வி.சி.வில்வம்
ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய குடிசைப் பகுதி தாராவி ஆகும். இங்கே தமிழர்கள் மட்டுமே வசிப்பதாகச் சிலர் நினைப்பதுண்டு. தமிழர், கன்னடர், மலையாளிகள், தெலுங்கர், மராத்தியர் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும் வசிக்கின்றனர்.
அதேநேரம் தாராவி பகுதியை, வாழத் தகுந்த இட மாக மாற்றியதில் தமிழர்களுக்குப் பெரிய பங்குண்டு.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பலர் மும்பைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். செய்வதற்கு வேலை கிடைத்தாலும், தங்குவதற்கு இடமில்லை. இந்நிலையில் தான் சதுப்பு நிலமாக இருந்த தாராவி பகுதியைப் பண்படுத்தி அங்கு வாழ்ந்துள்ளனர். இன்றைக்கு மும்பையின் மையப் பகுதியாகத் தாராவி விளங்குகிறது.
விமான நிலையத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதோடு, மும்பை மாநகரை இணைக்கும் 4 தொடர் வண்டி நிலையங்களும் இப்பகுதியைச் சுற்றி இருக்கின்றன.
தாராவியின் சுற்றளவு 520 ஏக்கர் என்று கூறப்படு கிறது. மக்கள் தொகையோ 8 இலட்சத்திற்கும் அதிகம். அதாவது ஒரு சதுரக் கிலோ மீட்டரில் 2,70,000 மக்கள் வசிக்கின்றனர். இதே அளவு இடத்தில் சென்னையில் 27 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆக 10 மடங்கு அதிகம்.
இவ்வளவு நெருக்கடியிலும் குடிசைத் தொழில்கள் தாராவியில் பிரபலம். "ஓர் அறைத் தொழிற்சாலைகள்" மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதாவது ஒரே ஓர் அறை தான். இரவில் வீடாகவும், பகலில் தொழிற் சாலையாகவும் மாறிவிடுகிறது.
இங்கு நூற்றுக்கணக்கான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. இதன் ஆண்டு மதிப்பு 6 ஆயிரம் கோடிகள் என அரசு மதிப்பிடுகிறது. பெரும் முதலாளி களுக்கே சவால்விடும் வகையில் தாராவியின் வணிக நிலவரம் இருக்கிறது.
தாராவி வணிகத்தின் ஒட்டு மொத்த மதிப்பு இப்படி இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?
தாராவிக்கு அருகில் வசிக்கும் திராவிடர் கழகத்தின் மும்பை மாநிலச் செயலாளர் தோழர் அந்தோணி அவர்களிடம் நலம் விசாரிக்கப் பேசும் போது, இது குறித்தும் பேசினோம்.
கரோனா பிரச்சினை இங்கு அதிகமாக இருக்கிறது. காலை 7 முதல் 10 மணி வரை பொருட்கள் வாங்கச் செல்லலாம். எனினும் நெருக்கடியான இந்தப் பகுதியில் 3 அடியல்ல, 1 அடி கூடதள்ளி நிற்க முடியாது. கரோனா குறித்துப் பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அரசாங்கம் மக்களுக்குக் குழப்பம் இல்லாத வகையில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்; உதவிகள் செய்ய வேண்டும்.
"சென்ற மாதம் சம்பளம் கொடுத்தார்கள், இந்த மாதம் இல்லையென்று சொல்லி விட்டார்கள்", எனப் பக்கத்து வீட்டு முதியவர் கூறினார். அவருக்கு வயது வயது 66, அவரின் இணையர் வயது 60. அவர்களுக்கு 40 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர். இவர்கள் எல்லாம் என்ன செய்ய முடியும்?
தாராவி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் அளவு 100 சதுரடி தொடங்கி 200 சதுரடி தான் இருக்கும். அதாவது ஓர் அறை தான் ஒரு வீடு. சிலருக்கு இரண்டு அறை அளவில் இருக்கும். வீட்டின் மேற்பகுதி பெரும் பாலும் குடிசை அல்லது தகரத்தில் இருக்கும்.
இந்த சிறிய வீட்டில் நான்கைந்து பேர் இருப்பர்.
கரோனா சமயத்தில் எல்லோரும் வீட்டில் இருப் பதால் நெருக்கடிகள் கூடும். ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மனஉளைச்சல் அதிகமாகும். சற்று அமைதியாக இருக்கலாம் என்றாலும் அந்த ஒரே அறையைத் தான் சுற்றிச் சுற்றி வர வேண்டும்.
மற்ற நாட்களில் சிலர் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பார்கள். சிலர் இரவு வேலைக்குச் சென்று விடுவர். இப்போது அனைவருமே வீட்டில் இருப்பதால் தூங்கு வதற்குக் கூட இடம் இருக்காது, வெளியில் தான் தூங்க வேண்டும்.
இவற்றை விட பெரும் கொடுமை, பெரும்பாலான வீடுகள் பொதுக் கழிவறையைத் தான் பயன்படுத்த வேண்டும். 1400 பேருக்கு ஒரு கழிவறை என்கிற விகிதத்திலே இங்கு இருக்கிறது. சுகாதாரப் பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆண்கள், பெண் கள், குழந்தைகள், முதியவர்கள் என எல்லோருமே கழிவறைக்கு வெளியில் வந்தே ஆக வேண்டும். இன்னும் சில இடங்களில் பொது வெளியைப் பயன் படுத்த வேண்டியிருக்கிறது.
பொருளாதார ரீதியிலும் மக்கள் மிகுந்த சிரமத்தில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து ஜாதி மக் களுமே இங்கு உள்ளனர். குறிப்பாக சில பார்ப்பனக் குடும்பங்களும் வசிக்கின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் இங்கு வசித்தாலும், நெல்லை மாவட்ட மக்கள் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள். ஒரு காலத்தில் பஞ்சம், வறுமை என்கிற நிலையில் இங்கு வந்துள்ளனர். இப்போது தமிழகத்திலே நாளொன்றுக்கு ரூபாய் 600, 700 வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் புதிதாக இங்கு யாரும் வருவதில்லை. மாறாக வட இந்திய மக்கள் தமிழகம் நோக்கி வருகின்றனர்'', என்று பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் மும்பை மாநிலச் செயலாளர் அந்தோணி.
நீங்கள் மும்பை சென்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கேட்ட பொழுது, நான் பிறந்து வளர்ந் ததே மும்பையில் தான் என்றார் சிரித்துக் கொண்டே!
No comments:
Post a Comment