வேறு எப்பொழுது?...
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
விண்ணில் வெகு உயரத்தில் பறந்தாலும், கழுகின் கண்கள் தரையில் செத்துக் கிடக்கும் எலியின் மீதே இருக்கும்!. அதேபோல் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பார்ப்பனர் எண்ணங்கள் மட்டும் அவர்களின் இனநலன் காப்பதாக மட்டுமே இருக்கும்.
கரோனா தொற்று மக்களைச் சூறையாடிக் கொண்டிருக்கின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, மக்களைப் பாதுகாக்க எண்ணாமல் தங்களின் இனநலன் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்ட நிலையிலும், கோயில்களில் மட்டும் பக்தர்கள் இல்லாமலேயே ஆகம பூஜைகள் வழக்கப்படியே நடைபெறுமாம். ஆக, கடவுளுக்கு சக்தி இல்லை என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கான திட்டமிட்ட தொடர் நடவடிக்கையே இது!
கரோனாவால் ஏற்பட்டிருக்கும் தனிமையால், இன்று பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட புரிந்து விட்டது கடவுள் என்பது வெறும் கற்பனையே என்று! ஆனாலும், அறிவியல் தந்த அரிய ஒளி, ஒலி பரப்பு ஊடகங்களை கையகப்படுத்திக்கொண்டு, இன்னமும் வெட்கம் சிறிதுமின்றி பக்தியைப் பரப்பி அறியாமையை வளர்த்து தங்களின் மத ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் காரியத்தைத் திட்டமிட்டு அழகாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் இன்னுமொரு பெரிய கொடுமை அறநிலையத்துறையிலுள்ள உபரிப் பணத்தைக்கூட சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற செலவிடக் கூடாது என கடுமையாகக் கண்டிக்கின்றன தமிழர்கள் தயவில் ஏடு நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன ஏடுகள்!
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுக்காரர் களுக்கும் கொண்டாட்டமே!
தன்னை முழுமையாக நம்பி, பிரார்த்தனை வழிபாடுகள் நடத்திய தனது பக்தர்களையாவது அவர்கள் நம்பும் அந்தக் கடவுள் காப்பாற்றி இருக்கலாமே! இப்பொழுது இல்லையென்றால் வேறு எப்பொழுது வந்து காப்பாற்றப் போகிறார்?
இனியேனும், ஆன்மிகப் புதைகுழியிலிருந்து மீண் டெழுந்து, சுதந்திர சமத்துவ, சமதர்ம மணங்கமழும் அறிவியல் பூங்காவில் மக்கள் அடியெடுத்து வைப் பார்களா?
சிந்திக்க இந்தத் தனிமை தான் ஏற்ற நேரம்! சிந்திப்பார்களா? சிந்தித்தால், எதிர்காலம் அறிவியல் பொற்காலமே!!
- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்.
No comments:
Post a Comment