இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை
மக்களிடம் பரப்புவது - மூடநம்பிக்கை செயலில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல!
கரோனா என்னும் கொடு நோயை ஒழித்துக் கட்டுவதில் மத்திய - மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம்; அதேநேரத்தில், இந்த ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கு வீடு சென்று ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவில் உள்ளற்றைப் பரப்புவது, கங்கை நீரால் கரோனா நோயைக் குணப்படுத்தலாம் என்பது, தொலைக்காட்சிகளில் இராமாயணம் போன்ற ஹிந்து இதிகாசங்களைப் பரப்புவது எல்லாம் கண்டிக்கத்தக்கது. இவற்றை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
மேலும் இரண்டு வாரங்களுக்கு
ஊரடங்கு நீட்டிப்பு!
கரோனா தொற்று தடுப்புக்காக - இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, நாளையோடு (மே 3 ஆம் தேதி, 2020) முடிவடையும் நிலையில், இந் நோயின் உக்கிரம் குறையாத பகுதிகளாக சிவப்பு மாவட்டங்கள் (Red Alert Districts) என்று மத்திய அரசு கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் மேலும் இரண்டு வாரங் களுக்கு ஊரடங்கு தொடரவேண்டும் என்று அறி வித்துள்ளது; அதோடு அதில் பலவித தளர்வுகளையும் தெரிவித்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன்
போராட சளைக்கக்கூடாது!
சென்னை மற்றும் 14 மாவட்டங்கள் ‘‘சிவப்பாக'' இருப்பதாலும், அதாவது கரோனா தொற்று குறையாமல் கூடிவரும் அபாயம் இருப்பதாலும் இத்தகைய கட்டுப் பாடுகள் தவிர்க்க இயலாதவை; இவற்றை நமது மக்கள் மிகவும் கவனமாக - சிறிதும் அலட்சியம் காட்டாமல் - பின்பற்றி, கரோனா இல்லாத பகுதியாக தங்கள் தங்கள் பகுதி அமைந்து, மக்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என்று உறுதியுடன், ‘அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன்' போராட சளைக்கக் கூடாது; தகுந்த ஒத்து ழைப்பைத் தந்து வருகிற 15 நாள்களுக்கு சிவப்புப் பகுதி மட்டுமல்ல, மற்ற ‘ஆரஞ்சு', ‘பச்சை'ப் பகுதிகளையும் சேர்த்து மேலும் நோயற்ற பகுதியாகவும் - தொடர்ந்து அந் நிலை நிரந்தரமாக்கப்படவுமான முயற்சி களுக்கு - மத்திய, மாநில அரசுகளின் நட வடிக்கைகளுக்குக் கைகொடுக்கவேண்டும்.
அவசியமானவற்றிற்கு மட்டுமே வெளியில் செல்லவேண்டும்!
தளர்வுகளைத் தாராளமாக்கியுள்ளதை- கம்பி மேல் நடப்பது போன்று மிகவும் கவனமான கடமையாற்றும் பொறுப்பாகக் கருதிடவேண்டும். தனி நபர் இடைவெளி யைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் இல்லாமல் வெளியே நடமாடாது இருத்தல், கும்பல் கும்பலமாக - காய்கள், இறைச்சி, வீட்டுச் சாமான்கள் வாங்கும்போது கூடுவ தைத் தவிர்த்து, தனித்தனியே அவசிய மானவற்றிற்கு மட்டும் வெளியே சென்று, தேவைக்கு மட்டுமே வாங்குதல் போன்ற வைகளைக் கடைப்பிடித்தல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை நன்றாக (20 விநாடிக்குக் குறையாமல்) கழுவுதல், கிருமி நாசினிகளை அளவோடும், தெளிவோடும் கையாளுதல் போன்றவற்றோடு, மற்றபடி உடற்பயிற்சி, நடைபயிற்சி, இளைப் பாறுதல் - குடும்ப உறவுகளுடன் கூடிக் கலந்து மகிழ்தல் போன்றவைமூலம் மன இறுக்கத் திற்கு ஆளாகாதிருத்தலையும் தொடர்ந்து கடைப்பிடித்தல் முதலியவை அவசிய அவசரமாகும். இதில் அலட்சியம் கூடாது. இதனை அனுசரிக்காவிட்டால், கரோனா நோய்க்கு நாமே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம் என்றே ஆகும்.
ஏழை, எளியவர்களின்
பசிப் பிணியையும், பயத்தையும் போக்கவேண்டும்!
இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் தாங்கள் அமைத்துள்ள அதிகாரிகள் குழுக் கள்மூலம், நாட்டிலுள்ள உண்மையான ஏழை, எளிய, அடித்தட்டு தொழிலாளர்கள், அறுவடை விவசாயிகள், சிறு சிறு தொழி லில் ஈடுபட்டு ஜீவனம் நடத்துவோர், வேலையற்ற தொழில் கலைஞர்கள் - பசி, பட்டினியால் - கிராமங்களிலும், மற்ற பகுதி களிலும் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள்; அவதியுறுகிறார்கள் என்று கண்டறிந்து, அவர்களது பசிப் பிணியையும், பயத்தையும் போக்கத் தேவையான அனைத்து முயற்சி களையும் அவசர கால நடவடிக்கைகளைப் போல செய்யவேண்டும்.
மருத்துவமனைகளில் மற்ற நோயாளி களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்கும் வகையில், கூடுதலாக மருத்துவர்களை (ஓய்வு பெற்றவர்களை) ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் அமர்த்தி, அங் குள்ள இளைஞர்களான மருத்துவர்களை கரோனா தடுப்புப் பணிக்கு அனுப்பலாமே! அதன்மூலம் பொது நோயாளிகளும் பயன்பெறுவார்களே!
பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்திடும் முயற்சிகள் ஏற்கத்தக்கதல்ல!
மத்தியில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு, ஊரடங்கினால் வெளியே தாராளமாக நடமாட மக்கள் அச்சத்தோடு இருக்கும் நேரத்தில், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி - தங்களது உள்ளார்ந்த ‘அஜெண்டாவை' செயல்படுத்திடும் முயற் சியில் ஈடுபட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
கரோனாவின் கொடுமையிலிருந்து நாட்டு மக்களுக்குப் புது வாழ்வு தர - பொருளாதார நடவடிக்கையாக மேலும் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும் நிலையில், பொரு ளாதாரம் எங்கே முட்டுச் சந்தில் நிற்குமோ என்ற நிலையில், நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடத்தை 1000 கோடி ரூபாய் செல வில் கட்டுவது இப்போது தேவைதானா?
இது இன்றைய சூழ்நிலையில் மிகப் பெரிய ‘டம்பாச்சாரித்' திட்டம் அல்லவா? இதனை இப்போதைக்குக் கைவிட வேண்டும்.
மதச்சார்பற்ற கோட்பாட்டிற்கு
முரணானதல்லவா?
ஹிந்துத்துவாவை மறைமுகமாகத் திணிக்கும் சன்னமான வேலையும் நடை பெற்று வருகிறது. இராமாயணத் தொடரை தூர் தர்ஷன் என்ற மத்திய அரசு தொலைக் காட்சியில் ஒளிபரப்பி, வரிசையாக புராணங்களைப் பரப்பி, பக்திப் போதையை உருவாக்கிடும் இம்முயற்சி - அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டிற்கு முரணானதல்லவா? ‘‘இதன்மூலம் மக் களுக்கு மயக்கம் - போதை தருகிறார்கள்'' என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்குரை ஞரும், மனித உரிமைப் போராளியுமான பிரசாந்த் பூஷன் பேசியதற்கு எதிராக, அவர்மீது குஜராத் அரசு வழக்குப் போட்டு, உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்வதிலிருந்து தடுத்து, பாதுகாப்பு தந் துள்ள செய்தி இன்றைய ஏடுகளில் வெளி வந்துள்ளதே, இது அரசுகளுக்குப் பெருமை தருவதா?
நேற்றைய ‘ஹிந்து' ஆங்கில நாளேட்டில் வந்துள்ள ஒரு செய்தி
அதுபோலவே மத்திய அரசு சார்பாக கரோனா தடுப்புக்கு ‘கங்கா ஜலம்' தரலாம் - புனித கங்கை நீர் - அதனைக் குணப்படுத்த உதவுமா என்று ஜலசக்தி- நீர் மேலாண்மை அமைச்சகத்தின் ஓர் அங்கமான கங்கை யைத் தூய்மைப்படுத்தும் தேசிய மிஷன் (IVMCG) ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஒரு Clinical Trial செய்து, கரோனா தொற்றைக் குணப்படுத்த உதவுமா என்று ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுள்ளது. இச்செய்தி நேற்று (1.5.2020) ‘ஹிந்து' ஆங்கில நாளேட்டின் 11 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது, வேடிக்கை யானதும்கூட. கங்கையைச் சுத்தப்படுத்த இதுவரை 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழித்த நிலையில், உச்சநீதிமன்றமே, முன்பு மத்திய அரசுத் துறையைப் பார்த்து கடுமையான கேள்வி எழுப்பிய நிலையில், இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முயற்சி தேவையா?
கரோனா நோயுற்ற மக்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையே கூட ஆய்வா ளர்களால் இன்று முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இப்படி விசித்திரமான கோரிக்கைகள் தேவையா?
ஒத்துழைப்போம் - ஓரணியில் நின்று வென்று காட்டுவோம்
எனவே, இப்போது, புதிய தடுப்பு மருந்து அறிவியல்மூலம் - மருத்துவ இயல் துறை யால் அறிவிக்கப்படுகின்ற வரையில், இதனை ஒழிக்கும், தடுக்கும் - முயற்சிகள் மக்கள் ஒத்துழைப்பும், அதனால் பாதிக்கப் பட்டு முடங்கியுள்ள மக்களுக்குப் புதிய ஆக்கமும், ஊக்கமும், உதவிகளுமே தக்க மாமருந்துகளாகும்.
ஒத்துழைப்போம் - ஓரணியில் நின்று வென்று காட்டுவோம் - வாரீர்! வாரீர்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.5.2020
No comments:
Post a Comment