நமது இயக்கம் யாருக்காக?
தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே என்ற அந்தக் குற்றச்சாட்டுக்குப் பெரியார் விளக்கம்
கி.வீரமணி
பிறவி பேதமான ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, பெண்ணடிமை நீக்கம் - ஆகியவற்றினை தனது வாழ்நாளில் தனது வாழ்க்கை அனுபவங் களையும், நிகழ்வுகளையும் நேரில் கண்டே அவற்றை ஒழிக்கும் அப்பணியைத் தன்மேற்போட்டுக்கொண்டு, அதைத் தான் நடந்த தடமாக்கி வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்ற ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் தந்தை பெரியார் என்ற சமூகப் புரட்சியாளர்!
காங்கிரசில் சேர்ந்தபோதுகூட இதைத்தான் தனது முக்கிய கொள்கைப் பிரகடனமாகத் தந்தை பெரியார் அறிவித்து, அப்போதே அங்கேயே தடம் பதிக்கத் தவறவில்லை!
1920 களில் தாழ்த்தப்பட்டோருக்காக ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு ஆசிரமம் தொடங்கியபோது - அதனைத் திறந்து வைத்தவர் தந்தை பெரியார். (நூறாண்டுக்கு முன்பு) அந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரை எவ்வளவு வலிமையான, ஆற்றல் உடையதாக அமைந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்தால் எவருக்கும் வியப்பே மேலிடும்!
காங்கிரசில் இருந்தபோதே
பெரியார் கர்ச்சனை!
‘‘மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; கோவிலுக்குள் போகக்கூடாது; குளத் தில் தண்ணீர் எடுக்கக் கூடாது; என்கின்றவை போன்ற கொள்கைத் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப் புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக் காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட ‘கடவுள் ஒருவர் இருக்கிறார்' என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட மாபெரும் மக்கள் சமூகம் இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சா தர்மத்தோடும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
இம்மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர் வாழ்வதைவிட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?'' என்று முழங்கினார்.
காங்கிரசில் சேர்ந்து உழைத்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகிய நிலையில் நடத் தப்பட்ட ஒவ்வொரு ஆண்டு மாநாட்டுத் தலைமை உரையிலும், பொது அரங்கப் பேருரைகளிலும் தந்தை பெரியார் இந்தத் தடத்தையே மேலும் பலமாக்கி, ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாகவே போராடுவ தோடு நிற்காமல், எழுதுவதோடு அமையாமல், களங்கண்டு, விழிகளில் குளம் கொண்ட அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தனி பலம் தந்தார்.
1924 இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுத் தலைமை உரையிலும் (30 ஆவது மாகாண மாநாட்டில்) தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் வைதீகப் பார்ப்பனர்களையும், பார்ப்பனரல்லாதாரையும் கடுமையாகச் சாடத் தவற வில்லை அவர்!
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வைக்கத்தில் - (கேரளா) நடந்த சத்தியாகிரகம் முழுக்க முழுக்க தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்தானே! இரண்டு முறை சிறைவாசம், கடுங்காவல் தண்டனை - தனது வாழ்விணையர் நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் உள்பட அங்கே நடைபெற்ற ஓராண்டு தொடர் போராட்டக் களத்தை கடைசிவரை கனன்று கொண்டே வெற்றிக் கனி பறிக்கும் வரை உழைத்தவர் தந்தை பெரியார் என்பதை எவ்வளவுதான் நம் இன எதிரிகளும், அவர்களுக்கு அம்பான நம்மின துரோகி களும் முயற்சித்தாலும், உண்மைகள் முகிலைக் கிழித்து வந்த முழுமதியாக இன்றும் ஒளிபாய்ச்சத் தவறவில்லையே!
காந்தியாரையே எதிர்த்தார்!
காங்கிரசில் காந்தியாரை தனது தனிப்பெரும் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரது உள்ளடக் கிடக்கைக்கு உருகொடுத்து உயிரைக் கொடுத்தும் உழைத்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள், அப்போதே காந்தியாரின் தீண்டாமை ஒழிப்புத் திட் டத்தில், காந்தியாருடன் கருத்து வேற்றுமை கொண் டதை வெளிப்படையாகவே விளக்கிடத் தவற வில்லை. அவரது நிர்மாணத் திட்டத்தை ஏற்றவர் இதில் மாறுபட்டார்!
‘‘தீண்டப்படாதாருக்குத் தனிக் கிணறு, தனிக்குளம் - இவற்றை நாம் தருவதால், அவர்களது தீண்டாமை ஒருபோதும் ஒழியாது. மற்றவர்களுடன் பொதுக் கிணறு, பொதுக் குளம் - இவற்றில் புழங்க அனு மதிக்கும் போதுதான் தீண்டாமை ஒழிய முடியும் என்பதை அவரிடமே விளக்கியவர்.
7.4.1926 இல் (காரைக்குடி அருகே உள்ள) சிரா வயல் என்ற ஊரில் காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழாவின்போது, அது பெருமைக்குரிய விஷமல்லவென்றும், மாறாக, சிறுமையாக மதிக் கப்பட வேண்டியதென்றும், தனிக் கிணறுகள் வெட்டு வது, ஆதிதிராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று நிரந்தரமான வேலியும், ஞாபகக் குறிப்பும் ஏற்படுத் துவதாகத்தான் அர்த்தமாகும் என்றும் கூறினார். (‘குடிஅரசு', 8.4.1926).
அதைவிட படிக்கட்டு ஜாதி முறையான வர்ணா சிரம தர்ம ஜாதி அமைப்பில் உள்ள சமூகத்தில் அறி வியல் பூர்வமான தடம்பதித்தவர் ஒரு அருமையான உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததின் மூலம், தாழ்த்தப்பட்டோர் தம் இழிநிலையிலிருந்து விடுதலையடையாமல், ‘சூத்திரர்களின் இழிநிலை ஒழிப்பு சாத்தியமற்றது' என்பதை இடைவிடாது வற்புறுத்தி வரத் தவறவில்லை தந்தை பெரியார்!
'பறையன்' எனப்படுவோருக்கு
'சூத்திரர்' உழைப்பது எந்த அடிப்படையில்?
‘‘என் போன்ற ‘சூத்திரன்' என்று சொல்லப்படுபவன், ‘பறையர்கள்' என்று சொல்லப்படுவோருக்கு உழைப் பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானே யல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு, உங்களுக் காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களை தாழ்மையாய் கருதும் பெண்களும், ஆண்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ் மையாகக் கருதப்படுவதை அறிவதில்லை.'' (‘குடி அரசு', 25.4.1926).
நாமறிய 1919 இலிருந்து கிடைக்கும் ஆவணங் களிலிருந்து இந்த அளவு கூறுகிறோம்.
அய்யா பதித்த தடம் எப்படி ஒரே தடமாகவே அமைந்த தகைவிலாத தலைமைத் தத்துவத்தின் தனிச் சிறப்பை - விளக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 1973 இல் அய்யா டிசம்பர் 24 இல் மறையும் முன்வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்பதன்மூலம் தீண்டாமை - ஜாதியின் ஆணிவேரையே அறுக்கும், போராட்டக் களம் என்பது அவர்தம் மாறாத தடத்தினைக் காட்டவில்லையா? அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட 52 ஆண்டுகள் ஒரே இலக்குடன் - உத்திகளை அடிக்கடி மாற்றினாலும் - தொடர்ந்து போராடி வெற்றி கண்ட சமூகப் புரட்சி வரலாறு ஈடு இணையற்றது என்றாலும், நம் இன எதிரிகளால் அவ்வப்போது பழைய கால புராணங்களில் பல அவதாரக் கட்டுக் கதைகள்போல் பல்வேறு விமர்சன அம்புகளும், அவதூறுச் சேறுகளும் அவர்மீதும், அவர் கண்ட இயக்கமாம் திராவிடர் இயக்கம்மீதும் தொன்று தொட்டு இன்றுவரை வீழ்ந்த வண்ணமே இருக் கின்றன!
அதைப் பொருட்படுத்தாது, நமது லட்சியப் பயணத்தைத் தொடருவதுபற்றி தந்தை பெரியார் அவர்கள்,
5.7.1947 அன்று திருச்சிக்கு அருகில் உள்ள மான் பிடிமங்கலத்தில் திராவிடர் கழக வாசக சாலையைத் திறந்து வைத்து உரையாற்றியபோது தெளிவுபடுத் தினார்.
தாழ்த்தப்பட்டோர் குறித்த திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினையும், அம்பேத்கர் பற்றிய தனது மனக்குறையையும் மனந்திறந்து வெளிப்படுத்தினார்
‘‘நான் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகமாக உழைத் திருப்பதாக இவ்வூர் திராவிடர் கழகச் சார்பில் என்னிடம் நிதியை அளித்த தாழ்த்தப்பட்ட தோழர் என்பவரான எஸ்.எஸ். மணி கூறினார். அதோடு இவ்வூர் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் திராவிடர் இயக்கத்திலேயே உழைக்க உறுதி கொண்டிருப்பதாகக் கூறினார்.
தாழ்த்தப்பட்டோருக்காக
தனியே உழைக்கின்றேனா?
நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட் டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுங்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திரா விடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். நான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கி றேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணமும் எனக்கில்லை. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன். நீங்கள் வேறுவிதமாகக் கருத வேண்டாம். ஆதி திராவிடன் - திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திரா விடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்கள் இல்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே ஒரு இனத்தைச் சார்ந்த நாம் நமக்குள் பிரிவுகளாக சொல்லளவிலும் இருக்கக் கூடாதென்பதே எனது தீவிர எண்ணமாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment