ஆர்.எஸ்.எஸ். சார்புடையவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் போக்கு
சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அமையவேண்டும் என்று பார்-கவுன்சில்களில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்
சட்ட ஞானத்தை மேலும் மேலும் நம் வழக்குரைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்
சென்னை,மே3 நீதித்துறையில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சமூகநீதி அடிப் படையில் நீதிபதிகள் நியமனம் அமையவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, பார் கவுன்சில்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் - சமூக வலை தளங்களில் பரப்பவேண்டும் - நமது வழக்குரைஞர்கள் சட்ட ஞானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் வழக்குரைஞர் அணியினரைக் கேட்டுக்கொண்டார்.
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரையாடல்
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரை யாடல், காணொலிமூலம் கடந்த 26.4.2020 அன்று மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், காணொலியின்மூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
உங்கள் அனைவரையும் காணொலியின்மூலமாக இன்றைக்குச் சந்திக்கக்கூடிய ஏற்பாட்டினை செய்த வழக்குரைஞரணி தலைவர் வீரசேகரன் அவர் களுக்கும், அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும், காணொலிமூலம் உரையாடக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்; கவனமாக இருக்கவேண்டும். இந்த நோயினுடைய தன்மை என்பது மிகப்பெரிய தொற்றாக இருக் கின்ற காரணத்தினால், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
‘‘தனி நபர் இடைவெளி''
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தள்ளி நிற்கவேண்டும்; வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது ஆங்கிலத்தில் உள்ள ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்; Social Distance என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்கள்; அதைத் தமிழில் மொழி பெயர்க்கும்பொழுது ‘‘சமூக இடைவெளி'' என்று சொல்லுகிறார்கள்; அப்படி சொல்வதற்குப் பதிலாக, ‘‘தனி நபர் இடைவெளி'' என்பதே நாம் பயன்படுத்தக் கூடிய சொல்லாக இருக்கவேண்டும்.
எனவே, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடை வெளி விட்டு நிற்கவேண்டும். சமூக இடைவெளி என்ற சொல்லை, பகுத்தறிவாளர்களாகிய நாம், ஜாதி ஒழிப்புக்காரர்கள், மற்றவர்கள்போல் பயன்படுத் தாமல், தனி நபர் இடைவெளி என்று சொல்லுகின்ற பழக்கத்தை முதற்கண் கைக்கொள்வது மிகவும் முக்கியம்.
மூன்று லட்சம் பேர் சட்டத்தை
மீறியிருக்கிறார்கள்
இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை மத்திய - மாநில அரசுகள் மற்றும் பல அறிஞர்கள் சொல்லியிருக்கின்ற அத்துணைக்கும் நம்முடைய ஒத்துழைப்பை கொடுப்பது, நம்முடைய நலனுக்காக, நம்முடைய குடும்பத்தினருடைய நலனுக்காக, நம்முடைய சமுதாய மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் என்பதற்காக நாம் அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.
மூன்று லட்சம் பேர் சட்டத்தை மீறியிருக்கிறார்கள், அபராதம் கட்டுகிறார்கள்; வாகனத்தைப் பறிமுதல் செய்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, அது நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதல்ல.
முழு ஊரடங்கைக் கடைபிடிக்கின்ற அளவிற்கு, நிலைமை நாளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, குறைவதாக இல்லை. இப்பொழுது போகிற போக்கைப் பார்த்தோமேயானால், மே மாதத்திலும்கூட நாம் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டிய சூழல்தான் ஏற்படும்.
ஊரடங்கை அரசாங்கம் நீடிக்கிறதோ இல்லையோ, நாமே சுயக் கட்டுப்பாட்டிற்கு ஆளாகவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு வந்தாகவேண்டும்.
கட்டுப்பாட்டை நாம் கடைபிடிக்கவில்லையானால்...
கட்டுப்பாட்டை நாம் கடைபிடிப்போமேயானால், கரோனா வைரஸ் நோய்த் தொற்று விரைவில் முடிவிற்கு வரும். அப்படியல்லாமல், கட்டுப்பாட்டை நாம் கடைபிடிக்கவில்லையானால், அது மிகப்பெரிய விபத்திற்குள்ளாக்கும் நாட்டையே!
ஆகவே, நம்முடைய தோழர்கள், குறிப்பாக வழக்குரைஞர்களாக இருப்பவர்கள், சட்டத்தைப் பாதுகாக்கவேண்டியர்கள் - நாமே சட்டத்திற்கு முன் மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை முதலாவது வேண்டுகோளாக நான், அனைத்துத் தோழர்களுக்கும் வைக்க விரும்புகின்றேன்.
அடுத்தபடியாக, இரண்டாவதாக இன்றைக்கு எல்லோரும் கரோனா பாதிப்பில் இருப்பதைப் பயன் படுத்திக் கொண்டு, சந்தடி சாக்கில் கந்தப் பொடியைத் தூவுவது என்பதைப்போல,
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு மத்திய அரசு துறையிலிருந்து, பார்ப்பனர்களையே அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு வந்திருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.
ஏற்கெனவே 10 நீதிபகள்
பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்!
ஏற்கெனவே சுமார் 10 நீதிபதிகள் பார்ப்பனர்களாக, இதுவரை என்றைக்கும் இல்லாத அளவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்கள். அதிலே பல நீதிபதிகள், வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஷாகாவில், அரைக்கால் சட்டை அணிந்து கலந்துகொண்டவர்கள்தான் இன் றைக்கு நீதிபதிகளாக வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
அதேபோல, நீங்களும் பலர் தெளிவாக சொன் னீர்கள். ஏபிவிபி போன்ற அமைப்புகளில் இருக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று.
முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களையே அரசு வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக நியமிக்கவேண்டும் என்கின்ற கொடு மைகளையெல்லாம் எதிர்த்துத் தீர்மானமாக நாம் வடிக்கவேண்டும்.
இவை எல்லோருக்கும் உரிமையான பதவிகள் என்பதால், ஒரு கட்சி, ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் அதில் பங்கேற்கவேண்டும் என்று சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது - வெளிப்படைத்தன்மைக்கு விரோதமானது என்பதை அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடவேண்டும்.
‘விடுதலை'யின்மூலம் வெளிப்படுத்தினோம்!
அடுத்தாக, இப்பொழுது இருக்கின்ற சூழலில், மேலும் 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாக இருப்பதை, பார்ப்பனர்களைக் கொண்டே நிரப்பவேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் குறியாக இருப்பதை, ‘‘இது உண்மையா?'' என்று ‘விடுதலை' மூலமாக முன்பே நாம் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.
இந்தத் தகவலை, எல்லா வழக்குரைஞர்களும், சோசியல் மீடியாவில், யூடியூப், வாட்ஸ் அப், முகநூல் போன்ற இணைய வழியில் பரப்பவேண்டும்.
இன்னொரு வேண்டுகோள் என்னவென்றால், சமூகநீதியில் நம்பிக்கையுள்ள அத்துணை வழக்குரை ஞர்களும், அவர்கள் எந்தக் கட்சி யைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஏன்? பி.ஜே.பி.யைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்கூட, இந்தக் கொடுமைகள் தவறு; அவர்கள், தங்கள் விகி தாச்சாரத்திற்கு மேலே இருக் கிறார்கள் என்பதை யெல்லாம் சுட்டிக்காட்டி, எடுத்துச் சொல்லவேண்டும். அதனை தீர்மானமாகப் போட வேண்டும்.
அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்; சமூக நீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டு இருக்கின்ற ஒன்று. அது சலுகையல்ல, நம் உரிமையாகும்.
எனவேதான், சமூகநீதி அடிப்படையில் காலியாக உள்ள நீதிபதி பதவியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.
மதச்சார்பின்மைக்கும் விரோதமாக
போய்க் கொண்டிருக்கிறது!
அடுத்தபடியாக,வழக்குரைஞர்களுக்கு, குறிப்பாக நம்முடைய வழக்குரைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு பணி என்னவென்றால், அண்மையில் நீதித்துறையினுடைய போக்கு என்பது வெளிப்படையாகவே, பார்ப்பனிய, அதா வது மனுதர்ம மனப்பான்மை இருக்கக்கூடிய அளவிற்கு - அடிப்படைக் கட்டுமானமான சமூக நீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக இருக் கின்ற அளவிற்குப் போய்க் கொண்டிருப்பது, மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் நமக்கு அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை இந்த வழக்குரைஞரணி கலந்துரையாடல் சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் தீர்மான வடிவாக ஆக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, அண்மையில் இரண்டு, மூன்று தீர்ப்புகள் வந்தன. உத்தரகாண்ட் தீர்ப்பாக இருந்தாலும், ஆந்திர உயர்நீதிமன்றத்தில், நூற்றுக்கு நூறு சதவிகிதம் பழங்குடி (எஸ்.டி.) மக்களுடைய இட ஒதுக்கீடு செல்லாது என்பதாகும். இது ஏற்புடையத்தக்கதல்ல. இது தவறான தீர்ப்பாகும்.
ஆந்திர மாநிலத்திலே...
உண்மை நிலை என்னவென்று பார்த்தால், ஏற் கெனவே அந்தக் கிராமப் பகுதிகள் பழங்குடி (எஸ்.டி) மக்கள் வாழ்கின்ற பகுதிகளாகும். அங்கே இருக்கின்ற பள்ளிக்கூடங்களில், மற்றவர்கள் அங்கே சென்று அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு யாரும் முன்வராத காரணத்தினால்தான், நூற்றுக்கு நூறு அந்தப் பகுதியில் அந்த மக்கள் இருந்தால்தான், அந்த மக்களுடைய மனோபாவத்தைப் புரிந்து கொண்டு, அந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகத்தான், ஆந்திராவிலே நூற்றுக்கு நூறு அதை ஒதுக்கீடு செய்தார்கள்..
இந்த நேரத்தில் உங்களுடைய கவனத்திற்கு ஒன் றைக் கொண்டு வருகிறோம். இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பை மறுபடியும் நீங்கள் எல்லோரும் படியுங்கள்.
நம்முடைய இயக்க வழக்குரைஞர்களுக்கு
ஓர் அன்பான வேண்டுகோள்!
‘விடுதலை'யைத் தொடர்ந்து நீங்கள் படித்து, அதில் சொல்லப்படும் கருத்துகளை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களுக்கும் பரப்பக்கூடிய அளவில் செய்வது என்பது மிகமிக முக்கியமாகும்.
கரோனா நோய்த் தடுப்பிற்காக வீட்டிலிருப்பது நல்ல வாய்ப்பாகும். நம்முடைய இயக்க வழக்குரை ஞர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் என்ன வென்றால்,
நம்முடைய இயக்க வழக்குகள் - கொள்கைகள் சார்ந்த வழக்குகள்கூட, சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகள் திடீரென்று என்றைக்காவது ஒரு நாள் விசாரணைக்கு வரலாம்.
அப்பீல் பெண்டிங்காக இருக்கும், அந்த வழக்குகளை நடத்த நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்; திடீரென்று நடத்தினால், அது முழுமையாக நடத்தப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படாது.
தாலி அகற்றும் நிகழ்விற்காக
வழங்கப்பட்ட தீர்ப்பு
நம்முடைய கழக சம்பந்தமாக, கொள்கை சம் பந்தமாக என்னென்ன வழக்குகள் நிலுவையில் இருக் கின்றன என்று பட்டியல் போட்டுக் கொள்ளவேண்டும்.
அதுபோன்ற வழக்குகளில், சென்னையில் இருக் கின்ற நம்முடைய வழக்குரைஞர்கள், மதுரையில் இருக்கின்ற நம்முடைய வழக்குரைஞர்கள் எல் லாம் ஒருவருக்கொருவர் கலந்து பேசி, அடுத்த நட வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அனைத்து வழக்குரைஞர்களும், மற்ற மூத்த வழக்குரைஞர்கள் எல்லோருடனும் கலந்து பேசி, ஒரு பட்டியலைத் தயார் செய்யவேண்டும்.
இவை எல்லாவற்றையும் மிகவும் ஆக்கபூர்வமாக நம்முடைய தோழர்கள் செய்யவேண்டும். மிகவும் ஆர்வமுடன் செய்யவேண்டும்.
கழகத்திற்காக ஒரு வழக்கில் ஆஜராகும்போது, உங்களுடைய சட்ட ஞானத்தை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு இவை மேலும் அதிகமாகப் பயன்படும்.
உதாரணமாக, நம்முடைய மூத்த வழக்குரை ஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் எல்லாம் இருக் கிறார்கள். அவர்களுடைய மூதுரைகளை, அறி வார்ந்த எண்ணங்களையெல்லாம் சட்ட ரீதியாக நீங்கள் கேட்கலாம். தனிப்பட்ட உரையாடல்களிலும் கேட்கலாம். பல கருத்தரங்கங்களையும் நடத்தலாம்.
கருத்தரங்குகளை நடத்துவதற்குத்
திட்டமிடுங்கள்!
சில நாள்களுக்கு முன்பு திராவிடர் கழக வழக் குரைஞரணியின் சார்பாக கருத்தரங்கங்கள் நடைபெற்றன. அதுபோன்ற கருத்தரங்குகளை நடத்து வதற்குத் திட்டமிடுங்கள்.
உதாரணமாக, மதச்சார்பின்மை (செக்குலர்) என் பதை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் ஒரு பேராபத்து என்ற தலைப்பில், ஒத்தக் கருத்துள்ளவர்கள், அறிஞர்கள், நீதிபதிகளை அழைத்து வந்து நடத்தலாம்.
அண்மைக்காலமாக சமூக அநீதிக்கு சம்பந்தமான சட்டங்கள் வருகின்றன!
அதேபோன்று, சமூகநீதிக்கு அண்மைக் காலத்தில், நீதிப் போக்கில் எப்படிப்பட்ட ஒரு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது - அண்மைக்கால நீதிப் போக்குகளில், அடிப்படையையே குலைக்கக் கூடிய அளவில் இருக்கிறது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்த விஷயத்தை, ஒன்றிரண்டு நீதிபதிகள் அமர்ந்து கொண்டு, சமூக அநீதிக்கு சம்பந்தமான சட்டங்கள் வருகின்றன.
அண்மைக்காலத்தில், 10 சதவிகித இட ஒதுக்கீட் டிற்கு தடையும் கொடுக்கவில்லை; வழக்கையும் உட னடியாக விசாரணைக்கு எடுக்கவில்லை.
இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. இன்னுங்கேட்டால், வழக்குரைஞர்கள், நம் இயக்கப் பிரச்சாரகர்கள், மற்ற வர்கள் கவலையெடுத்துக்கொண்டு, புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
‘‘சமூகநீதி நேற்று - இன்று நாளை - நீதிப் போக்கு எப்படிப்பட்ட நீதிப்போக்கு?'' என்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை மாதத்திற்கு ஒரு கருத்தரங்கமாக நடத்தவேண்டும். அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு கருத்தரங்கையாவது நடத்தவேண்டும். இந்த ஆண்டு முழுமையும் நடத்தவேண்டும்.
ஜூன் மாதத்திற்குப் பிறகு
நிச்சயமாக ஒரு விடியல் வரும்
இப்போது இருக்கின்ற நிலைமை எப்போதும் தொடராது. ஜூன் மாதத்திற்குப் பிறகு நிச்சயமாக ஒரு விடியல் வரும் என்று நினைக்கின்றோம்.
பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள், அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும், எல்லா ஊர் களிலும் உள்ள பார் அசோசியசன் தீர்மானம் போட்டு, நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைப் புறக்கணிக்கக் கூடாது என்று தீர்மானம் போடவேண்டும். ஏற் கெனவே இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த வர்களையே (பார்ப்பனர்களையே) நியமிக்கக்கூடாது என்பதை தீர்மானமாகப் போட்டு, சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு நியமனங்கள் இருக்கவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
கொலிஜியம் என்பதற்கு
அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை
இங்கே உரையாற்றும்பொழுது ஒன்றை சொன் னார்கள். அது என்னவென்றால், கொலிஜியம் என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், நீதிபதிகளே அதனை உருவாக்கினார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
ஆல் இண்டியா ஜூடிசியல் சர்வீஸ் என்ற ஒன்றை இண்டியன் பாரீன் சர்வீஸ் - இண்டியன் அட்மினிஸ்ரேடிவ் சர்வீஸ் - இண்டியன் ஜூடியசியல் சர்வீஸ் - அய்.ஜே.எஸ். என்பது போன்று கொண்டு வந்தால், அதில் கட்டாயமாக இட ஒதுக்கீடு வரவேண் டிய சூழல் இயல்பாகவே ஏற்படும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசனில், அய்.ஏ.எஸ்.சில் இட ஒதுக்கீடு, அய்.எஃப்.எஸ்.சில் இட ஒதுக் கீடு, அய்.ஆர்.எஸ்.சில் இட ஒதுக்கீடு எப்படி வந்திருக்கிறதோ - அதேபோன்று, அய்.ஜே.எஸ். என் பதிலும் இட ஒதுக்கீடு வரும் என்பது அதன்மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment