சென்னை, மே 5- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் கூறியி ருப்பதாவது:
மராட்டியத்தில் வாழும் தமிழகத் தொழிலாளர்களுடன் நடத்திய காணொலி உரையாடலில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் எனத்தெரிந்துக்கொண்டேன்.
மராட்டிய முதல்அமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் நானும் திமுகவின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் இது குறித்து கலந்தாலோசித்தோம். தங் களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே தெரிவித் துள்ளார்.
டி.ஆர்.பாலு அவர்கள் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் விவரத்தை தெரிவிக்க, மத்திய அரசும் சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தொழிலாளர்களை மீட்டு வர வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா அவர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்.
தமிழக அரசுத்தரப்பில் இருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டால், அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள், காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும், மராட்டிய அரசிடமும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கான பொறுப்பினை யும், பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்
- மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, மே 5- கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா விலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பன்னாட்டு போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் மீட்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடற்படைக் கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள் எனவும், கரோனா பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். நாடு திரும்பும் அனைவரும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை செல்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு
புதுடில்லி, மே 5- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 31ஆம் தேதி நடத்த இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை ஒத்திவைத்துள்ளது. அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தி வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) முதல் நிலை, மெயின்தேர்வு மற்றும் நேர்காணல் என 3 கட்டமாக இந்த தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே 31ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைப்பதாக யுபிஎஸ்சி நேற்று அறிவித்தது. கொரோனா ஊரடங்கு நீடிக்கப் பட்டுள்ள நிலையில் தேர்வாணைய குழுவினர் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பாக நேற்று கூட்டம் நடத்தினர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வை அறிக்கையில் `ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளதால் திட்டமிட்டபடி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நேர் காணலை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 31ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த முதல்நிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டதும் இது தொடர்பாக 30 நாட்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் காவல்துறையினருடன் மோதல்: கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தடியடி நடத்தி கலைப்பு
அய்தராபாத், மே 5- குஜராத், ஆந்திரா தெலங்கானாவில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கோரி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோவூர் பகுதியில் ஒடிசா, பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா தொற்று பரவுவதை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் 300 பேர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கோரி கோவூரில் நேற்று சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மாநில அரசு அனு மதியளித்தால்தான் சொந்த ஊர் திரும்ப முடியும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடையாத தொழிலாளர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களால் காவல்துறையினர்மீது தாக்கினர். அவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.
இதேபோல் தெலங்கானாவின் அய்தராபாத்தில் உள்ள ஷேக் பேட்டை பகுதியில் கட்டுமான தொழிலாளர்களும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரியும், 2 மாத சம்பள பாக் கியை பெற்றுத் தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் சூரத்தின் கடடோரா பகுதியில் நேற்று திடீரென வெளிமாநிலதொழிலாளர்கள் பலர் சாலையில் திரளாக குவிந்தனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
No comments:
Post a Comment