கரோனா நோயினால் உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டுள்ளன. வல்லரசுகள் என்று கூறப்படும் நாடுகள் எல்லாம் தள்ளாடும் நாடுகளாகக் கண்ணீர் உகுக்கின்றன.
இந்தியா போன்ற நாடுகளின் நிலையைக் கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே இரவு உணவின்றித் தூங்கச் செல்லும் மக்கள் தொகை 20 கோடி. இப்பொழுது கரோனாவின் தாக்குதலால் கேட்க வேண்டியதே இல்லை. 40 கோடி மக்களுக்கு மேல் வேலை பறிபோகும் பரிதாபமும், அச்சமும் நீடிக்கும் சூழ்நிலை.
உலகெங்கும் 82 கோடி மக்கள் இரவு உணவின்றி அல்லாடுவதாக அய்.நா.வின் அறிவிப்பு, எதிர்காலமே இருள் சூழ்ந்து விட்டதே என்று நம்பிக்கையற்ற நிலையில் ஒவ்வொரு நொடியும் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளது.
இதனைச் சமாளிக்க வழி இல்லவே இல்லையா? இந்தியாவைப் பொறுத்தவரை கல் முதலாளியான கோயில்களில் சொத்துக் குவிந்து கிடக்கிறதே. திருப்பதி போன்ற கோயிலுக்குச் சொந்தமான தங்கம் ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாகக் குறட்டை விட்டுத் தூங்கி வழிகிறது.
பொருளாதார வீழ்ச்சி என்று புலம்பிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? இந்தத் தங்கக் கடலை மக்களின் வாழ்வா தாரத்துக்குப் பயன்படுத்தினால் என்ன?
மக்களுக்காகத்தானே எல்லாம், மக்களே பசியும் பட்டினியுமாக மடிந்த பின், இந்தக் கோயில்களும், அவற்றின் சொத்துக்களும் என்ன செய்யப் போகின்றன? பேன் குத்திக் கொண்டு இருக்கப் போகின்றனவா?
இதுபற்றி அரசியல்வாதிகள் பேசாதது ஒரு பக்கம் இருக் கட்டும். பொருளாதாரப் புலிகள் கூட உதட்டை அசைப்பதில்லையே.
தங்கள் சொத்துக்களை எடுக்கக் கூடாது என்று எந்தக் கல் முதலாளி கேட்கப் போகிறது? எனக்கு ஏன் ஆறுகாலப் பூசை நடத்தப்படவில்லை என்று கடவுள் விக்கிரகம் கேட்கப் போகிறதா?
ஆறுகால பூசைகள் - படையல் என்ற பெயரால் யார் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டப்படுகிறது? மக்களுக்கு இவை எல்லாம் தெரிந்து தான் இருக்கிறதா?
பூனை கண் மூடிக் கொண்டு பூலோகம் இருண்டு விட்டது என்பது போன்ற ஊரை ஏய்க்கும், ஏமாற்றும் நிலை ஏன்? அரசு துணிந்து இதைப் பற்றிச் சிந்திக்கலாமே?
இந்து அறநிலையத் துறை ஒரு 10 கோடி ரூபாயை அரசுக்கு அளித்ததையே பொறுக்க மாட்டாமல் ‘குய்யோ முறையோ' என்று இந்துத்துவா சக்திகள் ஓலம் போடுவது எதைக் காட்டுகிறது? (தமிழர் தலைவர் அறிக்கையைக் காண்க).
கடவுளாகிய கல்லின் மீதும் உலோகப் படிகங்களின் மீதும் காட்டப்படும் அக்கறை மனிதர்களின் துயரங்கள் மீது மனதைச் செலுத்தாதது ஏன்? கல் ‘முதலாளிகளை'க் கும்பிட்டுக் கும்பிட்டு இவர்களின் மனதும் கல்லாகிவிட்டதா என்ற கேள்விதான் எழுகிறது.
கோயிலும், கோயில் தொடர்பான நிகழ்ச்சிகளும், சடங்குகளும், திருவிழாக்களும், அன்றாடப் பூஜைகளும், அத்தனையும் உற்பத்தி நாசம் என்ற பட்டியலின் கீழ் வரக் கூடியவை என்று பொருளாதாரம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.
அதுவும் கரோனா சுனாமி சுழன்றடிக்கும் நிலையில், எல்லா மதக் கோயில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. ‘எல்லாம் அவன் செயல்' என்றால் ‘கரோனா எவன் செயல்?' என்ற கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
பக்திமான்கள் மத்தியிலும் மறு சிந்தனை துளிர்க்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கடவுள் என்பது பற்றி புரட்சிச் சிந்தனை வெடிப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலை.
கரோனா எத்தனையோ கொடூரங்களை மானுடத்துக்கு இழைத்துள்ளது என்றாலும், இந்த ஒரு விடயத்தில் மிகப்பெரிய சிந்தனை மாற்றத்திற்கு அடிகோலிட்டுவிட்டது என்பதில் அய்யமில்லை.
இப்படியொரு சூழ்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
சித்திரை முதல் தேதி கள்ளழகர் திருவிழா என்று கூறி மதுரையே இரண்டுபடும். ஆற்றில் இயற்கையாக தண்ணீர் வராவிட்டாலும் செயற்கையாகத் தண்ணீரை நிரப்பி ‘அழகர் ஆற்றில் கடக்கிறார் - கடக்கிறார்' என்று தம்பட்டம் அடிப்பார் கள். ஆற்றைக் கடந்த அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குத் தூக்கிச் செல்லப்படும் கோமாளிதனத்துக்கு எல்லாம் குறைச்சல் இல்லை.
அதேபோல, மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம்பற்றிக் கேட்கவே வேண்டாம். மதுரையைப் பொறுத்தவரை மீனாட்சிக் கோயிலில் ஆண்டு ஒன்றில் பாதி நாள்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும் - பக்தி என்பது ஒரு பேஷனாகி விட்டது - வியாபாரமாகி விட்டது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியே கூறிடவில்லையா?
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்ட நிலையில், எந்த ஒரு அழகரும், மீனாட்சியும், ஏழுமலையானும் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
ஆனால், கோயிலை முன்வைத்துப் பிழைக்கும் கூட்டம் சும்மா இருக்குமா? இந்த விழாக்களை எல்லாம் இணையத்தின் மூலம் ஒளிபரப்பப் போகிறார்களாம். இந்த விஞ்ஞான சாதனங்களுக்கும் - இந்தக் கோயில்களுக்கும் என்ன சம்பந்தம்? இன்னும் சொல்லப்போனால் இவை எல்லாம் கோயில்களின் ஆகம விதிகளுக்கு முற்றிலும் விரோதமே!
தங்கள் சமாச்சாரம் என்றால் இந்தப் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் அந்தர் பல்டி அடிக்கிறார்கள் பார்த்தீர்களா? மக்களின் கும்பி காய்கிறது - மீனாட்சி சுந்தரேசுவரரான பொம்மைகளுக்குத் திருக்கல்யாணம் கேட்கிறதா?
No comments:
Post a Comment