சற்றே சிந்தியுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 4, 2020

சற்றே சிந்தியுங்கள்!

மனிதமா? மனிதர்களா?



கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு என்பது ஒரு முக்கிய தேவை; மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுவதுதான் சிறந்தது. இதுவரை இதற்கென தனி தடுப்பு - ஒழிப்பு, மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்றான கரோனாவிலிருந்து நம்மையும், பிறரையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி என்று மருத்துவ அறிஞர்கள் கூறுவது, முற்றிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா!


உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் கொள்வதும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவு வதும், தள்ளி நிற்றல், முகக் கவசம் போன்றவை யோடு வீட்டிற்கு வெளியே அவசியம் ஏற்படும் போது செல்லுதல் என்பது போன்ற கட்டுப்பாடு கள்தாம் நம் நலம் - மக்கள் நலம் கருதி முக்கியம்.


ஆனால், கூட்டங் கூட்டமாக காய்கறி கடை மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்குச் செல்வது, பல மனிதர்கள் தங்களது எல்லையற்ற சுயநலத் தினை வெளிப்படுத்த வெளியில் சுற்றுவது, கறி விருந்து சாப்பிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பொறுப்பின்றி, நிலைமையின் தன்மை விபரீதமாகப் போய்க் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் நடந்துகொள்வது, இதுதான் சரியான நேரம் பணம் சம்பாதிக்க என்றும் கருதி, விலை வாசிகளை உயர்த்தி மக்களின் அவசரத் தைப் பயன்படுத்தி சுரண்டல் நடத்துவது போன்ற  நிலை களை நினைத்தால், வெட்கமாக இருக்கிறது!


ஊரடங்கை மீறியவர்கள் 4 லட்சம் பேர் என்றால், இது ஒரு சமூக அவமானம் அல்லவா?


மனிதர்களின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது,


ஆனால், மனிதம் சிறுத்துக்கொண்டே தேய் கிறது!


உலக நாடுகளையே பல லட்சம் பேரை பலி கொண்ட கரோனா தொற்றிலும்கூட - பல பெரிய  நிலைகளில் உள்ளவர்கள் பலரும் வேடிக்கை மனிதர்களாகவே இருக்கின்றனர்.



மனிதர்களின் எண்ணிக்கை பெருகிய அள வில், மனிதம் ஏனோ பெருகவில்லையே என்ற சிந்தனையோடு தந்தை பெரியார் என்ற மாமனி தரின் பாடங்களை சற்றே புரட்டினேன்.


மற்ற காலங்களைவிட இந்தக் காலகட்டத்தில் அவசியம் படித்தால் மட்டும் போதாது; கற்க வேண்டும் - பெரியார் பேசுகிறார் 70 ஆண்டு களுக்கு முன்பு - கேளுங்கள்; மனிதம் என்பதன் தேவை நமக்குப் பளிச்சென்று புரியும்.


‘‘வாழ்க்கை என்ற ஏணியின் அடிப்படியில் கால் வைக்கும்பொழுது நாம் எங்கே ஏறுகிறோம், கடைசியாக எங்கே போவோம் என்று அறியக் கூடவில்லை. நாம் ஏறி முடித்தால்போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகவேண்டும்; அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்க வேண்டும் என்று, அதைப் பிடித்தவுடன், அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்கவேண்டும் என்று எல்லையே இல்லாமல், இலட்சியமற்ற முயற்சியி லேயே காலம் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிந்து இறந்து போகிறோம். இப்பேர்பட்ட வாழ்க் கையால் ஒரு பலனும் கிடையாது.


சமுதாயத்திற்குப் பயன் தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்ற வர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ் வென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள்; மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இதுதான் முக்கியமானதாகும். இதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி மனிதவாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இது என்றும் கூறலாம். ஆனால், நாம் இதை யாரிடமும் காண்பது கிடையாது. கண்டுபிடிப்பதென்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரைக் காண்பதே மிகக் கஷ்டமான காரியமாகும்.


நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது சமுதாயமும் வாழவேண்டும்; மற்றவர்களின் பிள் ளைகளும் வாழவேண்டும். நம் பிள்ளைகள் மட் டும் சுகம் அடைந்தால் போதாது; ஏனையவர்களின் வாழ்வு சுகம் அடைய வேண்டும். இதற்கு ஏதாவது நம்மால் ஆனமட்டிலும், நம் வாழ்க்கை அவர் களின் நன்மைக்கு அமையும் முறையில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதே முக்கிய மானது. இந்த வேலையைச் செய்பவர்கள் மிகக் குறைவு; காண்பது அரிது.''


- 1956 இல் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அய்யா உரை (17.3.1956).


தோழர்களே,


மனிதம் என்பது என்ன என்பதற்கு எவ்வளவு அருமையான விளக்கம் பார்த்தீர்களா? கரோனா அச்சுறுத்தல் உள்ள இன்றைய உலகச் சூழலில், நம்முடைய சிறு பங்குதான் என்ன - மற்றவர்கள் சுகத்துக்கு என்று எண்ணுங்கள் - முடிந்ததைச் செய்து மனிதம் மறையாத மனிதர்கள் நாம் என்று வாழ்ந்து காட்டுங்கள்.


அரிய வாய்ப்பு இப்போது!


No comments:

Post a Comment