கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசைக் கண்டிக்கிறோம்!
தலைநகரில் தமிழர் தலைவர் - தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடெங்கும் கருப்புச் சின்னம் அணிந்து முழக்கம்!
சென்னை, மே 7 கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கை எடுக்காதது- மதுக்கடைகளை மீண்டும் திறப்பதன்மூலம் தொற்று நோயை மேலும் பரவச் செய்வது போன்ற வகைகளில், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் கட்சித் தலைவர்களும், பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அவரவர் வீடுகளின்முன் அய்ந்து பேர் போதிய இடைவெளிவிட்டு நின்று முழக்கமிட்டனர்.
தமிழர் தலைவர் கருப்புக் கொடியுடன்
ஒலிமுழக்கம்
சென்னை அடையாற்றில் உள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இல்லத்தின் வாயிலில் இன்று (07.05.2020) காலை 10 மணிக்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கையின்மையையும், மதுக்கடைகளை மீண்டும் திறப்பதன் மூலம் தொற்று மேலும் பரவும் வாய்ப்பினையும் ஏற்படுத்தும் அ.இ.அ.தி.மு.க. அரசைக் கண்டித்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையேற்று ஒலி முழக்கம் எழுப்பினார்.
கழகத் தலைவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞர் அணி தலைவர் த.வீரசேகரன், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராஜன் ஆகியோர் தனிமனித இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்திப் பங்கேற்று 15 நிமிடங்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.
சென்னை பெரியார் திடல்
சென்னை பெரியார் திடல் இரு நுழைவாயிலில்களிலும் இன்று (07.05.2020) காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில், கருப்புக் கொடி ஏந்தி, ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கருப்புக் கொடியுடன் திராவிடர் கழக மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகப் பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச் செல்வி, தோழர்கள் சி.காமராஜ், வே.சிறீதர் ஆகியோர் ஓர் அணியாக ஒரு வாயிலிலும்,
பெரியார் சமூகக் காப்புஅணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், சு.விமல்ராஜ், காரல்மார்க்ஸ், ஜெ.ஆனந்த், இருதயநாத், ச.விஜய், மு.பவானி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் இரு அணிகளாகப் பிரிந்து பெரியார் திடலின் மற்றொரு வாயிலிலும் தனி மனித இடைவெளியுடன் பங்கேற்று 15 நிமிடங்கள் ஒலி முழக்கமிட்டனர். பின்னர் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
தி.மு.க. தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தின்முன்பு கருப்பு உடை அணிந்து கைகளில் பதாகை ஏந்தி, ஒலி முழக்கமிட்டார். அவருடன் அவரது துணைவியார் துர்கா, திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர்
கே.எம்.காதர்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலவன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கருப்புச் சின்னம் அணிந்து, தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment