‘‘பெண்கள் பிறவித் தொழிலாளிகளா?''
கலி.பூங்குன்றன்
ஊரடங்கினாலும் தந்தை பெரியார்தம் சிந்தனை வயப்பட்டவர்கள் எண்ணங்கள் அடிப்படையில் அடங்கப் போவதில்லை. எந்த சூழலையும் தங்களுக்கு அடிமையாக்கி ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல் படக் கூடியவர்கள்.
‘விடுதலை'யை வழக்கம்போல அச்சிட்டு அஞ்சலிலோ, இரயிலிலோ அனுப்ப முடியாதா?
அதனால் என்ன? இணையதளத்தின்மூலம் கொண்டு வருவோம். இதில் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்து இருக்கிறோம்; புதிய அனுபவத்தோடு அடுத்த கட்ட பயணத்துக்குத் தயாராகிவிட்டோம்.
நமது கழகத் தலைவர், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், கழகச் சொற்பொழிவாளர்கள், மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், கழக சட்டத்துறைப் பொறுப்பாளர்கள், கழக இளைஞரணி பொறுப்பாளர்களின் சந்திப்புக்குப் பின், நேற்று - மே தினமான தொழிலாளர் நாளில் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் பொறுப்பாளர்களையும், தொழிலாளரணி பொறுப்பாளர்களையும் காணொலிமூலம் கண்டு நலம் விசாரித்து, கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகள் குறித்து உரத்த சிந்தனைகளையும் எடுத்துக் கூறிய தோடு, கரோனா தொற்று நோய்க் காலத்தில் - நம்முடைய சிந்தனையும், செயல்பாடுகளும் எந்தத் திசையில் இருக்கவேண்டும் என்பதற்கான வகுப்பறை யாக மாற்றி, பல்வேறு கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக் கூறினார்.
கழகத் தலைவர் மிகச் சரியாகக் கூறியதுபோல, பெண்கள் என்றால், பிறவியிலேயே அடிமைகள் - ஆண் எஜமானன், பெண் அடிமை - சம்பளம் இல்லாத வேலைக்காரி என்ற நிலைதானே!
அதேபோல, திராவிடர்கள் என்றாலே - சூத்திரர்கள்தானே. சூத்திரர்கள் என்றாலும், பிறவித் தொழிலாளர்கள்தானே!
பெண்களைப்பற்றி மனுதர்மம் என்ன கூறுகிறது?
‘பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்,
யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்,
கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது'
(மனுதர்மம் அத்தியாயம் 5; சுலோகம் 148).
இதன் பொருள் என்?
பிறப்பிலேயே பெண்கள் அடிமை என்பதுதானே!
கணவன் சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாகப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9; சுலோகம் 30).
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பிரம்மகுமாரிகள் மாநாட்டில் (8.11.2016) என்ன பேசினார்?
‘‘பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆதலால், அவர்கள் அரசு அலுவலகப் பணிகளிலிருந்து விடுபட்டு, அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபடவேண்டும். எதற் கெடுத்தாலும் ஆண்களோடு போட்டி போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்''
என்று கூறவில்லையா? அவர் காஞ்சி மடம் வந்தபோது, திராவிடர் கழகம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த நிலையில், மனுசன் பயணத்தையே ரத்து செய்யவில்லையா?
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் குறைவானவர்கள் என்று கொலை வழக்கில் சிக்கிச் சிறைக்குப் போன காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினாரா, இல்லையா?
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய திருவாளர் மோகன் பாகவத் என்ன சொன்னார், நினைவிருக்கிறதா?
‘‘ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்து, அவர்களைவிட அதிகம் சம்பாதிக் கிறார்கள்.
அத்தகைய பெண்கள் கணவன் பேச்சைக் கேட்பதில்லை. அத்தகைய பெண்களை விவா கரத்து செய்யவேண்டும் என்று பேசினாரா, இல்லையா?''
பெண்கள் என்றால் சம்பளம் இல்லாத வேலைக்காரியா என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தையும் எண்ணிப் பாருங்கள்!
பெண்களுக்கு எதிரானவற்றில் தலையிட்டு ‘கலகம்' செய்வது கழகம்தானே! மனுதர்ம சாஸ்திரத்தைக் கழகப் பெண்களே தலைமை தாங்கி பலமுறை எரிக்கவில்லையா?
கற்பு என்பது பெண்களுக்குத் தேவையில்லை என்று தந்தை பெரியார் சொன்னதுபோலவும், பெண்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்கத் தேவையில்லை - ‘ஃப்ரி செக்ஸ்' என்று கூறி, எப்படியும் நடந்துகொள்ளலாம் என்று பெரியார் சொன்னது போலவும், ‘தீவிரக் குழுக்கள்' என்ற பெயரால் தந்தை பெரியார், காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தத் தலையெடுத்துள்ளனர் என்பது நம் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்தப் போக்கு உண்மைக்கு மாறானது; ஒழுக் கத்தை ஓம்புவதில் தந்தை பெரியாருக்கு நிகர் அவரே!
உரிமை என்பதை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. குளியல் அறையில் நிர்வாணமாக இருக்க உரிமை உண்டு என்பதால், எந்த இடத்திலும் அப்படி இருக்க உரிமை உண்டு என்று கூற முடியாது அல்லவா என்று புரியும்படியான எடுத்துக்காட்டைக் கூறினார் கழகத் தலைவர் ஆசிரியர்!
‘கற்பு' என்பதுபற்றி தந்தை பெரியாரின் பார்வை என்ன?
‘‘திருமணத்துக்குச் சம்பந்தப்படாத ‘கற்பு' என்பது ஒன்று பெண்கள்மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதை சுகாதாரத்தையும், சரீரத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன். என்றாலும், இன்று அந்தக் கற்பு முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால், கற்பு ஆண் களுக்கு வற்புறுத்தப்படுவதில்லை என்பதிலி ருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மேலும் உதாரணம் என்னவென்றால், இந்துக் கடவுள்கள் என்பவற்றுக்கும்கூட - ஆண் கடவுளுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த - அதாவது ‘ஒரு பிறவிக்கு ஒரு நீதி' என்கின்ற கற்பு முறை அடியோடு ஒழிக்கப்படவேண்டும்.
இந்தத் தனி உடைமைத் தேசத்தில் இது ஒழிக்கப்படுவது என்பது சுலபத்தில் ஏற்படக் கூடிய காரியம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், பெண்களுக்குத்தான் கற்பு; ஆண் களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத் துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது.
ஏனென்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை.''
(‘குடிஅரசு', 28.12.1929).
இதன்மூலம் ‘‘கற்பு என்பது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒழுக்கம். அது ஒரு வழிப்பாதையாகி, ஒடுக்குமுறை கருவியாக வும் ஆகக்கூடாது'' என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாகும்.
தான் ஒருமுறை கனடா நாட்டுக்குச் சென்றதுபற்றி ஒரு தகவலைச் சொன்னார் தமிழர் தலைவர்.
நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் தோடு ஒப்பந்தம் ஒன்றைப் போட கனடாவுக்குச் சென்றோம். பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் வந்தனர். அதில் சில பெண்களும் உண்டு.
கனடாவில் ஒருவர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த வீட்டில், ஓர் அம்மையார் மட்டுமே தனியாக இருந்தார்.
காலை உணவு, மதிய உணவு தயாரிப்பில் நமது பல்கலைக் கழகப் பேராசிரியைகள் ஈடுபட்டிருந்தனர். உணவு பரிமாறியதும் அவர்கள்தான். அப்பொழுது அந்த வீட்டுக்குரிய அம்மையார் எங்களைப் பார்த்துக் கேட்டார், ‘நானும் காலை முதலே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். வந்ததிலிருந்து எல்லா வேலை களையும் உங்கள் பெண்களே செய்து கொண்டிருக் கின்றனர். ஏன் ஆண்கள் உதவி செய்யமாட்டீர்களா?' என்று கேட்டபொழுதுதான் எங்களுக்குச் சுள்ளென்று உறைத்தது.
அன்றிலிருந்து குறைந்தபட்சம் சாப்பிட்ட தட்டைக் கழுவும் பழக்கத்தில் ஈடுபடுவதுண்டு.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பிள்ளைகளை வீட்டு வேலைக்குப் பழக்குங்கள். தங்கள் படுக்கைகளை விரிப்பது - சுருட்டுவது, சாப்பிட்ட தட்டைக் கழுவுவது மற்றும் சிறு சிறு வேலைகளில் பழக்கவேண்டியது அவசியம்; அவர் களுக்கும் அவை நல்ல பழக்கமாகவும், பண்பாடாகவும் அமையும் - எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும் என்றார் கழகத் தலைவர்.
பொதுவாக ஒரு குடும்பம் சிறப்பாக நடைபெறு வதற்குச் சிக்கனம் அவசியம். ஆடம்பரம் அறவே கூடாது.
அலங்காரம் என்பதில்கூட தந்தை பெரியாருக்கு மாறுபட்ட கருத்துண்டு. நமது இயக்கப் பெண்கள்கூட நகைகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது கசப்பான உண்மை.
அதேநேரத்தில், ‘டீசென்சி'பற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?
‘டீசென்சி - சுத்தம் - கண்ணுக்கு வெறுப் பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால், அது அதிக பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த ‘பேஷன்' அலங்காரத்தால் அல்ல என்றும், சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் உணரவேண்டும்.'
(திருப்பத்தூரில் ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா
திருமண விழாவில், ‘குடிஅரசு', 21.9.1946)
என்று தந்தை பெரியார் கூறுவதில் உள்ள இயல்புத் தன்மையை, கண்ணியத்தைக் கண்ணுற வேண்டும் - ஏன் கருத்தூன்றவும் வேண்டும்.
அதேநேரத்தில், இந்து மதப் புராணங்கள் என்ன கூறுகின்றன?
‘‘ஸ்திரீகளுக்கு மறைவான இடமும், புருஷர் களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ‘ஸ்திரீகள் பதிவிரதைகளாக' இருக்க முடியு மாதலால், பெண்களை வெகு ஜாக்கிரதையாகக் காவல் காக்கவேண்டும்' என்பதாகத் தேவர் களிடத்தில் சொல்லி, சத்தியத்தைக் காப்பாற் றினதாக இந்து மதம், அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான ‘மகாசிவபுராணம்' சொல்லுகிறது. அதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும், அதாவது துரோபதையும், அருந்ததி சொன்னதையே தான் சொல்லி, சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது!
(‘குடிஅரசு, 22.8.1926).
திராவிடர் கழகம் - இந்து மதம் உள்ளிட்டவைகளை எதிர்ப்பதன் பின்னணியை, ஆண்களைவிட பெண்கள் முக்கியமாக முதன்மையாகப் புரிந்துகொண்டு வெறுக்க வேண்டாமா?
குறிப்பிட்ட வயதுவரை தம் பிள்ளைகளில் ஆண் - பெண்களை சகஜமாகப் பழகவிட்டு, குறிப்பிட்ட வயதுக்குப் பின் ஆண் பிள்ளைகளிடமிருந்து பெண் பிள்ளைகளை ஒதுக்கியும், வித்தியாசமாகக் கண் காணிப்பதுபற்றியும்கூட தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளதைக் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.
பெண் குழந்தை பிறந்தால் கொல்லும் உசிலம் பட்டிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. தரும புரியிலும், மதுரையிலும் நேரடியாக நாம் களத்தில் இறங்கியதுபோல, எங்கெங்கு பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நம் பணி வேகமாகத் தொடரப்படவேண்டும்.
மற்ற மற்ற அமைப்புகளில் உள்ள பெண்களுக்கும், நமது இயக்கப் பெண்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு - கொள்கை ரீதியாக வாழக் கூடியவர்கள் - வாழ்ந்து காட்டக் கூடியவர்கள் நமது இயக்கப் பெண்கள். இன்றும்கூட கீழத்தஞ்சை மாவட்டத்தில் உள்ள நமது விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த பெண்களை எடுத்துக் கொள் ளுங்கள். இயக்கம் ஒரு போராட்டம் என்று அறிவித்தால், ஆயிரக்கணக்கில் அணிவகுத்து வரக்கூடியவர்கள் என்று குறிப்பிட்ட கழகத் தலைவர் அவர்கள், கரோனாவால் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு நமது இயக்கத்தினர் உதவிக் கரம் நீட்டவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மகளிரணி - மகளிர் பாசறையைச் சேர்ந்த பெண்கள் காணொலிமூலம் கழகத் தலைவரின் உடல்நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தனர். தாங்களும் நலமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டபோது, கழகத் தலைவர் பெருமகிழ்ச்சி கொண்டார்.
நமது கழக மகளிர் அணியினர் ஆங்காங்கே செய்துவரும் உதவிகள்பற்றியும் குறிப்பிட்டனர். முதியோர் இல்லத்திற்குத் தொடர்ந்து உணவு அளித்து வருவதாக வடலூர் ரமாபிரபா கூறினார்.
திராவிடர் கொள்கை அறிக்கை
ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக, பெண்கள், திருநர் (திருநங்கை, திருநம்பி) உள்பட கல்வி, உத்தியோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.
தற்போதைய நிலையில், வழிபாட்டில் அர்ச்சகத் தன்மையில், ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும், பால் வேறுபாடும் அற்று அனைவருக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!
(தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில், 23.2.2019 அன்று வெளியிடப்பட்ட
திராவிடர் கொள்கை அறிக்கையிலிருந்து)
No comments:
Post a Comment