கரோனா விளைவித்த மாற்றம்: ஓர் உரத்த சிந்தனை! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

கரோனா விளைவித்த மாற்றம்: ஓர் உரத்த சிந்தனை! (1)


கரோனா தொற்றினால் ஊரடங்கு தொடர்ந்த நிலையில், தனி மனித இடைவெளி மிகவும் முக்கியம். இதைத் தடுப்பதற்கு, முகக் கவசமும், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள உடற்பயிற்சி முதல் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வரை அவசியமா னது என எங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது; இதனைப் பெரும்பாலோர் தவறாது கடைப் பிடிக்கவும் தவறுவது இல்லை; காரணம் இது ஒவ்வொருவருக்கும் உயிர் காப்புப் பிரச்சினை அல்லவா? நோய் தடுப்பு பாதுகாப்பு அல்லவா? அதனால்தான்.


இதனால், சமூகத்திற்குத் தேவையான சில மாற்றங்கள் - பல ஆண்டுகால பிரச்சாரத்தினால் மெல்ல மெல்ல யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி வந்த நடைமுறை மாற்றங்கள் - சீர்திருத் தங்கள் - திடீரென்று ‘சுனாமி' போல் மக்களை பணிய வைத்துவிட்டன!


மற்ற நாடுகளைப் போல அல்லாது நமது நாட்டில் திருமணங்கள் பெரிதும் பெற்றோர் களால் ஏற்பாடு செய்யப்படுபவைகளே; காதல் திருமணங்கள் மிகக் குறைந்த அளவே!


எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும், மண விழாவில் ஆடம்பரங்களும், டம்பங்களும், வெட்கப்படாத பணத் திமிரின் வெளிச்சங்களும் இன்று காணாமற் போய்விட்டன!  இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே! தீமையிலும் ஏற்பட்ட ஒரு நன்மை!


1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் தந்தை பெரியார் நடத்திய முதலாவது மாகாண சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:


(இன்றைய இளைய தலைமுறைக்கு இது வியப்பாகவும், வேடிக்கையாகவும்கூட இருக் கலாம்)


"இனி நம் நாட்டில் நடைபெறும் திருமணங் கள் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் திருமணங் களாக நடத்தப்பட வேண்டுமென்று மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது!" - காரணம் முன்பெல்லாம் ‘கல்யாண சுப முகூர்த்தப் பத்திரிக்கையைப் பிரித்தால் இஷ்டமித்திர பந்து சகிதமாய் ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்து, நடைபெறும் எல்லாவித சடங்குகளிலும் பங் கேற்று  வரன் - வதிகளை ஆசீர்வதிக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறோம்' என்று இருக்கும்.


அது சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தாலும், காலத்தின் முக்கியத்தை உணர வேண்டிய நெருக்கடி மக்களுக்கு வந்ததாலும் ஒரு நாள் திருமணமாகியதோடு, அதுவும்கூட மாலை வரவேற்பு உட்பட நடைபெறும் அளவு சுருங்கியது; என்றாலும்கூட


ஆடம்பர அழைப்பிதழ் - ஏராளமான செலவு -


மண்டபங்களில் பலவேளை விருந்துகள் - (பசியில்லாமலே கூட!)


இஷ்டமித்திர பந்து சகிதமாய் வேண்டிய சிநேகிதர்கள் (மனுஷாள் உட்பட!)


கடன் வாங்கியாவது ‘பல லட்சங்கள்' கரைந்த நிலை. கரோனா வந்ததினால் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளாத நல்ல மாற்றம்!


செரிமானம் ஆக ஜீரண மாத்திரைகளைத் தேட வேண்டிய அவசியமில்லாத விருந்துக ளுக்கு இடமில்லை. வெகு சிலருக்குக் குறிப் பிட்ட அளவு உணவு - அதுவும் பாக்கெட்டுகளில்!


‘‘சொர்க்கத்தில்' திருமணங்கள் நிச்சயிக் கப்படுவதில்லை'' -


கரோனாவின் காரணமாக  ஆன் லைனின் - இணையத்தால் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன இப்பொழுது!


'சொர்க்கம்' இப்போது காலியாகவே கிடக் கிறதோ என்னவோ?


ரொக்கத்தில் நிச்சயிக்கப்படும்போதுகூட (உள்ளாந்திரத்தில் எப்படியோ) வெளிப்படை யான ஆடம்பரச் செலவுகள் இப்போது இல்லை.


இது பற்றி பிரபல தமிழ் நாளேடு 'தினத்தந்தி' செய்திக் கட்டுரை வெளியிட்டது சில நாட்க ளுக்கு முன்.


4.6.2020 'தி இந்து' ஆங்கில நாளேட்டின் இணைப்புப் பகுதியில் ஓர் கட்டுரை இதோ:



பிரியாணி பொட்டலம் பார்சல் அல்லது வீட்டில் சமைத்த உணவு - 20 பேர் மட்டுமே முகக் கவசத்துடன் - மணமக்கள் மட்டுமல்ல - மந்திரம் ஓதும் புரோகிதரும்கூட!


புரிகிறதா? மாற்றம் ஒன்றுதான் மாறாதது - இதனை ஏன் நிரந்தரமாகவே ஆக்கிக்கொண்டு, மக்கள் பயன் அடையக் கூடாது? வீண் ஆடம்பரச் செலவுகளை மணவிழாக்களில் தவிர்க்க அறிவுரை சொன்ன பெரியார் கருத்து எப்படியோ செயலுக்கு வந்துவிட்டது!


இது இனிமேலும் ஒரு பழக்கமாக நிலைத்து விட்டால், மக்களுக்கு அதைவிட மிகப் பெரிய சேமிப்பு - சிறப்பு வேறு உண்டா?


உரத்து சிந்திப்போம்!


No comments:

Post a Comment