தன்னந்தனியாக இருந்து போராடி வெற்றி கண்டவர் தந்தை பெரியார்
பெரியார் இல்லை என்றால், இட ஒதுக்கீடு
இந்தியா முழுமைக்கும் பாதுகாக்கப்பட்டு இருக்குமா?
வழக்குரைஞர்கள் மத்தியில் காணொலிமூலம் கழகத் தலைவர் உரை
சென்னை,மே4 தன்னந்தனியாக இருந்து போராடி வெற்றி கண்டவர் தந்தை பெரியார்; அவர் இல்லை என்றால், இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் பாதுகாக்கப்பட்டு இருக்குமா? வசதியுள்ள நமது வழக் குரைஞர்கள் மற்றவர்களுக்கு உதவிட முன்வரவேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் வழக்குரைஞர் அணியினரைக் கேட்டுக்கொண்டார்.
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரையாடல்
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் கலந்துரை யாடல், காணொலிமூலம் கடந்த 26.4.2020 அன்று மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், காணொலியின்மூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தன்னந்தனியாக இருந்து போராடி
வெற்றி கண்டார் தந்தை பெரியார்!
ஆகவே, அதுபோன்ற கருத்தை நாம் வலியுறுத்திக் கொண்டு வரவேண்டும். எந்த மாதிரியான கருத்தாக இருந்தாலும், அய்யா அவர்கள் தன்னந்தனியாகவே இருந்து போராடி வெற்றி கண்டார். அதனை மறக்கக்கூடாது.
‘நாம் ஒருவர்தானே, எனக்கு எத்தனை எம்.பி.,க் கள் இருக்கிறார்கள்' என்று அய்யா அவர்கள் நினைத்திருந்தால், பின்வாங்கியிருந்தால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்திருக்காது.
பெரியாரால் கொண்டு வரப்பட்ட முதல் அரச மைப்புச் சட்டத் திருத்தம் இந்தியா முழுமைக்கும் பயன்படுகிறது.
அறிவு, ஆற்றல், திறமை, அனுபவம் இவற்றை இயக்கக் கொள்கைக்காக அல்ல - நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவாவது நீங்கள் பேசவேண்டும்.
பெரியார் இல்லை என்றால், இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் பாதுகாக்கப்பட்டு இருக்குமா?
உதாரணமாக, தந்தை பெரியார் அவர்களைப்பற்றி பேசும்போது, கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், பெரியார் இல்லை என்றால், இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக் கும் பாதுகாக்கப்பட்டு இருக்குமா? என்பதை அவர்களிடம் கேளுங்கள்.
ஏற்கெனவே கம்யூனல் ஜி.ஓ. என்பது தமிழ் நாட்டிற்கு (சென்னை ராஜதானி) மட்டும்தான் இருந்தது. . ஆனால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், பெரியார் போராடியதால்தான் வந்தது. அதனால் என்னாயிற்று? இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு வந்தது. பெரியார் பாடுபட்டது - தமிழ்நாட்டு கம்யூனல் ஜி.ஓ.வை - வகுப்புவாரி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடினார் என்றாலும், அதனுடைய விளைவு, ‘‘நெல்லுக்கு இரைத்த நீர், வாய்க்கால் வழியே ஓடி புல்லுக்கு மட்டுமல்ல - எல்லா பயிர்களுக்கும் (இந்தியா முழுமைக்கும்) பயன்படக்கூடிய அளவிற்கு அது வந்திருக்கிறது.
இதுபோன்ற அம்சத்தை, வழக்குரைஞர்களும், பேச் சாளர்களும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்தியா முழுவதும் இன்றைக்கு
சமூகநீதி வந்திருக்கிறது
முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குக் காரணமானவர் தந்தை பெரியார் என்று மட்டும் சொன்னால் போதாது; இந்தியா முழுவதும் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் 80 விழுக்காடு இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், எல்லோரும் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பதற்கு, மாணவர்கள் படிப்பதற்கு, அடிப்படையான காரணம், இந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்தானே!
அந்த அடிப்படையை நாம் எடுத்துச் சொல்லவேண்டும். நாம் இதுவரையில் பெற்றது எவ்வளவு? பெறாதது எவ்வளவு? சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு அம்சத்தில் நாம் பெற்றது கை மண் அளவு - பெறாதது உலகளவு.
நீதிமன்றங்களைத் தாண்டியது
மக்கள் மன்றம்!
பெற்றதையும்பறிப்பதற்கானமுயற்சிகள் அண்மையில் பல தீர்ப்புகள் மூலம் வெளிவருகின்றன. இதற்காக நாம் துணிந்து மக்கள் கருத்தை உருவாக்க வேண்டும். எல்லா நீதிமன்றங்களும் சொன்னாலும், அதையும் தாண்டியது மக்கள் மன்றமாகும்.
கலந்துரையாடவேண்டும்!
அரசியல் மாச்சரியத்தைப்பற்றி கவலைப்படாமல், அவர்கள் எந்தக் கருத்துள்ளவர்களாக இருந்தாலும், எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களைத் தொடர்புகொண்டு நீங்கள் கலந்தாலோசிக்கவேண்டும்.
காலாவதியாக வேண்டிய காலனியச் சட்டங்கள் குறித்து ஒன்றிரண்டு பேர் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அவர்கள் செய்யலாம்.
உதாரணமாக, நம்முடைய நாட்டில், மத உணர்ச் சியைப் புண்படுத்துகிறது என்று வழக்குப் போடு கிறார்கள். அதுகுறித்த சட்டங்களின் மூலத்தை ஆய்வு செய்யலாம்.
வெள்ளைக்காரன்
முதன்முதலாகக் கொண்டு வந்த சட்டம்!
Blasphemy Laws (மத அவதூறு சட்டங்கள்) என்பதை, தன்னுடைய மதத்தைப் பாதுகாப்பதற்காக, பைபிளை விமர்சனம் செய்யாமல் இருப்பதற்காக வெள்ளைக்காரன் முதன்முதலாகக் கொண்டு வந்த சட்டம்தான், அதனுடைய மூலம்.
அதையெல்லாம் நாம் தேடி எடுத்துப் படிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நூலகத்தில் உள்ளவற்றை எடுத்துப் படித்தீர்களேயானால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோன்று, ‘ரவுலட் சட்டம்' என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். எழுத்துரிமை, பேச் சுரிமை, கருத்துரிமை, போராட்ட உரிமையைத் தடுப்ப தற்காகத்தான் அது. கிரிமினல் லா அமெண்மெண்ட் என்று சொல்லி ஆறு மாதம் போடுவார்கள்.
ராஜகோபாலாச்சாரியாரே இந்தச் சட்டத்தைத்தான் போட்டார், இந்தி எதிர்ப்பின்போது! வெள்ளைக்காரன் காலத்தில் ரவுலட் சட்டத்தை, கருப்புச் சட்டம் என்று சொன்னார்கள்.
இன்னும் ஏன் அந்தச் சட்டத்தை, உளுத்துப்போன சட்டத்தை வைத்திருக்கிறீர்கள்
இப்போது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு களுக்குமேல் ஆகிவிட்டதே, இன்னும் ஏன் அந்தச் சட்டத்தை, உளுத்துப்போன சட்டத்தை வைத்தி ருக்கிறீர்கள் என்று நாம் கருத்தரங்கத்தில் விவாதம் செய்யவேண்டும். அதற்குரிய அஜெண்டாவை தயார் செய்யவேண்டும்.
இவையெல்லாம் நம்முடைய ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள், சட்ட அறிஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோருடன் முதலில் கலந்துபேசிய பிறகு, அதற்குரிய அஜெண்டாவை தயார் செய்யவேண்டும்.
அடுத்ததாக ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நம்முடைய இயக்கம் சம்பந்தப்பட்ட, கொள்கைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்புகள் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக அச்சிடவேண்டும்.
உதாரணமாக, செண்பகம் துரைராஜன் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்குப் பதிவாகி இருக்கிறது; உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகியிருக்கிறது.
அதேபோன்று, தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் வழக்கு - சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது - ஏழடி எடுத்து வைக்கவேண்டும் என்ற வழக்கின் தீர்ப்புகள் போன்ற பல வழக்குகளை சேகரித்து அதை நாம் தயாரிக்கும் அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும்.
அதற்குப் பின் (50 ஆண்டுகளுக்குப் பிறகு) சுயமரியாதைத் திருமணம் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பார்ப்பனர் வழக்குப் போட்டபோது, தலைமை நீதிபதி கவுல் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. பெரியார் பெற்ற பெரு வெற்றிகளில் இது தலையாயது.அந்தத் தீர்ப்பையும் அந்தப் புத்தகத்தில் பதிவிடவேண்டும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இட ஒதுக்கீடு பிரச்சினையில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுபோன்று பல வழக்குகளின் தீர்ப்புப்பற்றியும் அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும்.
நம்முடைய வழக்குரைஞர்கள்
ஓரணியாக ஒற்றுமையாக இருக்கவேண்டும்
எல்லாவற்றையும்விட, நம்முடைய வழக்கு ரைஞர்கள் ஓரணியாக ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒருவருடைய வெற்றியை இன்னொருவர் பெருமை யாகக் கருதவேண்டும். ஒருவருடைய வளர்ச்சியை இன்னொருவர் விரும்பவேண்டும்.
நாம் எல்லோரும் ஒருவரே - நாம் ஓர் அங்கம். உடலில், எல்லா பகுதிகளும் வளரவேண்டும் என்பதுபோல, நம்முடைய எல்லா தோழர்களும் வளரவேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
‘‘நீதி கெட்டது யாரால்?''
இப்போது ஓய்வு இருக்கிறது என்று நினைக்காதீர்கள், வீட்டில் நேரம் போகவில்லையே என்று சொல்லாதீர்கள். இந்த நேரத்தில் நிறைய படிக்கவேண்டும்; அய்யாவினுடைய புத்தகங்களைப் படியுங்கள்; அய்யாவினுடைய சிந்தனைகளை உள்வாங்குங்கள்; பெரியார் எப்படி அந்தக் காலத்திலே மிகத் தீவிரமான அளவிற்கு இருந்தார்கள்; அவர்களுடைய தர்க்க ரீதியான கருத்துகள் என்ன என்பதை எடுத்துப் பாருங்கள். எதைப் படிக்கிறீர்களோ, இல்லையோ, வழக்குரைஞர்களாக இருக்கின்ற நீங்கள், ‘‘நீதி கெட்டது யாரால்?'' என்ற புத்தகங்களின் இரண்டு பாகங்களையும் நன்றாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீதிமன்றத் தீர்ப்புகளின்போது, அய்யா அவர்கள், கொடுத்த அறிவுரை, அறிக்கைகள் என்ன என்ப தைப்பற்றியெல்லாம் தேனடை போன்று தொகுத்து புத்தகங்களாகக் கொடுத்திருக்கின்றோம். அப்படியே உண்ணவேண்டியதுதான் உங்களுடைய வேலை.
படித்த புத்தகங்களைக்கூட
திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும்
அதுபோன்றவற்றை எல்லாம் படித்து, அடிக்கடி கட்டுரைகளை நீங்களே எழுதலாம். பல தோழர்கள் கட்டுரைகளை எழுதுகிறார்கள். நேற்றுகூட, குமார தேவன் அவர்கள் சாமிகைவல்யத்தைப்பற்றி எழுதி யிருந்தார். அதுபோன்று நீங்கள் அனைவரும் எழுதவேண்டும். சட்டத்தைப்பற்றி எழுதுங்கள், நிறைய புத்தகங்களைப் படியுங்கள்; புதிய புத்தகங்களைப் படியுங்கள். படித்த புத்தகங்களைக்கூட மீண்டும் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும்.
என்னுடைய சீனியர் அடிக்கடி சொல்வார், ‘‘ஒரே அய்.பி.சி.தான், அதை மெக்காலே எழுதினார், அந்த சட்ட விதிகளை ஒவ்வொரு முறையும் படிக்கும் பொழுது, ஒவ்வொரு கருத்துகள் தோன்றும்.
ஆகவேதான், கான்ஸ்ட்டிடியூசன் புரவிசன்ஸ் பழையது என்றாலும் அப்டேட்டிங் நாலஜ் என்பதை விடாமல் பெருக்கிக் கொள்ளவேண்டும்.
சட்டம் என்றால், பழைய காலத்தில் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதாது; இன்றைக்குப் புதிய புதிய தீர்ப்புகள் வருகின்றன. ஏற்கெனவே உள்ள தீர்ப்புகளுக்கு விரோதமாக பல தீர்ப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்!
இந்த வாய்ப்பில் உங்களையெல்லாம் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இதையெல்லாம் கேட்டுக் கொண் டிருந்த நீங்கள் எல்லோரும் பயனடைவீர்கள் என்று நினைக்கிறேன்.
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்; யாரும் வெளியில் வந்து விஷப் பரிட்சையில் ஈடுபடவேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் என்று இருந்தாலும், எந்த வசதிக் குறைவு ஏற்பட்டாலும், அதனை வசதியாக மாற்றிக் கொள்வதுதான் பகுத்தறிவு. அதுதான் நம்முடைய தந்தை பெரியாருடைய அணுகுமுறை என்பதை நினைத்துப் பார்த்து, அதன்படி நடந்துகொள்ளுங்கள்!
வசதி வாய்ப்புள்ளவர்கள் -
வசதியற்றவர்களுக்கு உதவவேண்டும்!
நம்முடைய இயக்கத் தோழர்களில், வசதி குறை வாக உள்ளோர், வாய்ப்பில்லாதவர்கள் எல்லாம் சில பகுதிகளில் இருக்கிறார்கள். நம்முடைய வழக் குரைஞர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ளோர், வசதி, வாய்ப்புள்ளோர், 10 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என்ற அளவில், உங்களுடைய பகுதியில் யாருக்குத் தேவை இருக்கிறதோ, உண்மையிலேயே அவர்களுக்குத் தேவையாக இருப்பின், அதனை அவர்களுக்குப் பயன்படுமாறு செலவழிக்கும் ஒரு முடிவினை இந்தக் கூட்டத்தின்மூலமாக எடுத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த முயற்சியை, நம்முடைய வீரசேகரன் அவர் கள் முன்னின்று நம்முடைய வழக்குரைஞர் தோழர்களை ஒருங்கிணைத்துச் செய்யவேண்டும். யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் செய்ய முன்வந்தால், நன்றாக இருக்கும்.
என்னுடைய சார்பாக
ரூ.10 ஆயிரம் வழங்குகிறேன்!
இந்த ஊரடங்கு இல்லையென்றால், நாம் பெட் ரோலுக்காகவும், சினிமா, ஓட்டல்களுக்குச் செல வழித்திருப்போம். அந்தப் பணம் எல்லாம் இப்போது மிச்சம்தான். அந்தப் பணத்தை, ஒவ்வொருவரும் ஒரு தொகையை அறிவிக்கலாம். அந்தத் தொகையை வாய்ப்பில்லாத கழகக் குடும்பங்களுக்குப் பயன்படுத்த லாம்.
முதலில், தனிப்பட்ட முறையில் என்னுடைய சார்பாக ரூ.10 ஆயிரம் கொடுக்கிறேன்.
உங்களுக்கு நன்றி கூறி,
விடைபெறுகிறேன்!
எல்லோரும் நலமாக வாழுங்கள்; பாதுகாப்பாக வாழுங்கள்; பயனுற வாழுங்கள். உங்களுடைய நேரம் உங்களுக்கும் பயன்படவேண்டும், இயக்கத் திற்கும் பயன்படவேண்டும்; சமுதாயத்திற்கும் பயன் படவேண்டும் என்ற அளவில் செயல்படுங்கள் என்று சொல்லி, இவ்வளவு நேரம் பொறுமையாக என்னுரையைக் கேட்ட உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க சமூகநீதி, பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சட்டத்துறை கலந்துரையாடலில் காணொலிமூலம் உரையாற்றினார்.
No comments:
Post a Comment