புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கட்டுரைகள் ஓர் எளியவனின் பார்வையில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கட்டுரைகள் ஓர் எளியவனின் பார்வையில்


மிடுக்கு, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களது புகைப் படம் முதன்மையாக வெளிப்படுத்தும் உணர்வு.


அவரது மீசை, அவரது சமகாலத்தவரான சார்லி சாப்ளினை நினைவுறுத்துவது. மீசை மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான சிந்தனையும், கலை மூலம் அதை மக்களிடம் கொண்டு சேர்த்த செயல்பாடும் அவ்விரு பேராளுமைகளுள் இருந்த ஒற்றுமை.


பள்ளிப் படிப்பில், தமிழ் இலக்கியப் பகுதிகளில் உள்ள செய்யுள்களும், பாடல்களும் - வாசிப்பதற்கும், பொருள் கொள்வதற்கும் கடினமாக இருந்தபோது - படிக்க எளிதாகவும், புரிந்து கொள்ள எளிமையாகவும் இருந்தவை பாவேந்தரின் பாடல்களே.


மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு - புரட்சிக்


கவிஞரின் பாடல்களைச் சமூகத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தமை. ஏனைய பாடல்கள் கடவுளரையோ, அரசர்களையோ போற்றும் துதிப் பாடல்களாக இருந்தன. ஒரு சிறுவனாக மேற்கூறியவையே பாவேந்தர் பற்றிய அறிதல்.


பின்னர் திராவிட இயக்க வரலாறு, அதன் ஆளுமை கள் என படிக்கும் பொழுது - பாவேந்தரின் பங்களிப்பும், அவரது தாக்கமும் - அவரைப் பற்றிய  வாசிப்பை விரிவுபடுத்தின; தமிழர் வரலாற்றில் அவருக்கான உயர்தனிச் சிறப்பிடத்தை உணர்த்தின.


பாரதிதாசனாரது கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் வெகுமக்களால் அறியப்பட்ட அளவிற்கு அவரது கட்டுரைகள் அறியப்படவில்லை என்பது எனது தாழ் மையான கருத்து. அவரது கட்டுரைகளைத் தொட்டுப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


டாக்டர் ச.சு. இளங்கோ அவர்களால் தொகுக்கப் பெற்று, பூம்புகார் பதிப்பகத்தால் வெளிடப்பட்ட 'மானுடம் போற்று' எனும் நூல், பாவேந்தரின் கட்டு¬ ரகள் தொகுப்பு. அமேசான் கிண்டிலிலும் இப்புத்தகம் விற்பனைக்கு உள்ளது.


சமூகக் கட்டமைப்பு மாற்றம், அரசியலதிகார  மாற்றம், மக்களின் எண்ணப் போக்கில் மாற்றம் என சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதை உற்று நோக்குபவர் தம் கடந்த காலத்தைப் பற்றிய அறிதலும், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் நிரம்பப் பெற்றிருப்பவர் ஆயின், அதன் வெளிப்பாடு  அச்சமூகத்தின் மேம்பாட்டை நோக்கியதாகவே இருக்கும் என்பதற்கு பாவேந்தரின் கட்டுரைகள் உரைகல்லாக விளங்குகின்றன.


ரொமாண்டிக் இலக்கியம் மற்றும் பிரெஞ்சு புரட்சியின் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் கவிஞன் ஷெல்லியின்  படைப்புகளில், புரட்சியும், பகுத்தறிவும், கவித்துவமும் பிணைந்துள்ளதை காண்கிறோம்.


அதே போன்று, தந்தை பெரியாரால் 1925இல் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், சமூகத்தில், மக்கள் மனதில் முற்போக்குச் சிந்தனைக்கான விதைகளை விதைத்தது. அதே காலகட்டத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கனக சுப்புரத்தினமாக, பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளான சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு முதலியவையே மய்யக் கருத்துகளாக அவரது கட்டுரைகளில் காணப்படுகின்றன. தந்தை பெரியாரைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்ட பாவேந்தரது  சிந்தனையிலும் எழுத்திலும் திராவிடக் கொள்கைகள் நிறைந்திருந்தன என்பதில் வியப்பேதும் இல்லை.


'பொருக்கு மணிகள்', ‘மனிதனுக்கு மனிதன் சொன்னவை’ ஆகிய கட்டுரைகள், மதக் குப்பை களுக்கு எதிராக,  பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் ஆளுமைகளின் கருத்துகளை கோடிடுபவை. பாரதிதாசன் அவர்களின் சமூகப் பார்வையின் அகலத்தையும், அவரது கவனிப்பின் உன்னிப்பையும் பறைசாற்றுவனவாக உள்ளன இக்கட்டுரைகள்.


'பொருக்கு மணிகள்'  உட்பட பல்வேறு கட்டுரை களை, 'கிறுக்கன்' என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். ‘கிண்டல்காரன்’ என்ற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இப்புனைப் பெயர்களில் எழுதிய கட்டுரைகளில் கருத்துகள் மட்டுமல்ல, நகைப்பூட்டும் நய்யாண்டிகளும் உள்ளன.


'சனியனை வணங்குவது சரியா' எனும் கட்டுரை யில், சனி பகவான் எனப்படுபவரை, 'கனம் சனியன் அவர்கள்' என்று விளிக்கிறார். காரணம், அவர் ‘லேசுபட்டவரில்லை’ என்று நம்பப்படுவதால்! ‘பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம்’ என்ற கட்டுரையும் இவ்வகையினதே.


'டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்' எனும் கட்டுரை அறிவியல் அறிவு நிரம்பப் பெற்ற மருத்துவப் பெருமக்களை நோக்கியதாக உள்ளது. சமூகத்தில் ஒவ்வொரு படிநிலையிலும் உள்ளோருக்கு, அவர்களுக்குப் புரியும்படி, அவர்களைத்  தொடர்புபடுத்திக்கொள்ளும்படி விளக்குவதே பரப்புரையின் அடிப்படை. அவ்வடிப்படையினை எளிதாக கையாண்ட சிலருள்,  பாவேந்தரும் ஒருவர் என்பதற்கு இக்கட்டுரையே சான்று.


 'திரும்பிப் பார்! முன்னேறு!' எனும் கட்டுரை புரட்சிக் கவிஞர்- தத்துவ அறிஞராக, தமது மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.


"கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், முட்டாள்தனத்தாலும் பேதப்படாதே! உலக மக்களிடம் சம்பந்தம் செய். சம்பந்தத்தையடை! வாழ்ந்து போ." என்று தமிழர் உயர்நெறியான, கணியன் பூங்குன்ற னாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை தனக்கே உரிய நடையில் முரசறைகிறார்.


1930ல் எழுதப்பட்டு ‘புதுவை முரசு’இதழில் வெளிவந்த இக்கட்டுரை, பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், 1945ல் ‘திராவிடநாடு’ இதழிலும் வெளி வந்துள்ளது.


இன்றும் சமூக ஊடகங்களில்,  'நம் முன்னோர்கள் முட்டாள்களில்லை'  எனும் சிலரின் சிந்தனைக்  குறை பாட்டிற்கான மருந்து, 'ஸ்ரீ சுஜனரஞ்சனியின் துயரம்' எனும் கட்டுரையே!


மனிதரின் நல்வாழ்விற்கும், நல்லொழுக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் தோற்றுவிக்கப்பட்ட கடவுளர்க்கும் எத்தொடர்பும் இல்லை. தனிமனிதனும், சக மனிதனுமே மானுடம் செழிக்க காரணமானவர்கள் எனும் தத்துவத்தை 'மானுடம் போற்று' எனும் கட்டுரையில் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்.


"நீயும், பிறரும் ஆகிய மனிதர், உனது மனிதத் தன்மைக்குக் காரணம். இது தான் மானிடத் தன்மை", 'பெண்ணுரிமை', 'பால்ய விவாகக் கொடுமை', ‘தண்டொட்டி போடலாமா’  போன்ற கட்டுரைகளில், பெண்களுக்கு இழைக்கப்பட்ட சமூகக் கேட்டினை வேதனையுடனும், தேவைப்படும் சீர்திருத்தங்களை சீற்றத்துடனும் பதிவிடுகிறார்.


‘ஹிந்தியால்  செக்கு மாடுகளாக வேண்டாம்' மற்றும் ‘தமிழுக்கு ஆபத்து’  ஆகிய  1931ல் எழுதப்பட்ட கட்டுரைகள், சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்,  இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன. தமிழர் மீது, தமிழ் மீது இந்தித் திணிப்பின் வாயிலாகத் தொடுக்கப்படும் தொடர் பண்பாட்டுப் படையெடுப்பைத்    தோலுரித்துக்   காட்டுவனவாக உள்ளன.


புதுவைவாசி - பிரெஞ்சு பாடத்தை பள்ளியில் பயின்றவர் என்பதனால் மட்டுமல்ல, 'இன்ப வாழ்விற்கு வழி என்ன ?'  என்ற கேள்விக்கு ‘சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்’ என்ற கட்டுரையை விடையாக அளிக்கிறார். பின்னாளில் ‘இன்ப வாழ்வு’ என்றே ஒரு கட்டுரையும் படைத்தார். அதிலும் பிரெஞ்சுப் புரட்சியின் சித்தாந்தத்தை விவரிக்கிறார்.


‘ஙங்ஙஃ’ எனும் கடவுள் மறுப்பு கட்டுரை மிகவும் சிறப்பானது மட்டுமல்ல, புதுமையானதும் கூட.  'எழுத்துச் சிக்கன'த்தில் தமிழ்  மொழி  எழுத்துச் சீர்திருத்தம் பேசுகிறார்.


பகுத்தறிவினால் பண்பட்ட பாவேந்தரது பார்வையில், பழந்தமிழ்  பாக்களுக்கு பகன்ற பொழிப்புரையானது, பொருட்சுவை பொதிந்தது.


 'தெய்வமிகழேல்' என்ற ஔவையின் வாக்கைத் தலைப்பாகக் கொண்ட கட்டுரையில்   "தெய்வம் வழிபடு - தெய்வம் போற்று என்னாமல் இகழேல் என்றது என்னவென்று கூறுவேன். இகழத்தக்க பகுதி தெய்வம் என்பதில் உண்டு. அதனால்தானே தெய்வத்தை இகழாதே என்றார் அம்மையார்." என்கிறார்.


அதே போன்று "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் "கோயில் - அரசியல்; இல்லா - இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில் - ஊரிலே குடியிருக்க வேண்டாம் - குடியிருக்கக் கூடாது என்பது பொருள். கோயில் என்பது அரசன், அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதைப் பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்" என அறுதியிடுகிறார்.


அவரது கூற்றுக்குச் சான்றாக “மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்”  என்ற சிலப்பதிகார அடிகளை  நிறுவுகிறார்


புரட்சிக்கவிஞர் மேலும் விளக்குகிறார் “அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன? அஃது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும். பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான். இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கப்படாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது. கோயில் என்பதற்கு, உருவமைந்துள்ள கலகத்துக்கும், மானக் கேட்டிற்கும் மூடத்தனத்திற்கும் ஆதாரமாக இருந்து வரும் இடங்கள் என்று பொருள் கொள்வது தவறு. திருவள்ளுவரும் உருவ வணக்கத்தை எதிர்க்கின்றார் என்பதை மனத்தில் கொள்க!


வரலாற்று அறிஞனின் நுட்பமும், படைப்பாளனின் நேர்மையும், தமிழறிஞனின் ஆழமும்,   சமூக போராளியின் கோபமும், தன் சமூகத்தில் மாற்றத்தைக் கொணரத் துடிக்கும் சீர்திருத்தக்காரனின் வேகமும் ஒருங்கே வெளிப்படும் சிறப்பான கட்டுரை 1960ல் எழுதிய 'சாதி ஏன்?'


குழந்தையை வாரி அணைத்து முத்தமிடும் தாய், கண்ணில் முத்தமிடுகிறோமா அல்லது கன்னத்தில் முத்தமிடுகிறோமா என்று எண்ணி முத்தமிடுவதில்லை. அம் முத்தங்களில் வெளிப்படுவது அன்பைத் தவிர வேறில்லை!


அதைப் போல பாவேந்தரது படைப்புகள் கட்டுரையானாலும், கவிதையானாலும், நாடகமானாலும், பாடலானாலும் அதில் வெளிப்படுவது மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைகளே, தவிர வேறில்லை!


ஒரு படைப்பின் இலக்கு மக்களின் சிந்தனையைத் தூண்டுவது. படைப்பாளியின் கொள்கைகள் எவ்விதச் சிந்தனையைத் தூண்டின என்பதற்கான அடையாளமாக, அச்சிந்தனையால் பலன் பெற்ற மக்கள் சமூகம், அப்படைப்பாளியை கொண்டாடிக் கொண்டே இருக்கும்.


திராவிடக் கொள்கைகளைத் தன் தமிழ் மீது ஏற்றி, தமிழர் ஏற்றத்திற்கு அரும்பணி ஆற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரை தமிழ்ச்  சமூகம் உள்ளளவும் கொண்டாடும்! கொண்டாடும்! கொண்டாடிக் கொண்டே இருக்கும்!


- கார்க்கி குமரேசன்


No comments:

Post a Comment