எந்தக் காரியத்துக்கு இந்த ஆரியக் கூத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

எந்தக் காரியத்துக்கு இந்த ஆரியக் கூத்து


2003ஆம் ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திடம் வழங்கினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. மாநில அரசுக்குச் சொந்தமான இந்த 5 ஏக்கர் கழுவேலி நிலம் தான் பத்மாவின் பெரும் கனவு. குத்தகைப் பணம் எவ்வளவு, எத்தனை ஆண்டு கால குத்தகைக்கு அரசு அதைத் தந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. கூடவே பத்மாவின் “பரத முனி” டிரஸ்டுக்கு 27 லட்ச ரூபாயும் வழங்கினார் ஜெயலலிதா.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என்றே தன்னைக் காட்டிக் கொண்ட பத்மா எப்படி இதை சாதித்தார்? தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் பரத முனி சிற்பம் வழிபடப்படுவதாகவும், அப்படி ஒன்று தமிழகத் தில் ஏன் இல்லை என்றும் கேள்வி எழுப்பி, ஜெயலலிதாவை சிந்திக்க(?) வைத்தார். பரத த்தைத் தோற்றுவித்ததாக பார்ப்பனர்கள் நம்பும் பரத முனிக்கு, தமிழகத்தில் ஒரு கோயில் இல்லையா என்று தான் கொந்தளித்துப் போனார் அவர். அய்ந்து ஏக்கர் நிலத்தை அப்படித்தான் சுலபமாகக் கைப்பற்றினார் பத்மா. இடத்தை லாவகமாக வாங்கிவிட்ட பத்மாவுக்கு சோதனையாக, தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் நிகழ, கலைஞர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.


பரத முனி டிரஸ்டுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர் திரும்ப எடுத்துக் கொள்ள, அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகினார் பத்மா. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, மெல்ல ஆட்சியாளர்கள் தரப்புக்குத் தூதுவிட்டு, தமிழர்களின் கூத்து, சதிராட்டக் கலையினை விரிவாகப் பேசிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளின் பெயரையும் சேர்த்து, தனது டிரஸ்டின் பெயரை “பரத இளங்கோ டிரஸ்ட்” என்று இளங்கோவடிகள் பெயர் சேர்த்துக் கொண்டு சமரசத்திற்குத் தயாரானார் பத்மா. மேலும் 2010ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருந்த தஞ்சை பெருவுடையார் கோயிலின் 1000ஆவது ஆண்டு விழாவில், 1000 கலைஞர்கள் கொண்ட பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை தன் தலைமையில் நடத்த ஒப்புக் கொண்டு, சொன்னபடி நிகழ்ச்சியை நடத்தித் தந்தார் பத்மா. அதில் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த கலைஞரை பவ்யமாக நின்று வணங்கி பாராட்டும் பெற்றுக் கொண்டார் பத்மா. ஆனால் கலைஞரை அமர்த்திவைத்துவிட்டு, அந்த நிகழ்வில் சிவபஞ்சாட்சரம் என்ற ஆதி சங்கரர் ஸ்தோத்திரம் பாடி அதற்கும் நடனமாடி, தன்னைக் காட்டிக் கொண்டார்  பத்மா. பிறகு அக்டோபர் 17, 2010 அன்று கலைஞரை அழைத்து, பரத இளங்கோ ஆசிய கலாச்சார மையத்தின் அடிக்கல்லை நாட்டச்செய்தார்.


இப்படி இரண்டு ஆட்சிகளுடனும் சமரசம் செய்து, இடத்தைக் கைப்பற்றிய பத்மா, அதில் ‘திரேதா யுகத்தில்’ பிறந்ததாகச் சொல்லப்படும் கற்பனைக் கதாபாத்திரமான பரத முனிக்கு ஆலயம் எழுப்பியிருக்கிறார். உள்ளே பரதமுனி இருக்கிறார். இளங்கோ வெளியே இருக்கிறார். சூத்ராளுக்கு அங்கே தானே இடம்.


 அவருடன் மய்யத்தின் எல்லாப் பணிகளிலும் துணை நிற்பவர் யார் தெரியுமா? தொல்காப்பியம் சமஸ்கிருத நூலின் மொழி பெயர்ப்பு என்றும், திருக்குறள் சமஸ்கிருத நூல் என்றும், தமிழுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம் என்றும் ஆரிய விஷம் கக்கிவரும் ‘நாக’சாமி. இந்த ஆரிய லாபி தான், சமஸ்கிருத பரத முனிவரையும், கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை தமிழர் கேள்வியே பட்டிராத ‘பரத நாட்டியத்தையும்’, வர்ணாசிரமத்தின் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து பேசிவருகிறது.


பரத முனியின் பெயர் தொல் தமிழ் இலக்கியங்களில் எங்கும் கூறப்படவில்லை. மாமல்லபுரம் புலிக்குகைக் கல்வெட்டு ஒன்றிலுள்ள பிருதாக்களில் புராணப் பெயர்களில் ஒன்றான பரதன் பெயர் பல்லவ மன்னனுக்கு சூட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, அதை வரலாறாக திரிக்கப் பார்க்கிறார் நாகசாமி. இதிகாசம் வேறு, வரலாறு வேறு என்று தெரியாத ஆளா தொல்லியல் துறை முன்னாள் தலைவர் நாகசாமி? இதில் இன்னும் மோசமாக இந்தக் கூட்டம் சங்க இலக்கியங்களான புறநானூற்றுப் பாடல்களை ‘மோக்ஷம்’ என்றும், அகநானூற்றுப் பாடல்களை ‘ஷ்ருங்காரம்’ என்றும் வகைப்படுத்தப் பார்க்கிறது.


பசலை நோயால் வளை கழண்டு விழும் தலைவி என்ன அய்யா சிருங்கார ரசம் சொட்டப் பாடியிருப்பாள்? அல்லது காக்கைப் பாடினியார் என்ற பெண்பாற்புலவர் “என் மகன் போரில் புறமுதுகு காட்டி இறந்திருப்பான் என்றால் அவன் பால் குடித்த என் முலைகளை அறுத்தெறிவேன்”, என்று பாடிய பாடலை தர்மம், அர்த்தம், மோக்ஷம் என்று எந்த சமஸ்கிருதப் பிரிவில் சொல்ல? தமிழரின் வீரம் என்ற உணர்வை சுட்டுக்கொண்டு போக முயற்சிக்கும் பார்ப்பனியத்தின் சூது இது.


“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கைவையடா தாண்டவக்கோனே”, என்று இரண்டு ஆட்சிகளிடமுமே சாதுரியமாகக் காரியம் சாதித்துக் கொண்ட வித்தகி பத்மா, இப்போது தனது பரத-இளங்கோ ஆசிய கலாச்சார மையத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். இரு பெரும் முன்னாள் முதல்வர்களிடமே பத்மாவின் தந்திரம் வேலை செய்திருக்கிறது. இப்போதிருக்கும் முதல்வர், துணைமுதல்வரிடம் காரியம் சாதிக்க பெரும் சிரமம் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால், அவர்களைப் பிடிப்பதை விட, அவர்களை ஆட்டிவைக்கும் பாஜகவைப் பிடிப்பது எளிது என்று கணக்குப் போட்டிருக்கிறார் பத்மா. அது ஈஸியா இருக்குமோன்னோ!


ஏற்கனவே கடைந்தெடுத்த ஆரிய வெறியில் ஊறியவருக்கு வர்ணாசிரமத்தின் உன்னதம் பற்றிப் பேசுவது, ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்பது போன்றது தான். மதுவந்தியின் ‘கோ(ட்)டி’ வீடியோக்களை ஒட்டி, நாமும் ஏன் ஆரியத்துக்குக் கொம்பு சீவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான், பத்மா அம்மையார் ‘வர்ணாசிரமப் புரட்டு காலத்தின் தேவை’ என்ற ஆபத்தான, கேவலமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அவரது தேவை கலாச்சார மய்யத்துக்கான நிதியா, விடுபட்ட பத்ம விருதா என்பது போகப்போகத் தெரியும்.


இப்படி ஆரியப் புரட்டைப் பேசித்தான், நாகசாமி ’பத்மஸ்ரீ’ விருது பெற்றார் என்பது அவருக்கு நினைவுக்கு வராதோ?


தமிழரை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்க் கலையைக் கேவலப்படுத்தும் பணியைத் தான் இவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார்களே? தமிழன் வரிப் பணத்தில், தமிழன் இடத்தில் ஆரியக் கலாச்சாரத்தின் பரத முனிக்கு மய்யம் அமைத்து, நம்மிடமே ‘நீ என் காலடியில் விழுந்து கிடந்து உன் குலப் பணியைத்தான் செய்ய வேண்டும், இல்லை என்றால் சாமி கொரோனா கொண்டு உன் கண்ணைக் குத்தும்’ என்று மிரட்ட ஒரே ஒரு திறமை தான் வேண்டும். அது- ‘சந்தர்ப்பவாதம்’!


உமா மாமியோ, மதுவந்தியோ, பத்மாவோ, இந்த ஆரியப் பெண்கள் இப்படித்தான் சர்ச்சையைக் கிளப்ப ஏதேனும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கழிவேலி நிலத்தில் - நாம் பாதுகாக்கவேண்டிய நிலப்பரப்பில், இல்லாத பரதருக்குக் கோயில் கட்டி, நம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட சதிரை பரதநிருத்யம் என்று ஆடி வருகிறார்கள். எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?


No comments:

Post a Comment