மூத்த கல்வியாளர்கள் சொல்வதென்ன?
என்னதான் ஆச்சு தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு? 10 ஆம் வகுப்புத் தேர்வு தேதிகளை அறிவிப்பதும், அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்த பின், அந்த அறிவிப்பைப் பின்வாங்கி, மாற்றுத் தேதியை அறிவிப்பதுமாக இதுவொரு தொடர்கதை போலவே தொடர்கிறது. இதனால் மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதும் தடுமாறுகின்றனர். இப்படிபட்ட பேரிடர் காலத்தில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்று, மூத்த கல்வியாளர்களிடம், கைபேசி மூலமாகக் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராக இருக்கும் கல்வியாளர் மா.அழகிரிசாமி:
"தேர்வைப் பொறுத்தவரையில் மாணவர்களுக்குப் பள்ளிச் சூழலில், ஆசிரியர் களின் மேற்பார்வையில் பாடங்களை மீள்பார்வை செய்துகொள்ளும் வாய்ப்பைத் தரவேண்டும். பிறகு தேர்வுக்கென்றே மாணவர்களைத் தனியாகத் தயாரிக்க வேண்டும். Forgetting starts just after learning என்று சொல்வார்கள். நீண்ட நாள் விடுமுறையில் மாணவர்கள் பாடங்களையே மறந்திருப்பார்கள். இது எல்லாருக்குமே இயல்புதான். தேர்வு மாணவர்களுக்காகத்தானே வைக்கிறோம். அவர்களே தயாராக இல்லாதபோது எப்படி நடத்துவது? மாணவர்களை முதலில் உளவியல் ரீதியாகத் தயார் செய்ய வேண்டும்.
மேலும் மாணவர்கள் வேறு மாநிலங்களில், வேறு மாவட்டங்களில் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு பாடத்தின் மீதான ஆர்வம் போயிருக்கும். ஆர்வத்தை இவ்வளவு நீண்ட நாள் இடைவெளியில் தக்க வைக்க முடியாது. ஆனாலும், மாணவர்கள் பள்ளிக்குப் போகவேண்டும். முழுமையாக வீட்டில் இருந்தேகூட படிக்க முடியாது. இந்த கரோனா கொள்ளை நோய்க் காலம் முடிந்ததும் மாணவர்களைப் பாதிக்காத வண்ணம் தமிழக அரசின் பள்ளிகளில் பாடங்களை நடத்துவதற்கும், தேர்வுகள் நடத்துவதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.”
பட்டதாரி ஆசிரிய மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்ற கல்வியாளர் பி.ரத்தின சபாபதி:
”இருக்கின்ற நிலைமையில் பெரிய இழப்பெல்லாம் வந்துவிடாது. ஒரு பேரிடர் வரும்போது, பாதுகாப்புதான் முக்கியம். என்றைக்கு இயல்பு நிலை திரும்புகிறதோ அன்றைக்கு அதைப் பற்றி யோசிக்கலாம். இப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதைத்தான் முதலில் பார்க்கணுமே தவிர, படிப்பு போயிடும் என்று எண்ணவேண்டியதில்லை. இது தமிழ்நாடு மட்டுமில்லை, இந்தியா மட்டுமில்லை, உலகத்துக்குகே உள்ளது. நாளைக்கு இதனால ஒரு சிக்கல் வருதுன்னா, அதுக்கு அன்றைக்கு தளர்வு கொடுத்திடலாம். ஆகவே இப்போதைக்கு தேர்வுகள் தேவையில்லையென்று நான் கருதுகிறேன்.
ஒன்றிய அரசுதான் இதில் முடிவுகள் எடுக்கிறது. ஆகவே தமிழக அரசு, மாநிலத்தின் நிலைமைகளைச் சொல்லிக் கேட்காமல், ஒன்றிய அரசு சொல்வதைக் கேட்டால் போதுமென்று இருக்கலாம். அதற்கு எதிர்ப்புகள் வந்தவுடன், அதை மாற்றி அறிவிக்கலாம். அல்லது அரசுக்கு ஆலோசனைகள் சொல்பவர்கள் சரியில்லை. ஒன்றிய அரசுக்கு இங்கிருக்கும் நிலைமைகள் தெரியாது. இங்கிருக்கும் ஆசிரியர் குழுக்கள், முக்கியமான தலைவர்கள் இவர்களுடன் கலந்தாலோசித்து, சூழ்நிலைக்கு ஏற்ப நாம்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று சொல்லக்கூடாது.
இணையத்தில் கல்வி என்பது ஏமாற்றுதான். நேரில் சொல்லிக் கொடுத்தாலே மாணவர்கள் சரியாகப் படிக்க மாட்டார்கள். இதில் உருப்படியாக எதுவும் நடக்காது.”
ஜேக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்து, நடுவணரசு கல்விக் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
”எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊரடங்கு நடைமுறைப்படுத்தியதால் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும், மாணவர்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கின்றனர். சில நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் ஊரடங்கு காலமும் பயனுள்ளதாக அமைந்திடத் திட்டமிட்டிருக்கலாம். மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே கல்விச் செயல்பாடுகளில் ஈடுபட வழிகாட்டி இருக்கலாம். மாணவர்க்குப் படிக்க நூலகத்தினின்று நூல்கள் வழங்கி இருக்கலாம். மாணவர்கள் ஊரடங்கு காலத்தைப் பயனுள்ள வகையில் கழித்திடத் திட்டமிட்டிருக்கலாம். இவை ஏதும் நடைபெறாததால் ஊரடங்கு காலம் கற்றலில்லாக் காலமாக மாறிவிட்டது.
கல்வி அமைச்சர், பொதுத் தேர்வினை நடத்த முனைகின்றார். கற்பித்தல் இல்லா நாட்கள், கற்றலில்லா நாட்கள். பள்ளி ஆண்டின் முக்கியமான காலத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளிலும் பாடத்திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி விட்டார்களா என்று அறியக்கூட இயலாது உள்ளது. பள்ளிக்குப் பள்ளி வேறுபாடுகள் இருக்கும். முக்கியமாக கிராமப்புற மாணவர்க்கு தேர்விற்காகப் பயிற்சி தேவைப்படும். அது மறுக்கப்பட்ட வேளையில், மாணவர் தம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த இயலாத நிலையில் இருப்பர். தேர்வினை எதிர்கொள்ள பாட அறிவோடு, மனத்திறனும் அவசியம். கொரானா அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ள பொழுது அமைதி குலைந்த நிலையில், மாணவர் கற்றதை மறப்பது இயற்கை. கொரானா, நமது கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற உதவியுள்ளது. அது பற்றிய சிந்தனை ஏதுமில்லாமல் கொரானா காலத்தை வீணடித்து விட்டோம். பள்ளிக் கல்வி இயக்ககம் வழிகாட்டும் நிலையில் இல்லை. நெ.து.சுந்தரவடிவேலு இயக்குநராக இருந்தபொழுது, தொடர் பயணங்கள் மேற்கொண்டு, களநிலையை நன்கறிந்து ஆசிரியர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்குத் தக்க வழிகாட்டுதல் அளிப்பதைத் தன் முதற்கடமையாகக் கருதிச் செயல்பட்டார். இன்று இயக்ககம் பொதுமக்களோடு எவ்வித உறவும் இல்லாத நிலையில் செயல்படுகின்றது.
கல்வி அமைச்சர், ஃபின்லாந்து சென்று வந்து அந்நாட்டுக் கல்வி முறையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதாக அறிவித்தார்.. ஆனால் நேர்மாறாகச் செயல்படுவது புதிராக உள்ளது.”
மூவரும் ஏறக்குறைய ஒன்றுபோலத்தான் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அத்தோடு கேள்விகளுக்கப்பால், கல்வித்துறையின் மீது அவர்களுக்கிருக்கும் அளப்பரிய அக்கறையால் மூவரும், வேறு சில செய்திகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
கல்வியாளர் அழகிரிசாமி, ”எதுவாக இருந்தாலும் சமவாய்ப்பு முக்கியம் என்றார். கல்வி என்பது வேலை வாய்ப்புக்காக என்றில்லாமல், சமூக நல்வாழ்க்கைக்குப் பயன்படவேண்டும்" என்றார். கல்வியாளர் ரத்தினசபாபதி, “இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் மாணவர்களின் அறிவு பெருகுகிறது. அதற்குத் தீனி போடக்கூடியவராக ஆசிரியர் மாறவேண்டும். எப்போதோ படித்த ஆசிரியர் நமக்குத் தேவை இல்லை. எப்போதுமே படிக்கிற ஆசிரியர்கள்தான் நமக்குத் தேவை.” என்றார்.
கல்வியாளர் ராஜகோபாலன், ”கல்வித்துறையில் நடைபெறுகிற மாற்றங்களைப் பார்த்தால் மனது நொறுங்கிப் போய்விட்டது. திராவிடர் கழகத்தின் தலைவரைப் போன்ற சிலர்தான் தொடர்ந்து போராடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இதைப்பற்றி பேசுவதையும், எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன்.” என்றார்.
- உடுமலை
No comments:
Post a Comment