- தோற்றம்
‘குடிஅரசு' இதழ் 02.05.1925 அன்று முதலாவதாக வெளிவந்தது. இவ்விதழ் 19.01.1925 அன்று அரசினரால் வார இதழாகப் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 2041. துவக்கத்தில், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வா.மு.தங்கபெருமாள் பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து வெளிவந்தது. சில மாதங்களே (19.07.1925 வரை) வா.மு.தங்கபெருமாள் பிள்ளை ஆசிரியராக இருந்தார்.
- காலமுறை:
இதன் முதல் இதழ் மட்டும் சனிக்கிழமையிலும், அதன்பின் 1940 ஆம் ஆண்டுவரை ஞாயிறு தோறும் வெளிவந்தது. 1943 ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரையில் மீண்டும் சனிக்கிழமை தோறும் வெளிவந்தது. 1934, 1941, 1942 1943 செப்டம்பர் ஆண்டுகளில் நிறுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. 3.5.1947 முதல் 13.9.1947 வரை நான்கு மாதங்கள் 10 நாட்களாக, குடி அரசு, வாரஇதழ் நிறுத்தப்பட்டிருந்தது.
- விலை விவரம்
துவக்கம் முதல் 1940ஆம் ஆண்டுவரை தனி இதழ் 1 அணாவாகவும், 1943 ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை தனி இதழ் ஒன்றரை அணாவாகவும், 9.03.1946 முதல் 28.12.1946 வரை மீண்டும் 1 அணாவாகவும், 1947ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை தனி இதழ் 2 அணாவாகவும், 1949 ஆம் ஆண்டில் 02.04.1949 முதல் 20.05.1949 வரை 1 அணாவாகவும், 21.05.1949 முதல் 04.11.1949 வரை 2 அணாவாகவும், 5.11.49 இதழ் 1 அணாவாகவும் விற்கப்பட்டது.
ஆரம்பம் முதல் 30.10.1943 வரை, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் பாதி விலையில் குடிஅரசு இதழ் வழங்கப்பட்டது.
’குடிஅரசு’ வார இதழ், 1934ஆம் ஆண்டு 'கிறிஸ்தவ’ மதத்தைப் பற்றி எழுதியதற்காக தடை செய்யப்பட்டது. இதனால் அதே ஆண்டு ’புரட்சி' என்ற வார இதழைப் பெரியார் தொடங்கினார்.
புரட்சி இதழில் ‘இஸ்லாம்' மதம் பற்றி எழுதியதற்காக ’புரட்சி' வார இதழ் ஒரே ஆண்டுக்குள் தடை செய்யப்பட்டது. அடுத்து பகுத்தறிவு என்ற வார ஏட்டைத் தொடங்கினார். பின்னர் குடி அரசு தடை விலக்கப்பட்டு, மீண்டும் குடிஅரசு வெளிவரத் தொடங்கியது.
- முகப்பு அட்டை அமைப்பு
(அ) அட்டைப்பட விளக்கம்:
துவக்கத்திலிருந்து 18.12.1927 வரை (மாலை 3. மலர் 34) வெளிவந்த இதழ்களில் காணும் அட்டைப் படத்தின் முகப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.
பாரதமாதா, ஏர் உழவன், நூல் நூற்கும் பெண், தச்சுத் தொழிலாளி, மூட்டை சுமப்பவர். நெசவாளி, தேர் இழுத்துவரும் கூட்டம், தேர்ச் சக்கரத்தில் சிலர் நீண்ட கிட்டிபோட்டு தள்ளுதல், கிருஸ்துவக் கோயில், இந்துக் கோயில், முஸ்லீம் பிறை, ஓமகுண்டம் எரிதல், புத்தர், நீர்நிலை அருகில் ஆடுமாடுகள் நிற்றல், கரும்பு, சோளம், கம்பு, நெல், கோதுமை பயிர்கள் கதிர்களுடன் காணப்படுதல். 18.12.1927 இதழுக்குப் பிறகு அட்டையில் படங்கள் இடம்பெறவில்லை.
(ஆ) "மகாத்மா காந்தி வாழ்க' என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில் 18.4.1926 முதல் (மாலை 1 மலர் 47) 13.11.1927 இதழ் (மாலை 3: மலர் 29) வரை காணப்படுகின்றன.
(இ) 'கதர் வாழ்க' என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில், 20.11.1927 (மாலை 3: மலர் 30) முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) காணப்படுகின்றன.
(ஈ) தமிழ் ஆண்டுக் கணக்கு, இதழின் துவக்க காலம் முதல் 08.04.1944 (மாலை 17: மலர் 26) வரை அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது.
(உ) இதழின் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் துவக்கம் முதல் 02.06.1929 வரை (மாலை 5: மலர் 5) இடப்பட்டு வந்தன. அதற்குப் பின்னர் பக்கங்களுக்கு உலகளாவிய வழக்கிலுள்ள எண்கள் இடப்பட்டன.
(ஊ) நாயக்கர் பட்டம்: இதழின் ஆரம்பம் முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) அட்டையில், ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் 'நாயக்கர்' என்ற ஜாதிப் பட்டம் விடப்பட்டுள்ளது.
(எ) திருக்குறள்: இதழின் அட்டையில்,
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்,'' (972)
என்ற குறளும்,
'எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' (355)
என்ற குறளும்,
'எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' (423)
என்ற குறளும்,
13.01.1935 இதழ் முதல் (மாலை 9: மலர் 23) 29.12.1940 வரை (மாலை 16: மலர் 20) காணப்படுகின்றன.
அத்துடன் 27.12.1947 முதல் 03.04.1948 வரை அவ்வப்போது தலையங்கத்திற்கு மேல்,
'மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்' (278) (24.01.1948),
'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்' (611) (14.02.1948).
"உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று' (890)(21.02.1948)
’பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு' (735) 28.02.1948),
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’ (766) (03.04.1948)
ஆகிய திருக்குறள்கள் காணப்படுகின்றன.
(எ) பாரதியார் பாடல்: துவக்கத்தில் (02.05.1925) "எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஓர் குலம்", ”சாதிகள் இல்லையடி பாப்பா" ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் பல இதழ்களில் “எல்லோருமோர்குலம் எல்லோருமோர் இனம்" என்ற பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது. பாரதியார் பாடல் 25.10.1925 வரை காணப்படுகிறது.
- தலையங்கப் பகுதி
(அ) துவக்க இதழ் முதல், 09.02.1930 இதழ் (மாலை 5. மலர் 37) வரை தலையங்கப் பகுதிக்கு மேல் ராட்டை சின்னம் காணப்படுகிறது. அதன்பின் இச்சின்னம் இல்லை.
(ஆ) துவக்க இதழ் முதல், 03.08.1930 (மாலை 6 மலர் 16) வரை
"அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே"
என்ற பாடல் தலையங்கத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது.
- எழுத்துச் சீர்திருத்தம்: 06.01.1935 பகுத்தறிவு' இதழிலிருந்து (மாலை 1: மலர் 20) தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இடம் பெற்றுள்ளது. 'குடிஅரசு' இதழில் 13.01.1935 இதழ் முதல் (மாலை 29: மலர் 23) எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- பொது
1941, 1942 ஆகிய ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக குடிஅரசு இதழ்கள் வெளியிடப்படவில்லை.
குடிஅரசு இதழ் 05.11.1949ல் கடைசியாக வெளிவந்தது. துவக்கம் முதல் இறுதிவரை வந்த இதழ்களின் பதிவு எண்கள் பற்றிய விவரம் வருமாறு: குடிஅரசு' இதழ் துவக்கம் முதல் 1940 வரை 2041 அய் பதிவு எண்ணாகவும், 1943 முதல் 1947 வரை 4593 அய் பதிவு எண்ணாகவும், 15.11.1947 முதல் 1949 வரை 4900-அய் பதிவு எண்ணாகவும் கொண்டிருந்தது. 'புரட்சி' இதழின் எண் : 2992, "பகுத்தறிவு" இதழின் பதிவு எண்: 3066.
ஆசிரியர்கள்: ஈ.வெ.இராமசாமி நாயக்கர், பின்னர் நாயக்கர் ஜாதிப் பட்டம் துறந்து ஈ.வெ.ராமசாமி, வா.மு.தங்கப் பெருமாள் பிள்ளை, ஈவெ.கிருஷ்ணசாமி, சாமி சிதம்பரனார் (பொறுப்பு), அ.பொன்னம்பலனார், என்.கரிவரதசாமி
வெளியீட்டாளர்கள்: ஈ.வெ.இராமசாமி நாயக்கர், சா.இராமசாமி நாயக்கர், ஸ்ரீ நாகம்மாள், ஜே.எஸ்.கண்ணப்பர், ச.ரா.கண்ணம்மாள், ஈ.வெ.கிருஷ்ணசாமி, அ.பொன்னம்பலனார், என்.கரிவரதசாமி
குடிஅரசு போய்ச் சேர்ந்த இடங்களும் முகவர்களும்:
குடிஅரசு இதழுக்கு ஏறத்தாழ தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் முகவர்கள் இருந்தனர். தமிழ்நாட்டைத் தவிர புதுச்சேரி, பம்பாய், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் முகவர்கள் இருந்தனர்.
இந்தியாவைத் தாண்டி, சிங்கப்பூரில் 7 முகவர்களும், மலேசியாவில் ஜோகூர்பாரு, கிளாங், பினாங், ஈப்போ, செரம்பான், கோலாலம்பூர், மலாக்கா ஆகிய நகரங்களில் மொத்தம் 19 முகவர்களும், இலங்கையில் 14 முகவர்களும் இருந்துள்ளனர்.
No comments:
Post a Comment