மே 7ஆம் தேதி முதல் 'டாஸ்மாக்' திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இரு வகைகளில் ஆபத்தானது! ஏதோ 40 நாள்களாகக் குடியை மறந்ததன் மூலம் அவர்கள் ஒரு புதிய பாதைக்குத் திரும்பும் வாய்ப்பு உண்டு. அதன் மூலம் குடும்பத்தினர் நிம்மதியாக இருப்பார்கள். குடும்பத்தின் பொருளாதாரமும் ஒரு வகையில் மேம்பட வாய்ப்பும் உண்டு.
குடும்பத் தலைவன் குடிகாரனாக இருக்கும் நிலையில் கரோனா போல வீட்டில் தலையெடுக்கும் அடுத்த தலைமுறையினரையும் அந்தப் பழக்கம் தொற்றி விடுகிறது.
எந்தப் பொருளில் 'குடியும் குடித்தனமுமாக வாழ்க' என்று சொன்னார்களோ தெரியாது. இந்த வகையில் திகழும் குடித்தனம் என்பது ஒருவனுடைய வாழ்வோடு பயணிக்க ஆரம்பித்து விடுகிறது.
இதனால் குடும்ப வாழ்க்கை முறையே சின்னாபின்னம் ஆகிறது. சமூக நீதிக்காகக் குரல் கொடுத்து உரிமைகளைப் பெற்றுத் தரும் அடுத்த உயர்நிலைக்குக் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சதா பாடுபட்டால், அவற்றை எல்லாம் சிதற அடிக்கும் வகையில் 'கீழ் மட்ட' நிலையில் உள்ள குடும்பங்கள் நாசமாகின்றன.
உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவனே குடித்து விட்டு வருகிறான் என்ற செய்தி எல்லாம் ஏடுகளில் வரும்பொழுது இதயம் பதறுகிறது - இதற்கு என்னதான் பரிகாரம் என்று ஏங்குகிறது.
இந்த வகையில் உயர்தட்டு நிலையில் உள்ளோர் தப்பித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கீழ்மட்ட நிலையில் உள்ளவர்கள் இப்படி இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் அவர்கள் உவகை கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.
அரசுக்கு வருவாய் என்பது முக்கியமல்ல - மனித வளத்தின் வேரே அறுபடுகிறதே என்பதைப் பற்றி ஓர் அரசு கவலைப்பட வேண்டாமா? எப்படியோ 40 நாள்கள் குடியின்றிக் குடும்பத்தில் குதூகலத்தோடு காலத்தைத் கழித்தவர்களை, டாஸ்மாக் திறப்பு என்பதன்மூலம் மீண்டும் பழைய நிலைக்கு அவர்களை விரட்டுவது விபரீதமானது! ஒருவர் 42 நாள்கள் குடியை மறந்திருந்தால், அதிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு நிபுணர்கள் சொல்லுவதையும் கருத்தூன்றி கவனிக்கவேண்டும்.
அரசுக்குத் தேவை வருமானம் என்பதற்காக அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளியின் பணத்தைப் பறிமுதல் செய்யலாமா? சம்பாதிக்கும் பணத்தில் பாதியைக் குடிக்கு அழுதால் மீதிப் பணத்தைக் கொண்டு குடும்பத்தை எப்படி நடத்துவார் குடும்பத் தலைவர்?
பிள்ளைகள் படிக்க வேண்டாமா? தலையெடுக்க வேண்டாமா? அரசு சிந்திக்கட்டும்! சிந்திக்கட்டும்!!
இரண்டாவதாக ஊரடங்கை ஒரு பக்கம் பிறப்பித்து விட்டு, டாஸ்மாக்கை இன்னொரு பக்கம் திறந்து விட்டால், அது ஒரு நகைமுரண் அல்லவா? அதற்கு என்னதான் நிபந்தனைகளை விதித்தாலும் நடைமுறையில் அவையெல்லாம் தவிடு பொடியாகி விடும் என்பதுதான் யதார்த்தம்.
அண்டை மாநிலங்களில் என்னதான் நடக்கிறது என்பதும் தொலைக்காட்சிகளில்தான் பார்க்கிறோமே! கூட்டம் கூட்ட மாக நெரிசலுக்கிடையே தானே மது வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
கோயம்பேடு சந்தை விடயத்தில் சரியான நேரத்தில் சரியான வகையில் முடிவு எடுக்கப்படாத காரணத்தால் அதன் பார தூர விளைவுகளை தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது - அதன் வீச்சு கேரள மாநிலம் வரை பாதித்து இருக்கிறது என்பது சாதாரணமா?
அதே தவறை 'டாஸ்மாக்' திறப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு செய்தது என்பதை எண்ணுகிறபோது - திடுக்கிட வைக்கிறது.
திடீரென்று நான்கு நாள் ஊரடங்கை அறிவித்த காரணத்தால் நான்கு நாள்களுக்குத் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவிக்க பொது மக்கள் வீட்டிலிருந்து வீதிக்கு ஓடோடி வந்ததால் ஏற்பட்ட தொற்றின் அளவு என்ன என்று இந்நேரம் அரசு அறிந்திருக்கும். இவற்றை எல்லாம் தக்க பாடமாகக் கொண்டு, நகர்த்தும் ஒவ்வொரு காயையும் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டாமா?
எதிர்க்கட்சிகள் ஒன்றும் எங்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை என்று தானடித்த மூப்பாக முதல் அமைச்சர் செயல்படுகிறார் என்ற கெட்ட பெயர் உச்சத்தில் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.
இந்த வகையில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி அடையாளப் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதில் அய்யமில்லை.
இதனைப் பொதுமக்கள் தங்களுக்கான ஆதரவுப் போராட்டம் என்று கருதி, வெற்றி பெறச் செய்வது மிகவும் அவசியமாகும்!
No comments:
Post a Comment