முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார், மூன்றாவது சுயமரியாதை மாநாட்டினை, 8,9.8.1931இல் விருதுநகரில் நடத்தினார். சீர்திருத்த இயக்கத்தில் மாபெரும் தூணாக விளங்கிய பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் தலைமையில் அம்மாநாடு நடைபெற்றது.
“இம்மாநாட்டில் நமது இயக்கத்தையும், இந்திய அரசியலையும் சம்பந்தப்பட்ட பல தீர்மானங்கள் ஆலோசிக்கப்படும். மகாநாட்டு அழைப்பிதழ், பல வெளி மாகாணத் தலைவர்களுக்கும், நமது மாகாண பல கட்சி அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. பல தலைவர்களும் விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என விளம்பரம் செய்திருந்தனர்.
அந்த மாநாட்டு அழைப்பு, அம்மாநாடு நடைபெற்ற காலத்தில் கிட்டும் வசதிகள் பற்றிக் கூறுவது, இன்று படிக்கையில் வேடிக்கையாய் இருக்கும்! “மாநாட்டுக் கொட்டகையில் ஆகாயவாணி, ஒலி பெருக்கிக் கருவி, மின்சார விளக்குகள், மின்சார விசிறிகள், புத்தக வாசக சாலை, என்குயரி ஆபீஸ், போஸ்டாபீஸ், வைத்திய சாலை வசதிகள் கிடைக்கும்” என்று இம்மாநாட்டைப் பற்றிப் புதுவையிலிருந்து வெளிவந்த புதுவை முரசு இதழில் விளம்பரங்கள் வெளிவந்து இருந்தன.
இம்மாநாட்டிற்குப் புதுச்சேரியிலிருந்து புரட்சிக் கவிஞரும், புதுவை முரசு ஆசிரியர் புதுவை சிவம் என்னும் சிவப்பிரகாசமும் இயக்கத் தோழர்களுடன் சென்றிருந்தனர்.
புதுச்சேரி சுயமரியாதைத் தோழர்கள் தந்தை பெரியாரைக் கண்டு அளாவளாவியதுடன், தந்தை பெரியாருக்கு வாழ்த்தும் வாசித்தளித்தனர்.
புரட்சிக்கவிஞர் எழுதிய அந்த வாழ்த்துப் பாவின் நான்கு வரிகள் மட்டுமே எங்கும் பரவியிருப்பவை.
“வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓங்கும் இராமசாமிப் பெரியார் வாழ்க!”
இந்த நான்கு வரிகள் மட்டும் தான் வாழ்த்தில் இருந்தனவா எனில், இல்லை! 48 வரிகள் இருந்தன. ஆம்! 48 வரிகள் இருந்தன. அந்த 48 வரிகளும் முழுமையாக எதிலுமே இதுவரை வெளிவரவில்லை.
மேற்கூறிய நான்கு வரிகள் மட்டுமே வேறொரு பாடலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் பாடலை முழுமையாக எடுத்து, 'புரட்சிக் கவிஞர் புதையல்‘ என்னும் நூலில் சிவப்பிரகாசம் அவர்களின் புதல்வர் முனைவர் சிவ.இளங்கோ வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை இங்கே முழுமையாகக் காணலாம். அதுமட்டுமல்ல பியாக், ஆலாபனை, பியாக் ஏகம் என்று இசைக் குறிப்புகளும் கொடுத்துள்ளார் புரட்சிக் கவிஞர்.
1938 நவம்பரில், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களை ஈடுபட வைத்ததாலும், தந்தை பெரியாருக்குப் பெண்கள் ‘பெரியார்’ பட்டம் அளித்ததாலும் வரலாற்று முதன்மை உடையது என்பர்.
இம்மாநாட்டில் வழங்கிய - நிறைவேற்றிய முதல் தீர்மானம் இது “இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள், செய்யவியலாமற் போன வேலைகளை, இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம், "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.”
இது வரலாற்று முதன்மை உண்மை என்றாலும், பெண்கள் மாநாட்டுத் தீர்மானத்திற்கு முன்னோடி வழிகாட்டிகளில் ஒருவர், விருதுநகர் சுயமரியாதை மூன்றாவது மாகாண மாநாடு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இந்தப் பாடல் வரிகளில் ஆறுமுறை ஈ.வெ.இராமசாமிப் பெரியார் வாழ்க, வாழ்க, வாழ்க என்று முதன் முதலில் உயர்த்திப் பாடியவர், ‘பெரியார்' என்று விளித்தவர் புரட்சிக் கவிஞர் எனக் காண்கிறோம்.
இந்தப் பாடல் முழுமையாகக் கிடைத்துள்ளமையால், இசையமைப்பவர்கள் இப்பாடல் எல்லோர் செவிகளிலும் பாய்ந்து, மனத்தில் நிலைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து போல் எத்திசையிலும் எங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டும். 'ராமசாமிப் பெரியார் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!’ எனும் முழக்கம் எங்கெங்கும் ஒலிக்கட்டும்.
இப்பாடலை வெளிக்கொணர்ந்த முனைவர் சிவ.இளங்கோவை வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment