வங்கிக் கடன் தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

வங்கிக் கடன் தள்ளுபடி


வங்கிக் கடன் தள்ளுபடி (Loan Waiver), கணக்கியல் தள்ளுபடி (Loan Write off) - வேறுபாடு என்ன?


சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வங்கி கடன் கட்டாதவர்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும் ரிசர்வ் வங்கி (RBI) மூலம் தகவல் பெற்றிருந்தார்.


வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா மற்றும் இங்கே உள்ள பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரத்து 607 கோடி வங்கிக் கடன் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி - Write off செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


இதனிடையே இது நடைமுறைகளின்படி கணக்கி யல் ரீதியாக  தள்ளுபடி (Loan Write off) செய்வதுதான் என்றும், அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும் என்றும், கடன் தள்ளுபடி (Loan Waiver) செய்யப்படவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


கணக்கியல் ரீதியாக  தள்ளுபடி (Loan Write off)


ஒரு நபர், தனது தொழில் நிறுவனத்திற்கு அல்லது தொழில் துவங்க என வங்கியில் வாங்கும் கடனை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை யைச் செலுத்தாவிட்டால், வங்கிக்கு திரும்பி வராத கடன்கள் மற்றும் நஷ்டம் என்பதாக, அதாவது பயனற்ற சொத்து (Non-Performing Assets) என்று வகைப்படுத்தப் படும். இது மேலும் தொடருமானால், அதாவது தொடர்ந்து மாதத் தவணையைக் கட்டவில்லை என்றால், இந்த பயனற்ற சொத்து அதிகமாக அதிகமாக இருப்பு நிலை அறிக்கை காண்பிக்கும் தொழிலின் நிதிநிலை மிக மோசமாக இருக்கும்.


நீண்ட நாட்களாகத் திரும்பி வராத சில வாராக் கடன்கள் write off  செய்யப்படுகின்றன. இந்த write off என்பதன் பொருள் அது இருப்பு நிலை அறிக்கை யிலிருந்து நீக்கப்படுகிறது என்பதுதானே தவிர, கடன் வாங்கியவர் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று பொருள் அல்ல.


வங்கி தொடர்ந்து அந்த நபரைத் தொடர்பு கொண்டு கடனைச் செலுத்த எடுக்கும் முயற்சி தோல்வி யடைந்தால், வங்கியின் ஆண்டு இருப்பு நிலை அறிக்கையில் அந்த நபர் கட்டாத கடன் தொகைக்கு ஈடாக ஒதுக்கீடு (provisioning) செய்திட வேண்டும்.


இது வங்கியின் லாபத்தைப் பாதிக்கும். பின்னர், அந்த நபர் கடன் தொகையை திருப்பிக் கட்டும்போது, அவரது கடன் தொகையில் வரவு வைக்கப்படும். வங்கியின் லாபக் கணக்கில் சேர்க்கப்படும்.


கடன் தள்ளுபடி என்றால் என்ன?


கடன் தள்ளுபடி என்பது, சில சூழ்நிலைகளின் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுவது. எடுத்துக்காட்டாக,  விவசாயக் கடன். இயற்கைச் சூழல் - அதிக மழை அல்லது பஞ்சம் காரணமாக விவசாயிகள் பலரும் பாதிக்கப்படும் நிலையில், அரசே அந்தக் கடனைத் தள்ளுபடி செய்திடும்.


கடனை அரசு write off செய்துவிட்டது என்று கூறியவுடன், அவர்கள் வாங்கிய கடனை வங்கிகள், முற்றிலுமாகத் தள்ளுபடி செய்துவிட்டன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அக்கடனை வசூலிக்கும் பணி தொடர்ந்து நடைபெறத்தான் செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


வங்கி திவால் (Insolvency and Bankruptcy Code) சட்டப்படி, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் படும். கடன் வாங்கியவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் பணத்தை கடன் வாங்கியவர்களின் பெயரில் வங்கிகள் வசூலிக்கும்.


ஆனால், இது நாள் வரையில் இவ்வாறு வங்கிக ளால் கணக்கியல்ரீதியான தள்ளுபடி Write off என அறிவிக்கப்பட்ட பெரும் தொழில் நிறுவனங்களின் கடன் தொகை வசூல் செய்யப்பட்டதா? என்றால், அதில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மாறாக, ஒவ்வோர் ஆண்டும்  பெருமுதலாளிகள் பெற்ற கடன் தொகை பல்லாயிரக்கணக்கான கோடிகள் வாராக் கடனாக அதிகரித்து வருகின்றன.


அண்மையில் யெஸ் வங்கி திவாலான கதை பலருக்கும் நினைவு இருக்கும். அந்த வங்கி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்க முடியாமல் திவால் ஆனது. அதற்கு முன்னர் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டறவு வங்கி. இவை தனியார் வங்கிகள்.


ஆகவே, கணக்கியல்ரீதியான தள்ளுபடி Write off என்பது முதல் கட்டம். கடன் தள்ளுபடி waiverஎன்பது பின்னர் வரும். அவ்வளவு தான். நிதி அமைச்சர் சொல்வது போல் அவ்வளவு எளிதாக இந்த பிரச்சினையைக் கடந்துவிட முடியாது.


-குடந்தை கருணா


No comments:

Post a Comment