பல்கலைக் கழகம் இதைக் கைவிடவேண்டும் - புதுவை அரசும் தலையிடவேண்டும்!
இன்றேல் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்!
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா? பல்கலைக் கழகம் இதைக் கைவிட வேண்டும் - புதுவை அரசும் தலையிட வேண்டும்; இன்றேல், அனைத்துக் கட்சி களையும் இணைத்து திராவிடர் கழகம் பேராட்டம் நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அறிக்கை வருமாறு:
நீதிமன்றங்களுக்கு மட்டும்தான்
உரிமை உண்டு!
பல்கலைக் கழகங்கள் என்றால் சட்டப்படி சுயாட்சி (Autonomy) உரிமை படைத்தவை. நமது அரசமைப்புச் சட்டம், பொதுவான அத்தனைச் சட்டங்களும் கூறுவது; பல காலம் ஒப்புக்கொண்டு நடைமுறையில் உள்ள உரிமை - அதனை யாரும் எளிதில் பறிக்க முடியாது. அதன் நடவடிக்கைகள்பற்றி அவசியம் ஏற்பட்டால், அதுகுறித்த வழக்கு களில் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு.
இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக காற்றில் பறந்தவையாக, கடலில் கரைந்தவை களாகி வருவது வேதனைக்குரிய ஒரு போக்காகும்.
‘நீட்' தேர்வை மருத்துவக் கவுன்சில்மூலம் ஒரு குழுவே நாடு முழுவதும் நடத்துவது என்ற சட்டமும் கடந்த 3, 4 ஆண்டுகளாக வெளிப்படையான அரசமைப்புச் சட்ட உரிமை மீறலே!
எந்தப் பல்கலைக் கழகமும் இதுபற்றி எதிர்க்குரல் கொடுக்கவில்லை. ‘நீட்' தேர் வினை நடத்தும் உரிமை அரசமைப்புச் சட்டப்படி அக்குழுவுக்கு இல்லை என்று மூத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்; சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். என்றாலும், உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் அந்த உரிமையைக் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை. அரசமைப்புச் சட்ட நெறிமுறை களைப் பாதுகாக்கவேண்டிய உச்சநீதிமன்றத் தின் நிலைப்பாடே இப்படி என்கிற வேதனை யான நிலை.
இதனால் சில பல்கலைக் கழகங்கள் அதிலும் குறிப்பாக மத்திய அரசு பல்கலைக் கழகங்கள் அவை ஏதோ மத்திய அரசின் ஒரு நிர்வாகத் துறை போல பல விஷயங்களில் நடந்துகொள்ளும் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது!
சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வன்செயலே!
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் திடீரென்று கல்வி கட்டண உயர்வு செய்ததை எதிர்த்து மாணவர்கள் அறவழியில் போரா டினர். அதே போலவே மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தினை எதிர்த்தும், தங்களுக்குள்ள ஜனநாயக உரிமைப்படியும் அமைதியான வழியில் போராடினர். இதற்காக அதில் கலந்துகொண்ட மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையை மறுத்திருப்பது மிகவும் கொடுமையானது - அவர்களின் கல்வி வாய்ப்பைத் தடை செய்வதாகும் - சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வன்செயலே!
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். புதுவை மத்தியப் பல்கலைக் கழகம் இது தொடர்பான ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
அறவழியில் போராட அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் உரிமை அளித்துள் ளது. அது அடிப்படை உரிமையாகும்.
அதுவும் அவர்கள் வெகுவாகப் பாதிக் கப்படும்போது, அதனை எப்படி வெளி யிடுவது, பரிகாரம் தேடிட முயல்வது? அது தானே ஒரே வழி?
அந்தப் போராட்டம் வன்முறையாக அமையக்கூடாது என்று மட்டும்தான் கூற முடியும்.
புதுவைப் பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் போராடியது ஏன்?
ஆனால், புதுவைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராடியது ஏன்?
புதுச்சேரி பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, நிலம் கொடுத் தோர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தோர் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டது அவர்கள் வைத்த கோரிக்கை.
அனைத்துப் பாடப் பிரிவுகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்கான இடம் 25 சதவிகிதம்கூட ஒதுக்கீடு இல்லாததால், புதுச் சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் 2000-த் திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
இது கொடுமை அல்லவா?
இந்த நிலையில், கல்விக் கட்டணத்தையும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 83 சத விகிதம் சராசரியாக பல்கலைக் கழகம் உயர்த்தினால், அம்மக்களால் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர, கிராமப்புற மற்றும் ஒடுக்கப் பட்ட சமூக மாணவர்களால் கட்ட முடியுமா?
இந்த மனக் குமுறலை எடுத்துக் காட்டவே - அந்தக் கொதி நிலையை வேறு வழியாக வன்முறைக்கு இடமின்றி அறப்போராட்டம் நடத்தினார்கள்.
அந்த நேரத்தில், குடியுரிமைச் சட்டம்பற்றிய சூழல் ஏற்பட்டதால், அச்சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களும் மாணவர்கள் - எதிர்கால நாட்டின் ஆளுமைகள் என்பதால், தங்கள் கருத்துரிமையைப் பதிவு செய்தனர்.
இது எப்படி தவறாகும்?
இதற்காக அவர்கள் பெறும் கல்வி உதவித் தொகையை நிறுத்துவது, அவர்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம்?
அனைத்துக் கட்சிகளையும் திரட்டி,
புதுவை திராவிடர் கழகம்
களத்தில் இறங்கும்
இதனைப் பல்கலைக் கழகம் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம். புதுச்சேரி அரசும், முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி, சமூகநீதிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களைந்து, ஏழை, எளிய மாணவர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.
இன்றேல், அனைத்துக் கட்சிகளையும் திரட்டி, புதுவை திராவிடர் கழகமே களத்தில் இறங்கும். அதைத் தவிர்த்திட புதுவைப் பல்கலைக் கழகம் முன்வரவேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.5.2020
No comments:
Post a Comment