புரட்சிக் கவிஞரை திரிபுவாதிகளிடமிருந்து பாதுகாப்பவர் தமிழர் தலைவர்
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பேச்சு
புதுச்சேரி, மே 6. புதுச்சேரி, காரைக்கால் மண்டல திராவிடர் கழகம் சார்பில், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா மற்றும் கலந்துறவாடல் கூட்டம் ஏப். 29 ஆம் புதன்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 7.15 மணி வரை காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். புதுவை மண்டலத் தலைவர் இரா.ராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், காரைக்கால் மண்டலத் தலைவர் நாராயணசாமி, மண்டலச் செயலாளர் கிருட்டினமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து , கரோனா இடர்ப்பாடுகள் குறித்தும், கழகத் தோழர்கள் நலன்கள் குறித்து விசாரித்து உரையாடினர். அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறப்பித்த 21 கட்டளைகளைப் பின்பற்றி வருவதாகவும், வறுமையால் வாடும் கழகத் தோழர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
புரட்சிக்கவிஞர் படைப்பை காலவரிசைப்படி தொகுக்கும் பணியில் ஆசிரியர்
- இரா.ஜெயக்குமார் பேச்சு
புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிறப்புகள் குறித்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றத் தொடங்கினார். அவர் பேசிக்கொண்டிருந்த போது இணைய இணைப்பில் தடங்கல் ஏற்பட்ட நிலையில் அவரால் தொடர்ந்து பங்கேற்க இயலவில்லை.
இதனையடுத்து, புரட்சிக் கவிஞர் குறித்து கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றியபோது, தொடக்கத்தில் கடவுள் நம்பிக்கையாளராக இருந்த புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் முதன்முறையாக தந்தை பெரியார் பேச்சை கேட்ட நேரம் முதல், அவரது கொள்கைகளை தம் கவிதைகள் மூலமாகப் பரப்பத் தொடங்கினார். தந்தை பெரியாரின் உரைகளை தன் கவிதைகள் மூலம் மக்களிடம் எளிமையாகக்கொண்டு சேர்த்தார். குறிப்பாக, "இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே, மருட்டுகின்ற மதத் தலைவர் வாழுகின்ற நாட்டில் வாயடியும் கையடியும் மறைவதென்னால்?" எனப் பாடினார்.
இவ்வாறு, தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கருத்து களையும், மத எதிர்ப்புக் கருத்துகளையும் கவிதையாக பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்த்தார். இப்படி, ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கை அனைத்தையும் சாடிய புரட்சிக் கவிஞர் இனத்தின் மீதான கரிசனத்துடனும் பாடல்கள் பாடினார். இனத்தை அழிக்கும் பகைவரைத் தண்டிக்காமல் மடிந்து போவதைத் தன் கவிதை மூலமாக, 'சாகின்றாய் தமிழா சாகின்றாய், உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா சாகின்றாய்" என கொதித்து போனார்.
இப்படித் தொடர்ந்து, திராவிட இன மக்களின் மேன்மைக்காகவும், தமிழ் மொழியின் மீட்சிக்காகவும் தொடர்ந்து பயணித்தவர் தான் புரட்சிக்கவிஞர். தந்தை பெரியாரை அடையாளம் கண்டுகொண்ட புரட்சிக்கவிஞர், தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் திருமணத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய புரட்சிக்கவிஞர், ஆசிரியர் பற்றிக் கூறும் போது,
"இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை வேண்டும் வாடிக்கைதனை
அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்"
எனத்தொடங்கி ஆசிரியர் சிறப்புகள் குறித்துக் கூறி வரும் புரட்சிக்கவிஞர்,
"படிக்கும் நேரத்திலும் பார்ப்பனர் கோட்டையை
இடிக்கும் நேரம் எட்டுப்பங்கதிகம்" எனப்போற்றியுள்ளார்.
மேலும், பெரியாரின் தொலைநோக்கு குறித்து அவர் பாடியவைகளை இன்று நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
"தொண்டு செய்து பழுத்தப் பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் அவர் தாம் பெரியார்" என்றார்.
அந்த மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்பதன் அடையாளமாக, காணொலி வாயிலாக இத்தகைய அருமையான கலந்துறவாடல் நடைபெறுவதும், அதுவும் புரட்சிக் கவிஞர் பிறந்த நாளிலே நடைபெறுவதும் சிறப்புக் குரியதாகும்.
திராவிடர் இயக்க பெருங்கவியாக இருக்கக் கூடிய புரட்சிக் கவிஞரின் ஆரம்பகால கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு அவர் கடவுள் நம்பிக்கையாளர் என வாதிடுவோர் வரக்கூடும்.
புரட்சிக் கவிஞர் மீதான சரியான பார்வை என்பதை நிறுவக்கூடிய வகையில், புரட்சிக் கவிஞரின் படைப்புகளை கால வரிசைப்படி தொகுக்கும் முயற்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார். இது முழுமை பெறும்போது, புரட்சிக் கவிஞர் மீதான திரிபுவாதங்கள் முடிவுக்கு வரும் எனத்தெரிவித்தார்.
மேலும், இக்கட்டான இந்த காலகட்டத்தில் கூட ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் விடுதலை நாளேடு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு வாட்ஸ்அப்பில் வரும் விடுதலை நாளிதழைப் படித்து ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு மேல் பகிர்ந்து வருவதாகக் கூறினார்.
கழகத் தோழர்களோடு கைப்பேசியில் பேசி வருவதாகத் தெரிவித்த அவர், மாவட்டத்திலுள்ள தோழர்களோடும், உறவினர்களோடும் தொடர்பில் இருக்க வேண்டும். இயக்கப் புத்தகங்களைப் படித்துவிட்டு, படித்ததில் பிடித்தது என்பதை விடுதலைக்கு அனுப்ப வேண்டும் எனவும், உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50 சதவீதம் கழிவில் தலைமைக் கழகத்தால் வழங்கப்படுகிறது. அதற்கு உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கோயில்கள் முதலிய வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளதையும், கோயில்களுக்குச் செல்லாமலேயே மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தந்தை பெரியாரின் கொள்கை நிலைநாட்டப்பட்டுள்ளது. இதேபோல், திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றார் பெரியார். ஆனால், இன்று அரசாங்கமோ 20 பேர் தான் கூட வேண்டும் எனவும், அதற்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இதன்மூலம் பெரியாரின் கருத்துதான் நிலையானது என்பது நிரூபணமாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆசிரியர் கட்டளைகளை செயல்படுத்துவோம்: சிவ.வீரமணி உறுதி
கரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கியிருக்கக் கூடிய நிலையில், நம் தோழர்கள் காணொலி வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சிக்கு முழுக் காரணமும் தமிழர் தலைவர் ஆசிரியர்தான். ஆசிரியரிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அனைவரது நலனையும் விசாரித்து, காணொலி மூலம் கலந்துறவாடல் கூட்டம் நடத்துவதற்கு பணித்தார். இதனடிப்படையில் அறிவியல் வளர்ச்சியின் இந்த ஊரடங்கு காலத்திலும் நாம் ஒருவரை ஒருவர் காணொலி வாயிலாக நேரடியாகப் பார்த்துப் பேசுகிறோம். இந்தநேரத்தில், ஊரடங்கு முடிந்தாலும் கூட எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதற்கு நாம் இப்போதே சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.
த.சீ.இளந்திரையன் உரை
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் பேசும் போது, கரோனா காலத்தில் பல இடர்ப்பாடுகள் இருந்தாலும், தந்தை பெரியாரின் கொள்கைகள் வென்றிருக் கிறது என்றும், 1971 ஆம் ஆண்டு உண்மை முதலாமாண்டு தொடக்க விழாவில் தந்தை பெரியார் பேசும்போது, இன்னமும் நாள், கிழமை, மாதம், ஆண்டு, நேரம், காலம், ஜோசியம், சகுனம் முதலான எத்தனையோ துர்நாற்றங்கள் மக்களை கவ்விக்கொண்டிருக்கின்றன. இவைகளிலிருந்து மக்கள் விலகிச்செல்ல வேண்டுமானால் பூகம்பம், வெள்ளம், புயல், விஷநோய் முதலிய சாதனங்களால்தான் முடியுமே தவிர அறிவைக்கொண்டு திருத்த முடியுமா என்ற பயம் தோன்றுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் காரியத்தைச் செய்ய உண்மை இதழ் தொண்டாற்ற வந்திருப்பது மரண தைரியம் என்றுதான் சொல்ல வேண்டும் என பேசியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் இரஞ்சித், புதுச்சேரி இளைஞரணி தலைவர் தி.இராசா, இளைஞரணி அமைப்பாளர் பாஷா, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் தாமரைக்கோ, புதுவை நகராட்சி அமைப்பாளர் கண்ணன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நடராசன், கடலூர் மாவட்டச் செயலாளர் தென்.சிவகுமார், பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இராஜன், இளைஞரணிப் பொறுப்பாளர் பிரேம்குமார், அரியாங்குப்பம் கொம்யூன் செயலாளர் ஆதிநாராயணன், முத்தியால் பேட்டை குப்புசாமி, அல்போன்ஸ், இராஜ்குமார், பாரதிபாலு, ஆதிநாராயணன், கா.கண்ணன் உள்பட 40 பேர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
No comments:
Post a Comment