கடவுள் பக்தர்களும் ஏற்கக்கூடிய ஒன்றில், அந்த சுற்றறிக்கையை அரசு பின்வாங்கியது யாருடைய நிர்ப்பந்தத்தால்?
மதுக்கடைகளைத் திறந்து குடும்பங்களின் அமைதியைக் குலைக்கவேண்டாம்!
கரோனா நிவாரணத்திற்கு கோவில் உபரி வருமானத்தைப் பயன்படுத்துவது சரியானதே! கடவுள் பக்தர்களும் ஏற்கக்கூடிய ஒன்றில், அந்த சுற்றறிக்கையை அரசு பின்வாங்கியது யாருடைய நிரப்பந்தத்தால் என்று கேள்வி எழுப்பியும், மதுக்கடைகளைத் திறந்து குடும்பங்களின் அமைதியைக் குலைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது ஏன்?
தமிழக அரசின் துறைகளில் ஒன்றான ஹிந்து அறநிலையத் துறை (HR & CE) கடந்த 22.4.2020 அன்று அனுப்பிய ஒரு சுற்றறிக்கையை - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தமிழகத்தின் 47 கோவில்களிலிருந்து, அவற்றின் உபரி வருமானத்திலிருந்து 10 கோடி ரூபாயை எடுத்து ஏழை, எளியவர் களின் கரோனா தடுப்புக்கு - ஊரடங்கினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவிக்குப் பயன்படுத்தலாம் என்ற சுற்றறிக்கையை நேற்று (4.5.2020) திரும்பப் பெற்றுள்ளது!
14 நாள்களுக்குள் ஏன் இந்த திடீர் பின்வாங்கல்? முன்பு எடுத்த முடிவில் மாற்றம் செய்ய என்ன காரணம்? யாரு டைய அழுத்தம் இதற்குப் பின்னணி என்பது புரியவில்லை.
கரோனா தொற்றைத் தடுக்க அரசு ஊழி யர்கள் ஏற்கெனவே தங்களது சம்பளத் திலிருந்து உதவியுள்ளார்கள். பிடித்தத்தை மனமுவந்து ஏற்றுள்ளார்கள். அதற்குமேல் அவர்களுக்கு அகப்படியிலும்கூட ரத்து போன்ற தீவிர நடவடிக்கைகளிலும் தமிழக அரசு இறங்கியுள்ளது ஒரு பக்கம் வேதனையானது.
மனிதாபிமானம் உள்ள பக்தர்கள்
குற்றம் சொல்லமாட்டார்கள்
47 கோவில்களில் உள்ள உபரி வரு மானத்திலிருந்து 10 கோடி ரூபாயை எடுத்து, கரோனா ஊரடங்கு - வீட்டுக்குள் முடங்கி யுள்ள ஏழை, எளிய தொழிலாளிகள், விவ சாயிகள் போன்றவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து செலவழித்தால் என்ன தவறு? குடியா மூழ்கிப்போய்விடும்?
‘கடவுள் கருணையே வடிவானவர்' என்று பக்தர்கள்தானே சொல்கின்றனர்? (கரோனா எப்படி, இப்படி வந்து மக்களை அலைக்கழிப்பதோடு கடவுள்களையும், தேர், திருவிழாக்களை நடத்திட, பூஜை, புனஸ்காரங்களையும்கூட தடுத்து நிறுத்தி யுள்ளதையும் ஏன்? எப்படி? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்) அந்தக் கரோனா தடுப்புக்கு - அர்ச்சகர்களுக்குக்கூட அரசு உதவியுள்ள நிலையில், இந்த 10 கோடி ரூபாயை எடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. மனிதாபிமானம் உள்ள பக்தர்கள்கூட இதனைக் குற்றம் என்று சொல்லமாட்டார்கள்.
பின் யாருக்காக பயந்தோ, அஞ்சியோ இந்த உத்தரவினை 14 நாள்களில் திரும்பப் பெறவேண்டும் தமிழக அரசு?
மூன்று பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒரு காரணமாகக் காட்டிடலாமா என்றால், நிச்சயம் அதை ஏற்க இயலாது.
கண்ணை மூடிக்கொண்டா
நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்?
நீதிபதிகள் மனிதாபிமானத்தோடும், நியாய உணர்வோடும்தான் சட்ட விதி களையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற பல வழக்குகளில் - தனியார் ஏழை, பாழை களுக்குத் தன்னார்வலர்கள் உதவுவதை தடுத்துக்கூட அரசு ஆணை பிறப்பித்தது, அதனை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் வழக்குப் போட்ட நேரத் தில், அரசு சார்பு எதிர்வாதம் செய்தபோது, நீதிபதிகள் அதற்கு மாறாக தாராளமாக உதவலாம் என்று ஆணை பிறப்பிக்க வில்லையா?
அதுபோல, இந்த மூன்று வழக்குகள் வந்தாலும், அரசு வழக்குரைஞர்கள் இந்த சுற்றறிக்கையின் நியாயங்களை, தேவையை உரிய முறையில் எடுத்துரைத்தால், நீதிபதிகள் ஏற்காமல், கண்ணை மூடிக் கொண்டா தீர்ப்பளிப்பார்கள்?
தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும்
கூர்ந்து கவனித்துதான் வருகிறார்கள்
இதற்கு உண்மையான காரணம் என்னவென்று யாராலும் ஊகிக்க முடியும். ‘மிகப்பெரிய அழுத்தம்' - அதன் காரணமாக ஏற்பட்ட அச்சம் - இப்படி 14 நாளில் ரத்து செய்யும் ஒரு கேலிக்கூத்தை உருவாக்கி யுள்ளது!
தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துதான் வருகிறார்கள் என்பதை இந்த அரசு உணரத் தவறக் கூடாது.
வன்மையாகக்
கண்டிக்கின்றோம்
மதுக்கடைகள் (டாஸ்மாக்) மீண்டும் 7 ஆம் தேதியன்று திறக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியல்ல. (குடிகாரர்கள் வேண்டுமானால், அதற்கும் பக்தி போதை யூட்டி தேங்காய், பழம், பூஜை புனஸ்காரம் செய்து - கருநாடகத்தில் நடந்ததுபோல கொண்டாடலாம்) இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இல்லங்களில் அன்பு, அமைதி விடைபெற்றுக் கொள்ளும்
வீட்டுத் தாய்மார்கள் கொண்டாட மாட்டார்கள். காரணம், பல குடும்பங்களில் அன்பு, அமைதி விடைபெற்றுக் கொள்ளும் பேரபாயம் இதன்மூலம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
டில்லி மாநில அரசு
அறிவித்திருப்பதுபோல, தமிழ்நாட்டிலும்....
டில்லி மாநில அரசு அறிவித்திருப்பது போலாவாவது, மது விலையை - தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு ‘வாட்' மதிப்புக் கூட்டு வரி போட்டதுபோல - 70 விழுக்காடு விலையை உயர்த்தியாவது விற்று, அதன்மூலம் வருவாயையாவது பெருக்கி, கறைபட்ட பணத்தைக் கொண்டு கரையேற நினைக்கலாமே அரசு.
சிக்கலான பொருளாதார நிதி நெருக்கடியில் இப்படி உபரி வருமான உத்தரவு பின் வாங்கலை ரத்து செய்து, மற்ற கோவில் உபரி வருவாய்களையும் எடுத்து, அரசு பாண்டுகளாக (ஙிஷீஸீபீs) - கடன் பத்திரங் களாகவாவது வழங்கி, நிதிப் பற்றாக் குறையை ஈடுகட்டலாமே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.5.2020
No comments:
Post a Comment