பெரும்பாலான மாணவர்கள், ப்ளஸ் டூ பாடங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நீட் தேர்வுக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மட்டும் ப்ளஸ் டூ-வில் பெற்றுவிட்டால் போதும் என, முழுக்க முழுக்க நீட் தேர்வுக்கான பயிற்சியில் தான் காலத்தைச் செலவழிக்கிறார்கள். நீட்டுக்கு முன்பு, ப்ளஸ் ஒன் பாடத்தை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும் ப்ளஸ் டூ பாடத்தையே மாணவர்கள் படித்ததாகச் சொல்கிறீர்கள் அல்லவா? அதைவிடவும் மோசமான விளைவுகளை உருவாக்கும் இது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ என்பது மிகவும் அடிப்படையான படிப்புகள். நீங்கள் எந்த உயர் கல்விக்குச் சென்றாலும் இந்தப் படிப்புகள்தான் அடித்தளம். அதைச் சிதைத்திருக்கிறது நீட்.
நீட் தேர்வு, எந்த விதத்திலும் மருத்துவக் கல்வியை தரமானதாக மாற்றவில்லை. பெரும்பாலான கோச்சிங் மய்யங்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் டெக்னிக்குகளை மட்டுமே கற்றுத் தருகின்றன. கிட்டத்தட்ட, அது ஒருவிதமான குறுக்குவழி. வேதியியலும், இயற்பியலும் வராத ஒரு மாணவர் உயிரியலில் மட்டும் முழுமையாகப் படித்து நீட் தேர்வு எழுதி, மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட முடியும். அப்படி பல மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்த வித்தையைத்தான் பெரும்பாலான கோச்சிங் மய்யங்கள் கற்பிக்கின்றன. வேதியியலும், இயற்பியலும் தெரியாத ஒரு மாணவர், எப்படி மருத்துவப் பாடங்களைப் புரிந்து கொள்வார், எப்படி மக்களுக்குச் சிகிச்சையளிப்பார்?
பஞ்சாப் மாநிலத்தில் வேதியியல், இயற்பியல் பாடங்களில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதை, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' (15.6.2019) புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தியது. இதில், மேலே சொன்ன இரண்டு பாடங்களிலும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற ஏழு மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதுதான் நீட் கொண்டு வந்துள்ள உண்மையான தரம்!
இவை மட்டும்தானா? ‘நீட் தேர்வு சாதாரண குடும்பத்து மாணவர்களுக்கு எதிரானது' என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நீட் தேர்வு என்பது கூடுதல் சுமை. பயிற்சியெடுக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும். லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வேண்டும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டுதான். 2019 ஆம் ஆண்டு கணக்குப்படி பார்த்தால்கூட, மொத்தம் உள்ள சுமார் 3,000 மருத்துவ இடங்களில் சேர்ந்தவர்களில் கோச்சிங் செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே!
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் ஒற்றைச் சாளரத் தேர்வுமுறை, உலகுக்கே வழிகாட்டக் கூடியது. மிகச் சிறப்பாகவே நடந்து வருகிறது. கவுன்சிலிங் முறையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதில் தமிழ்நாடுதான் முன்னோடி. தற்போதுவரை அண்ணா பல்கலைக் கழகம் அந்த முறையைத்தான் கடைப்பிடித்து வருகிறது. ஏற்கெனவே, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இதே கவுன்சிலிங் முறையில்தான் இடங்கள் தரப்பட்டன. வேறுபாடு என்னவென்றால், பழைய முறையில் சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளும் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். நீட் இருக்கும் வரை இனி அதற்கு வாய்ப்பில்லை. தனிப்பயிற்சிக்கு பணம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த கவுன்சிலிங்
சாத்தியமாகும்.
- நன்றி: ஜூனியர் விகடன்
3.5.2020
No comments:
Post a Comment