தொழிலாளர் அணியினரிடையே கழகத் தலைவரின் காணொலி ‘‘தொழிலாளியல்ல - பங்காளி!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 4, 2020

தொழிலாளர் அணியினரிடையே கழகத் தலைவரின் காணொலி ‘‘தொழிலாளியல்ல - பங்காளி!''

கலி.பூங்குன்றன்



மே முதல் நாளான உலகத் தொழிலாளர்கள் நாளில் (1.5.2020) கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள், தோழர் களுக்கிடையே காணொலிமூலம் கலந்துரையாடலை நடத்தினார். அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


1.5.1933 அன்று மாவட்டம் எங்கும் மே தினக் கூட்டங்களை நடத்துமாறு தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டதை நினைவு கூர்ந்தார்.


சமதர்மம், பொதுவுடைமைபற்றி - ருசியா செல்வதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்களுக்குத் தனித்த சிந்தனை உண்டு. ருசியா செல்லுவதற்கு முன்னதாகவே இந்தியாவிலேயே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை முதன்முதலாக மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியாரே! (‘குடிஅரசு' 1931, ஜனவரி 4 முதல்).


பெண்களையும் ‘தோழர்' என்று அழைத்ததும் சுயமரியாதை இயக்கமே - இந்திய அளவில் மே தினத்துக்கு விடுமுறை அளித்தவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் (1990) என்பதை நன்றியுடன் நினைவு கூர்வோம்.


தமிழ்நாட்டில் அதற்கு முன்பே அறிவித்தது தி.மு.க. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே! மே தினப் பூங்கா என்று அழியாத நினைவுத் தூணுடன் கூடிய பூங்காவை உரு வாக்கியவரும் அவரே!


தொழிலாளர்கள்பற்றிய தந்தை பெரியார் சிந்தனை சிறப்புக்குரியதாகும்.


இதோ தந்தை பெரியார் பேசுகிறார்:


‘‘எவன் ஒருவன் தன் வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறானோ அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறானோ, அவன்தான் தொழிலாளி அல்லது வேலைக்காரன் ஆவான். எவனொருவன் உழைப்பை தன் இஷ்டமான விலைக்குப் பிரயோசனத்துக்கு மாற்றுப் பண்டமாக விலை பேசுகிறானோ - அவன் முதலாளி அல்லது எஜமான் ஆவான். இவைதான் தொழிலாளி என்பதற்கும், முதலாளி என்பதற்கும் அடிப்படைக் கருத்துகளாகும். நம் கிளர்ச்சி வெறும் கூலிக்காக மட்டுமல்லாமல், உரிமைக்காக இருக்கவேண்டும். இதுதான் நம் சங்கத்தின் நோக்கம்.''


(‘விடுதலை', 20.9.1952)


***


‘‘நாம் தொழிலாளி கூடாது என்பதெல்லாம் அவர்கள் பரம்பரையாகத் தொழிலாளிகளாக இருக்கக் கூடாது என்பதற்காகவே! தொழிலாளர்கள் தொழிலில் பங்குதாரர்களாக ஆகவேண்டும். என் கருத்து என்னவென்றால், தொழிலாளிக்கு இலாபத்தில் பங்கு கிடைக்க வகை செய்யவேண்டும். தொழிலாளி தொழிற்சாலையில் பங்குதாரர்போல என்பதாகும்.''


(சென்னை - ‘தினத்தந்தி' அலுவலகத்தில் சொற்பொழிவு, ‘விடுதலை', 8.4.1959)


‘‘திராவிட மக்கள் அனைவரும் தொழிலாளிகள்; திராவிட மகனாய் இருக்கிறதாலே அவன் தொழி லாளியாகவும், பார்ப்பானாய் இருக்கிறதாலே இன் னொருவன் முதலாளியாகவும், முதலாளி ஜாதியாகவும் இருக்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.''


(பொன்மலை உரை, ‘விடுதலை', 20.9.1952)


தந்தை பெரியார் அவர்கள் இதனை ஏதோ மேலோட்டமாகச் சொல்லவில்லை.


இந்து மதக் கோட்பாடு - மனுதர்ம சாஸ்திரத்தின்படி  தொழிலாளர்கள் யார் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


மனுதர்மம் அத்தியாயம் எட்டு - சுலோகம் 415 இவ்வாறு கூறுகிறது.


‘‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒரு வனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.''


இந்தத் தொழிலாளிகள் யார் என்பதை அதே அத்தியாயம் 417 ஆம் சுலோகம் இவ்வாறு கூறுகிறது:


‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம்; யஜமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.''


திராவிடர் கழகத்திற்கு சூத்திரர்களின் கழகம் என்று பெயர் சூட்டலாமா என்றுகூடத் தந்தை பெரியார் நினைத்ததுண்டு. அது இழிவானது என்பதால் கைவிட்டார்.


திராவிடர் கழகம் தொழிலாளர் கழகம்தான் என்று சொன்னதற்கு இவையெல்லாம் பின்னணியில் பலமாக நிற்கும் வரலாற்று ஆதாரங்கள் ஆகும்.


காரைக்குடியில் தந்தை பெரியார் தொழிலாளர் நாளில் ஆற்றிய முக்கிய பகுதிகளையெல்லாம் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார்.


வருணாசிரமத்தை வேதங்களில் உள்ளபடி, ஸ்மிருதிகளில் உள்ளபடி, காப்பாற்ற முடியாத கையறு நிலையில், ‘துக்ளக்' போன்ற பார்ப்பன ஏடுகள் வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல. குணத்தில் அடிப்படையில்தான் என்று திசை திரும்பப் பார்க்கின் றனர் - இந்தக் கூற்றை எதிர்த்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காது கிழியும்படி செவுளில் அறைந்து கூறியுள்ளார். எந்த வயதில் குணத்தை அறிந்து தொழிலைத் தொடங்குவது என்று அவர்களுக்கு எதிர்க்கேள்வி வைத்தார்.


ஒரு முதலாளி பண முதலீடு செய்கிறான் என்றால், ஒரு தொழிலாளி உழைப்பை மூலதனமாகப் போடுகிறார். எனவே, இலாபத்தில் பங்கும், நிறுவனத்தில் பங்கும் பெற உரிமை உடையவனாகிறான் என்ற கருத்தை எடுத்து விளக்கினார் ஆசிரியர்.


ஒரு காலத்தில் வர்க்கமா - வருணமா என்ற சர்ச்சைகள் எழுந்ததுண்டு. இந்தியாவைப் பொறுத்த வரை இங்கு ஜாதிதான் வர்க்கம் என்று இப்பொழுது அனேகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது.


நேற்றைய ஏழை, இன்று பணக்காரன் ஆகிறான்; இன்றைய பணக்காரன் நாளை ஏழையாகிறான். ஆனால், ஜாதி அப்படியா? பிறப்பிலேயே வந்தது - சுடுகாடுவரை தொடர்வதை எடுத்துக் கூறினார்.


நம் நாட்டில் பண முதலாளி, நில முதலாளி என்பதையும் தாண்டி, கல் முதலாளி இருக்கிறான் - அவன்தான் கடவுள். அவனுக்குக் கோவில் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் டன் டன்னாக தங்கங்கள்.


இவையெல்லாம் நம் அரசர்கள் தூக்கிக் கொடுத்தது; நம் மக்கள் காணிக்கை என்ற பெயரில் கொடுப்பது - அந்த மக்களுக்கு ஒரு கஷ்டம், நெருக்கடி என்று வருகிற போது - அந்தக் கோவில் நிதியை அரசு பயன்படுத்த முன்வந்தால், இந்த இந்துத்துவாவாதிகள் எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? மனித நேயத்துக்கும், அவர்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பதைக் காட்டவில்லையா? என்ற வினாவை எழுப்பினார் ‘விடுதலை' ஆசிரியர்.


இந்தக் கரோனா காலகட்டம் மக்களுக்குச் சில சிந்தனைகளை ஊட்டியிருக்கிறது. கடவுள் மீதான நம்பிக்கை தகர்ந்து போயிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் கரோனாவால் மரணம் அடைந்தார். (பட்டர் அமெரிக்கா சென்று வந்தது மறைக்கப்பட்டுள்ளது).


இப்பொழுது என்னவென்றால், கரோனா தொற்று என்ற நோக்கில் மீனாட்சி அம்மன் கோவில் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று கிருமி நாசினி அடிக்கப் பட்டுள்ளது. அடித்தவர்கள் யார் என்றால், தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நகர சுத்தித் தொழி லாளிகள். கோவில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்டோர் உள்பட பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள் அல்லாதார் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தால், கர்ப்பக்கிரகம் தீட்டுப்பட்டு விடும் - சாமி செத்துப் போய்விடும் - பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டவர்கள், வாதாடியவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகி றார்கள்? சட்டம் சாதிக்க முடியாததை கரோனா சாதித்துவிட்டது என்று ஒப்புக்கொள்வார்களா? கழகத் தலைவரின் இந்த அறிவார்ந்த கேள்விக்கு என்ன பதில் இருப்பில் இருக்கிறது?


திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அதன் விவசாய சங்கம் முக்கியமாக, நாகை, திருவாரூர், செம்பனார் கோவில், மணல்மேடு (மயிலாடுதுறை வட்டம்), லால்குடி, தஞ்சை வட்டம் குறிப்பாக திருவையாறு பகுதி, மன்னார்குடி, ஆத்தூர் போன்ற பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்டது.


அச்சங்கம் வெறும் கூலி உயர்வுக்காகப் போராடும் அமைப்பல்ல - திராவிடர் கழகத்தின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்ட அமைப்பாகும். திராவிடர் கழகம் அறிவிக்கும் போராட்டங்களில் ஆண்களும், பெண்களுமாக முன்வரிசையில் நின்று, ஈடுபட்டு சிறைக்குச் செல்லும் தீரர்களின் பட்டாளம் அது!


குறிப்பாக லால்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சி. கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார் கொண்டை யம்பட்டி செட்டியார், மணக்கால் பாப்பம்மாள் பண்ணைகளுக்குள் நிலங்கள் அடக்கம். லால்குடியில் தங்கள் செல்வாக்கால் ஓர் இரயில்வே நிலையத்தையே அவர்களால் உருவாக்க முடிந்தது என்றால், தெரிந்துகொள்ளலாமே!


குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த விவசாயிகளைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, தாழ்த்தப்பட்ட விவசாயிகளை ஒடுக்கினர் - அந்த நிலையில்தான் அந்தப் பகுதியில் திராவிடர் விவசாய சங்கம் உரு வாக்கப்பட்டது - தந்தை பெரியார் ஆலோசனைப்படி குடந்தை ஏ.எம்.ஜோசப் முன்னின்று பணியாற்றினார்.


‘‘விளைச்சலில் பாதியைக் கொடுங்கள்'' என்ற முழக்கம் விண்ணப் பிளந்தது. குத்தகைத் தொகையைப் பண்ணை கடுமையாக உயர்த்தியது - முடியாது என்று முஷ்டியைத் தூக்கினர் திராவிட விவசாயத் தொழிலாளர்கள்.


இரவு நேரத்தில் அரிக்கேன் விளக்கில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தந்தை பெரியார் கொள்கைகள் விவசாயிகள் மத்தியில் வேகமாகப் பரவின. துண்டறிக் கைகள், ஊர்வலங்கள் என்று களேபரம் ஆகியது.


பண்ணையாரின் நடவடிக்கைகளும், அத்துமீறின. ஒரு கட்டத்தில், ‘‘ஆண்டைகளிடம் இனி கெஞ்சுவதில்லை; விளைச்சலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுவோம்!'' என்ற கட்டத்திற்குப் போராட்டம் புது முறுக்கேறியது. பண்ணையர், கொடிக்கால் விவசாயி களைத் திரட்டி மோதவிட்டனர் - 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டனர் என்பது வரலாறு.


திராவிட விவசாய சங்கத்தின் உறுப்பினராவதற்கான நிபந்தனை என்ன தெரியுமா?


‘‘பொய் பேசக்கூடாது. குடிக்கக் கூடாது, ஜாதி, தீண்டாமையை எதிர்க்கவேண்டும்; குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டும்!'' எந்த அமைப்பிலும் இல்லாத இந்த நெறிகள் வகுக்கப்பட்டன.


திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் திருவெறும்பூர் ‘பெல்' நிறுவனத்தில் தொழிற்சங்கம் உன்னதமானது; தொழிலாளர்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துகள் பரப்புரை முதன்மையானது. மதவாத சக்திகளின் வாலை ஒட்ட நறுக்கும் வாட்படையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.


‘பெல்' நிறுவனம் அங்கு உருவாவதற்குக் காரணமாக இருந்த காமராசர் உருவப்படத்தை நிறுவனத்தில் திறக்க, நிர்வாகம் மறுத்துவந்த நிலையில், திராவிடர் கழகம், திராவிடர் தொழிலாளர் கழகம் மறியலுக்குத் தோள் தட்டியது. வழிக்குவந்தது நிர்வாகம் - உள்ளே பச்சைத் தமிழர் காமராசர் இப்பொழுது ஒளிவீசுகிறார்!


ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது அதன் முதன்மையான முழக்கம். எத்தனை எத்தனை போராட்டங்கள் - பொதுக் கூட்டங்கள் - மாநாடுகள் சொல்லி மாளாது. பல வெற்றிப் படிக்கட்டுகளை ஏறினாலும், நிர்வாகம், நிர்வாகத்தின் செலவில் உச்சநீதிமன்றம் வரை சென்று கதவைத் தட்டுகிறது. எனினும், இறுதி வெற்றி நமக்குத்தான் என்பதில் அய்யமில்லை.


‘பெல்' நிறுவனத்தில் மட்டுமல்ல, ‘ஒப்பந்தத் தொழிலாளர்' என்ற கெட்ட வார்த்தை அகராதியிலருந்து நீக்கப்படும்வரை ஓயமாட்டோம்! ஓயமாட்டோம்!!


போக்குவரத்துத் துறையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின்  பணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். இந்தச் சாதனையில், மறைந்த திண்டுக்கல் மானமிகு தோழர் கே.ஜி.சுப்பிரமணியம், திண்டுக்கல் நாகலிங்கம் ஆகியோரை மறக்க முடியுமா?


கழகத் தலைவர் கலந்துகொள்ளும் காணொலிகள் வெறும் காட்சிகள் அல்ல - கருத்துச் சுரங்கத்தின் கனமழையே!


 


சமத்துவக் கோட்பாடு


‘‘ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள், நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சம நிலையும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், நாட்டில் எல்லாத் துறைகளிலும் -


சமதர்மம், சம ஈவு, சம உடைமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு, சம நுகர்ச்சி, சம அனுபவம் இருக்கவேண்டும்! ஏற்படவேண்டும்!! ஏற்படுத்தப்படவேண்டும்!!!''


- (தந்தை பெரியார், ‘விடுதலை' 13.1.1965)


தொழிலாளி - முதலாளி!


பொருளாதார நிலையில், மனிதர்க்குத் தேவையான அடிப்படைகள் நிறைவு செய்யப்படல் - இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்.


பணக்காரர் - ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கு இடமில்லாது செய்தல்.


தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி பங்காளி எனும் தன்மை நிலை நிறுத்தப்படுதல். சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.


(‘‘திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை'' -


தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டதிலிருந்து, 23.2.2019).


No comments:

Post a Comment