இதுவே சரியான நேரம் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வாருங்கள் தோழர்களே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 27, 2020

இதுவே சரியான நேரம் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வாருங்கள் தோழர்களே









ஊரடங்கால் அனைத்து மதுக்கடைகளும் மூடப் பட்டுள்ளதால், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட இதுவே சரியான நேரம் என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பெரியார் லெனின்.


கரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரையில் தான் கடைகளைத் திறந்துவைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மதுக்கடைகள், பார்கள் ஆகியவை கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரி யர்கள் மது அருந்த முடியாமல் கடும் மன உளைச்ச லுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சாதகமாகப் பயன் படுத்தி சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சும் வேலையில் இறங்கியுள்ளனர். இதனை எதிர்த்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இன்னும் சிலர் யூடிபில் வீடியோ பார்த்து சொந்தமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடித்துவருகின்றனர். இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளன. குடிமகன்களின் நிலைமை இப்படியிருக்க இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மதுவை முற்றிலுமாக தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் என மது விலக்குக்காக நீண்ட நாள்களாகப் போராடு பவர்கள் அரசை வலியுறுத்துகின்றனர். இதனையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வழிமொழி கின்றன.இச்சூழலில் மதுவிலிருந்து விடுபட இந்த ஊரடங்கு உத்தரவு மிகச் சரியான நேரம் என்கிறார் மனநல மருத்துவர் பெரியார் லெனின். அதில் மதுவி லிருந்து விடுபடுவது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


எவ்வாறு மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வருவது?


மதுப் பழக்கத்திலிருந்து வெளிவர இதுவே மிகச் சிறந்த நேரமாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவினால் அனைத்து மதுக் கடைகளையும் அரசு மூடியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மது அருந்துவோர் தாமாக முன்வந்து மனமாற்றத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மது அருந்துவதால் நமது மனநிலை பாதிப்பதோடு வீட்டின் பொருளா தாரமும் மோசமாகும் என்பதனை உணர்ந்து மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வரலாம்.தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கை நடுக்கம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். அதிலிருந்து விடுபட தேவையான அனைத்து மருந் துகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. மருந்துகள் வேண்டுவோர் அருகிலுள்ள அரசு மருத் துவமனையை அணுகி பெற்றுக் கொள்ளலாம். குடிப் பழக்கத்திலிருந்து வெளியே வரும் எண்ணம் கொண்ட அனைவரும் முன்வர வேண்டும்.


வீட்டிலேயே பெண்கள் இருப்பதால் அவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கலைச் சமாளிப்பது எப்படி?


ஊரடங்கு உத்தரவினால் பெண்கள் வீட்டிலேயே தொடர்ந்து சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் பெண்களுக்கு ஒரு விதமான உளவியல் சிக்கல் ஏற் படக்கூடும். இதனைச் சரிசெய்ய கணவர், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால் பெண்களின் மனச்சோர்வு குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் உளவியல் சிக்கலிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்.


ஊரடங்கில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது?


ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் செல்போனிலேயே மூழ்கி விடாமல் இருக்க, அவர்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளைக் கற்றுத்தர வேண்டும். தொடர்ந்து படிப்பு சம்பந்தமாகப் பேசுவதைத் தவிர்த்து அவர் களிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்தவர்களாக இருந்தால் வீட்டில் வேலைகளைப் பகிர்ந்தளித்து அவர்களை ஈடுபட வைக்கலாம்.இவ்வாறு செய்யும்போது அவர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும். இதுதவிர புத்தகம் வாசிப்பது போன்ற அறிவுசார்ந்த செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். அன்பை மட்டுமே தொடர்ந்து குழந்தைகளுக்கு அளித்து அவர்களை இந்த ஊரடங்கு நேரத்தில் பராமரிக்க வேண்டும்.


வீட்டிலுள்ள பெரியவர்களின் மனநலத்தை எவ்வாறு பாதுகாப்பது?


வீடுகளில் மற்ற குடும்ப உறுப்பினர்களால் முதிய வர்கள் சாதாரணமாகவே நிராகரிக்கப்படுவார்கள். இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு இடையே யான இடைவெளி அதிகரிக்க வாய்ப்புண்டு. அனை வரும் அவரவர் வேலையில் ஈடுபடுவதை விடுத்து முதியோர்களிடம் நேரத்தைச் செலவிட வேண்டும்.


அவர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பெற வேண்டும். வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த பாதை, வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் ஆகியவை குறித்து கேட்டு அறிந்துகொள்ளலாம். பெரியோரிடமிருந்து பல்வேறு நீதிக்கதைகளை குழந்தைகள் பெற முடியும். அவர் களின் அனுபவம் மூலமாக குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி ஏற்படும்.


இந்த ஊரடங்கை மக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?


ஊரடங்கை தண்டனையாக பொதுமக்கள் எண்ண வேண்டாம். வாழ்க்கையில் மனிதர்கள் கடந்து வந்த பாதையில் இதுவும் ஒரு சூழ்நிலை. இதுபோன்ற சூழ்நிலைகளும் வாழ்வில் நிகழும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனைக் கடந்து செல்லும் பாதையை மக்கள் யோசிக்க வேண்டும்.மக்கள் அனை வரும் வீடுகளிலி ருந்து தங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊரடங்கு என்பது படிப்பினையாக இருக்கும்.


நன்றி: etvbharat.com









No comments:

Post a Comment