு. மரணத்தின் பிடியில் இருப் பவன் கூறும் வாக்குமூலம் உண்மை யாக மட்டும் இருக்கும். நான் கூறுவதும் அப்படித்தான்?" என்று தந்தை பெரியார் கூற்றை கழகத் தலைவர் எடுத்துக் கூறியதுடன்,
"உண்மையைப் பேசவே எனக்கு நேரம் இல்லை - நான் எங்கே பொய் பேசப் போகிறேன்" என்று தந்தை பெரியார் கூறியதையும் நினைவூட் டினார்.
ஒழுக்கத்திற்கே மதிப்பு கொடுக்க வேண்டும் என்றார். என்றைக்காவது உண்மை என்பது உணரப்பட்டே தீரும். இந்த இயக்கத்திற்கு வெற்றி அங்கேதான் இருக்கிறது. அது நேர்மையின்மீது கட்டப்பட்டது என்று தந்தை பெரியார் கூறியதைத் தோழர்களுக்குச் சுட்டிக் காட்டினார்.
தந்தை பெரியாரின் வெற்றிக்கும், தனித் தன்மைக்கும் கட்டியம் கூறுவது என்ன?
அதனை அய்யா வாயாலேயே கேட்போம் என்று எடுத்துக் காட்டினார் தலைவர்.
"சாதாரண மொட்டை மரம் போன்றது என்னுடைய வாழ்க்கை. காய், பழம், பிஞ்சு இருக்குமானால் அம் மரத்தில் யாரும் கல்லெறியாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அப்படியும் எனக்கு என்னைக் காப் பாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை. எதற்கும் கவலையற்ற எனக்கு யாரிடமும் பயமில்லை.தயவு வேண்டுமென்ற விருப்பமும் இல்லை" (விடுதலை 3.2.1958) என்று தந்தை பெரியார் தன்னைப் பற்றிக் கொடுத்த தன்னிலை விளக்கத்தை எடுத்துக் காட்டினார்.
'இந்த இயக்கம் என் சொந்த சொத்து! எனக்கு மேல் யாரும் பொறுப்பு இல்லை என்று கருதிப் பணியாற்று கிறேன். எனக்குச் சலிப்பு இல்லை, என் இயக்கத்தில் யார் வருவார் போவார் என்பதுபற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை'' என்று கூறும் தந்தை பெரியாரின் துணிவும், பணிவும்தான் என்னே!
நான் ஒரு மொட்டை மரம் என்று சொல்லும் தந்தை பெரியார், நான் செத்தால் அழக்கூட யாரும் இல்லை; நின்றால் நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச் சுவர் என்றும் கூறுகிறார்.
தந்தை பெரியாரின் கொள்கை, இயக்கம், பண்பாடு எத்தகையது?
இதோ அய்யா அவர்களே பேசுகிறார். ஒவ்வொருவரும் வீட்டில் கண்ணாடி சட்டம் போட்டு எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்துக் கொள்ள வேண்டியது.
"நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்ந்து வருகின்றோம். இந்த நிலைமை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் - நமது தோழர்களும் நாணயமாகவும், கட்டுப்பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்"
- தந்தை பெரியார்
('விடுதலை' 11.10.1964 பக்கம் 3, மன்னார்குடி உரை)
மாணவர் பருவந்தொட்டு தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட வரும், கல்வியாளரும், நீரியல் துறையின் நிபுணரும், பல பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தராக இருந்தவரும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தி லிருந்து வந்து உச்சத்தைத் தொட்டவருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தந்தை பெரியார் பற்றி எழுதிய அந்தக் கவிதையைத் தமிழர் தலைவர் தன் உரையின் தொடக்கமாக அறிமுகப்படுத்தியது தனிச் சிறப்பு.
இதோ அந்தக் கவிதை வரிகள்:
"தன்னலமற்ற தொண்டு இதுதான் துறவு
ஓயாத உழைப்பு இதுதான் தவம்
நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின்
நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று; எம்மோர்
உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ!
தடம் சொன்னான், தமிழருக்குக் கண்ணும் காதும்
தன்னறிவும் மனவலிவும் தந்தான் என்றும்
கடன்பட்ட தமிழ் உலகம் நன்றி சொல்லும்
காவியங்கள் கலைகள் அவன் பெருமை பேசும்."
‘கரோனாவின் உதவி!'
‘‘படிக்கப் படிக்க ஊற்றுபோல வந்து கொண்டே இருக்கிறது. பதிவு செய்ய ஆவலைத் தூண்டுகிறது. பெரியாரின் மாணவனான என்னை இன்னும் ஒரு தீவிர மாணவனாக ‘கரோனா' ஆக்கியிருக்கிறது - பெரியார் கருவூலங்களைப் படிக்க உதவி செய்கிறது!''
- காணொலியில் கழகத் தலைவர்
ரூபாய் ஆயிரம் பரிசு!
எவ்வளவோ எதிர்ப்புகள் இவ்வளவையும் மீறி மூவாயிரம், நாலாயிரம் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் ஒன்றாவது எதிர்ப்பால் நின்று போனது - தடைப்பட்டது என்று எவரேனும் சொல்லட்டும்; ரூஜு செய்தால் ரூபாய் ஆயிரம் பரிசு
தருகிறேன். கூட்டம் தொடக்கத்திலிருந்து வந்தனோபசாரம் வரை அனைத்துக் கூட்டங்களும் வெற்றியாக நடந்துதான்
முடிந்திருக்கிறது.
- தந்தை பெரியார்
கேள்விகள் - ஆலோசனைகள்
தோழர்கள் திருநாவுக்கரசு (கீழப்பாவூர்), வேல்முருகன் (வாழப்பாடி), முத்துச்செல்வன் (பெங்களூரு), பொறியாளர் திவாகரன் (சென்னை), ரமேஷ் (நீடாமங்கலம்), துரை. விஜயகுமார் (சென்னை), ஆறு. கலைச்செல்வன் (சிதம்பரம்), விசுவநாதன், அருண்குமார் (செய்யாறு), அம்சா (திருச்சி), வேலூர் பாண்டு (மடிப்பாக்கம்), தகடூர் தமிழ்ச்செல்வி, பிரபாகரன் (ஜெர்மனி), டாக்டர் சோம. இளங்கோவன் (அமெரிக்கா) மேற்கண்ட தோழர்கள் பல ஆலோசனைகளைக் கூறியதோடு கேள்வி களும் கேட்டனர்.
No comments:
Post a Comment