கரோனாவை ஒழிக்க யாகம் செய்ய வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 21, 2020

கரோனாவை ஒழிக்க யாகம் செய்ய வேண்டுமாம்!


"கரோனா சங்கடத்திலிருந்து மீண்டு மீண்டும் நமது நாடு நல்ல நிலைக்கு வருவதற்கு அனைவரும் சேர்ந்து மகாமிருந்துஞ்சய் யாகம் செய்ய வேண்டும்'' என்று முன்னாள் சபாநாயகர் சுமத்திரா மகாஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.


“மூடநம்பிக்கைகளைப் பரப்பாதீர்!” என்று ஒரு பக்கத்தில் பிரதமரும் வானொ(ளி)லிகளில் பிரச்சாரம் செய்தார்.


முதலில் இந்தப் பிரச்சாரத்தைப் பாமர மக்களிடத்தில் செய்வதைக் காட்டிலும் படித்த மக்களிடத்தில் தான் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது.


இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏ(எச்)  என்ற பிரிவு என்ன சொல்லுகிறது? மக்களிடத்தில் சீர்திருத்த உணர்வையும், விஞ்ஞானமனப்பான்மையையும்  வளர்க்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தவில்லையா?


வேலியே பயிரை மேய்வது போல நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், மக்களவைத் தலைவராக இருந்தவருமான படித்த ஒருவர் யாகம் நடத்தினால் கரோனா போகும் என்று சொல்லுகிறார் என்றால், இது மூடத்தனம் என்று சொல்லுவதைவிட மக்களைத் திசை திருப்பும் குற்றம் - தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் பெருங்குற்றம் என்று தான் கூற வேண்டும்.


அவர்மீது குற்றமல்ல - அவர் சார்ந்திருக்கும் பாஜக - சங்பரிவார் வட்டாரம் என்பவை அஞ்ஞானச் சேற்றில் முளைத்தவையே! விஞ்ஞான மனப்பான்மை என்பது தாங்கள் தூக்கிச் சுமக்கும் - பிடிக்கும் தங்களின் மதவாத சனாதனத்துக்கு எதிரானது என்று கருதும் மனப்பான்மைக்குச் சொந்தக்காரர்கள்!


‘‘பசு மூத்திரம் குடியுங்கள், கரோனா நோய்த் தீர்ந்து விடும்'' என்று சொல்லுகிற ‘அதிபுத்திசாலிகளும்' அவர்கள் கட்சிக்கு மட்டுமே உரித்தான ஏகபோகம்தானே!


“மருத்துவமனைகளில் கிருமி நாசினியை (ஞிவீsவீஸீயீமீநீtணீஸீt ஷிஜீக்ஷீணீஹ்) தெளிக்க வேண்டாம், கோமியத்தை (மாட்டு மூத்திரம்) பயன்படுத்துங்கள்” என்று அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை விட்ட ‘அறிவுக் கொழுந்துகள்' ஆட்சி பீடத்தில் இருந்தால் - இதுபோன்ற உளறல்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் போலும்!


விஞ்ஞானிகள் மாநாட்டிலேயே ‘அந்தக் காலத்திலேயே சிவபெருமான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தான்' என்று ஒரு பிரதமரே பேசவில்லையா?


நோபல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இனிமேல் இவர்கள் கூட்டும் விஞ்ஞானிகள் மாநாட்டின் பக்கமே தலைவைத்துப் படுக்கப் போவதில்லை என்று தலையில் அடித்துக் கொண்டு போகவில்லையா? அவரைச் சந்திக்க பிரதமர் மோடி விரும்பியபோது - சந்திக்க மறுத்து விட்டாரே!


கற்பனைக் காவியமான மகாபாரத்தில், பாரத யுத்தம் இந்தத் தேதியில்தான் நடந்தது என்று நாள் குறித்த பஞ்சாங்கப் பேர்வழிதானே இந்திய வரலாற்றுக் குழுவின் தலைவர்.


இந்த லட்சணத்தில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறதாம்!


“படிப்பது விஞ்ஞானம், நடப்பது அஞ்ஞானம்“ என்றால் இந்த இரட்டை வேடத்தை, இரட்டை முறை வாழ்க்கையை என்னவென்று சொல்லுவது!


இந்த லட்சணத்தில் சிறீஹரிகோட்டாவுக்கு வருகை தந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நீட்டி முழங்குவதைப் பார்க்கும்பொழுது விலா நோக சிரிக்கத்தான் தோன்றுகிறது.


வவ்வால்களால் கோவிட் 19 வைரஸ் பரவுகிறது என்ற ஒரு செய்தி உலவிக் கொண்டு வருகிறது. உடனே ஒரு செய்தி வருகிறது: ‘வவ்வால் எங்கள் கடவுள்கள் - அதைக் கொல்லக் கூடாது; அனுமதிக்க மாட்டோம்' என்று மக்கள் பொங்கி எழுந்தார்களாம்!


மலம் தின்னும் பன்றியே ‘‘மகாவிஷ்ணுவின் அவதாரம்'' என்று போற்றும் இந்தப் புண்ணிய பூமியில்' இன்னும் என்னென்ன ஆபாச மூடநம்பிக்கைகள்தான் சலங்கை கட்டி ஆடுமோ தெரியவில்லை.


கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி கழுவுங்கள், 20 நொடிகள் கழுவுங்கள் என்று இதோபதேசம் செய்யும் மருத்துவர்களும், அமைச்சர்களும் கைகளில் கத்தைக் கத்தையாக வண்ண வண்ணக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு தானே அதனைச் சொல்லுகின்றனர்.


அந்தக் கயிறுகளில் எத்தனை வண்டி அழுக்குகள் குடியேறியிருக்கும் - கிருமி தொற்று அதன்மூலம் அபாயகரமாகப் பரவும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத - இரட்டை வேட மனிதர்கள், சுமத்திரா மகாஜன் போன்ற படித்த பாமரர்கள் பாரத ‘புண்ணிய பூமியில்' ஏராளம் உண்டு. அதிலும் பா.ஜ.வு.க்குத்தான் இதில் முதல் மதிப்பெண்!


No comments:

Post a Comment