கழகத் தோழர்களுக்கும், தமிழ்ப் பெரு மக்களுக்கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோள் அறிக்கை வருமாறு:
இன்று (6.5.2020) காலை தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அருமை சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, அனைத்துத் தோழமை கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசியதைப் போலவே, நம்மிடமும் கலந்துபேசிய அடிப்படையில், ஒரு கருத்திணக்க அறிக்கையை சில மணிநேரத்தில் உருவாக்கியது மிகவும் வரவேற்கத்தக்கது.
தற்போது கரோனா தொற்று, மிக வேகமாகப் பரவி வரும் வேதனையான பரிதாப சூழ்நிலையில், தமிழக அரசு மற்ற கட்சியினரைக் கலந்து ஆலோசிக்காமலும் அல்லது முழுப் பயன் தரவேண்டிய அளவில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமலும், திடீர் திடீர் அறிவிப்புகளால், அவை எதிர் விளைவுகளாக மாறிடும் அச்சமிக்க சூழ்நிலைதான் உருவாகும் எதார்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதுபோல, திடீரென்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து, மதுவினால் ஏற்படும் கேடு ஒருபுறம் என்றாலும், அதை வாங்க மதுப் பிரியர்கள் எப்படி நடந்து கொள் வார்கள் என்பது அறிந்ததே! மற்றொரு ‘கோயம்பேடு கூட்டம்போல்' சேரக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், அதனால் பரவிடும் தொற்று அபாயமும் மீண்டும் வரக்கூடிய பேராபத்து உள்ளதால், இதை மக்கள் எவரும் ஏற்கவில்லை.
இப்பிரச்சினைக்கு (மதுக்கடைத் திறப்பது) மறு பரிசீலனை கட்டாயம் தேவை.
மதுவை, இந்த வாய்ப்பை வைத்து, 40 நாள்கள் குடி பெரிதும் ஒழிந்த நிலையை, நிரந்தரமாக்கிட தமிழக அரசு முன்வருவது அவசர அவசியம் என்பதை போன்ற நியாயமான கோரிக்கைகளை வற்புறுத்த, நாளை (7.5.2020) காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின்முன்பு, 5 பேருக்கு உட்பட்டு, 15 நிமிடம் (அனைத்துக் கட்சித் தலைவர்களின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முழக்கங்களை மட்டும்) முழக்கமிட்டு, அரசுக்கு நமது அமைதியான எதிர்ப்பினையும், கரோனா ஒழிப்பில் மேலும் உரிய சரியான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியும் - அறப்போரை - யாருக்கும் தொந்தரவின்றி நடத்திட, அனைவரும் முன்வருதல் வேண்டும்.
பொது ஒழுங்கு, பொது அமைதி ஆகியவற்றிற்குச் சிறிதும் பங்கம் ஏற்படாது, கட்டுப்பாடுடன் அனைவரும் நடந்திடுதல் அவசியம்!
பொதுமக்களும்கூட இதில் அக்கறை காட்டி பங்கேற்பது மிக அவசியம்!
குறிப்பு: கழகத் தோழர்கள் வழக்கமாகவே கருப்புச் சட்டை அணிவதால், கைகளில் கருப்புக் கொடியுடன் அறப்போராட்டத்தில் ஈடுபடுவது அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.5.2020
No comments:
Post a Comment