இராமாயணம், மகாபாரதம் மற்றும் வேதங்கள் மட்டுமே பாடங்களாக இருக்கவேண்டுமாம்.
இந்த ஊரடங்கு காலத்திலும் முட்டாள் தனங்களுக்கு அளவில்லாமல் இருக்கிறது. ஒரு புறம் பத்மா சுப்பிர மணியன், "வர்ணாஸ்ரம முறை கெட்டுவிட்டது. அதனால் கரோனா வைரஸ் போன்ற கிருமிகள் பரவுகின்றன" என்று கூறிக்கொண்டு இருக்க, அலகாபாத்தைச் சேர்ந்த சாமி யார்கள் அமைப்பு இந்தியாவின் கல்வித்திட்டத்திற்கான ஒரு கொள்கையை வகுத்து மத்திய கல்வித்துறைக்குத் தீர்மானம் ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் இதன் படி செயல்பட்டால் விரைவில் உலகத்தின் வல்லரசாக அனைத்துத் துறைகளிலும் இந்தியா மாறிவிடும் என்று கூறியுள்ளார்கள்.
அந்த தீர்மானத்தில்,
"அய்ந்தாம் வகுப்பு வரை இராமாயணம் - குழந்தை முதல் பெரியவராகும் வரை எப்படி இருக்கவேண்டும் என்ற வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ள; அதன் பிறகு 8ஆம் வகுப்பு வரை மகாபாரதம் - வாழ்க்கை முறையை எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள; அதன் பிறகு 12 ஆம் வகுப்பு வரை ஸ்மிருதிகள் - கல்லூரி பருவத்தில் நான்கு வேதங்களையும் அனைத்து பருவ மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவேண்டும்.
அப்படி கற்றுக்கொடுக்கும் போது இந்தியாவில் உள்ள அனைவரும் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வணிகம், மருத்துவம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் திறம்பட செயல்படுவார்கள். இன்று அர்த்த சாஸ்திரத்தைத்தான் உலகின் அனைத்து பெரும் பல்கலைக்கழகங்களிலும் பொருளாதாரம் என்ற பெயரில் கற்றுக்கொடுக்கின்றனர்.
ஆகவே விரைவில் மத்திய அரசு இந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். அப்படி வழங்கினால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்தியா உலக நாடுகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த எடுத்துகாட்டாகத் திகழும்" என்று தீர்மானத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் வந்தது. இந்தப் பார்ப்பனிய, சனாதன, காவிக் கூட்டங்க ளுக்குத் தான் தலை கால் புரியவில்லை. இப்பொழுது ராம ராஜ்ஜியம் வந்து விட்டதாக ஒரு நினைப்பு.
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு - அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்பது இவர்களுக்குத் தெரியாதா? அரசமைப்புச் சட்டம் வலியு றுத்தும் மதச் சார்பின்மை என்பதன் மீது சத்தியம் செய்து தானே பதவி பிரமாணம் செய்கிறார்கள். இவையெல்லாம் வெறும் சம்பிரதாயம் தானா? அரசமைப்புச் சட்டத்தின் விழுமிய சரத்தினை காலில் போட்டு மிதித்துக்கொண்டு தான் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்களா?
ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதரான எம்.எஸ்.கோல்வாக்கர் 'ஞானகங்கை' (Bunch of thoughts) என்னும் நூலில் பச்சையாகவே கூறுகிறார். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மனுசாஸ்திரம் என்று. இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதம்தான் என்று குறிப் பிட்டுள்ளாரே!
அவரின் கால்வழி வந்த இந்தக் கும்பல் இவற்றைப் பேசும் தான். வாய்ப்புக் கிடைக்கும் சூழலில் அவற்றைச் செயல்படுத்தத் தயங்காதவர்களே.
450 ஆண்டு கால வரலாறு படைத்த அயோத்தியாவின் பாபர் மசூதியைத் தலைவர்கள் முன்னிலையில் அடித்து நொறுக்கிய குற்றவாளிகள் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தும் விட்டனரே! வேறு எந்த நாட்டில் இந்த அநியாயம் - கொடுமை நடக்கும்!
இவர்கள் கூறும் இராமாயணமாக இருக்கட்டும், பாரத மாக இருக்கட்டும், மனுதர்ம சாஸ்திரமாக இருக்கட்டும் - இவை எல்லாம் பார்ப்பன வருணாசிரமத்தைத் தூக்கி நிலை நிறுத்துவனதானே!
தவம் இருந்த சம்பூகன் சூத்திரன் என்பதால் அது வருணாசிரமத்துக்கு விரோதம் என்று அவரின் தலையை வாளால் வெட்டிய கொலைக்காரன்தானே இராமன்.
ஏகலைவன் என்ற சூத்திரன் வில்வித்தை கற்றுக் கொண்டான் என்பதற்காக அவன் கட்டை விரலைத் தானமாகப் பெற்றவன்தானே மகாபாரத துரோணாச்சாரி யார். சூத்திரர்கள் விபச்சாரி மக்கள் என்று கூறுவதுதானே மனுதர்மம். இந்த நிலையில், இவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமாக, அயோக்கியத்தனமான வருணாசிரமத்தை மீட்டுருவாக் கம் செய்வதுதானே! இந்தக் கூட்டத்தை ஆட்சிப் பீடத்திலிருந்து மக்கள் சக்தி கொண்டு வீழ்த்துவதைத் தவிர வேறு வழி கிடையாது - கிடையவே கிடையாது.
No comments:
Post a Comment