மற்றவர் உயிரைக் காக்க உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்களின் உடல் அடக்கம்
உரிய மரியாதையுடன் நடைபெற அரசு ஆவன செய்யவேண்டும்!
சென்னை பிரபல மருத்துவர் ஒருவரின் உடல் அடக்கத்தின்போது குடிமக்கள் அநாகரிகமாக நடந்துகொண்டது வருந்தத்தக்கது; உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்கள் மரணித்தால், அவர்களின் உடல் அடக்கமும் உரிய மரியாதையுடன் நடைபெற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
மனித குலத்தின் நிரந்தர நன்றிக்கும், பாராட்டுதலுக்கும் என்றென்றும் உரியவர்கள்
கரோனா - கோவிட் 19 - மிக வேகமாகப் பரவும் இந்தக் கொடூரமான காலகட்டத்தில், முதலில் நமக்கு இதைத் தடுக்கத் தொண்டாற்றும் மருத்துவர்களே - மனித குலத்தின் நிரந்தர நன்றிக்கும், பாராட்டு தலுக்கும் என்றென்றும் உரியவர்கள். அதுபோலவே செவிலியர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்த் தோழர்களான பெருமக்கள், காவல்துறை மற்றும் அனைத்து அரசுத் துறை கடமையாளர்கள்.
தமிழ்நாட்டில் கோவை சிறுமுகையைச் சார்ந்த ஒரு மருத்துவர் மரணமடைந் துள்ளார் - கரோனா பாதிக்கப்பட்டு.
நம் போன்றோரின் உள்ளம் அழுகிறது!
அதுபோலவே, சென்னையில் மிகச் சிறந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஒருவரும் கரோனாவினால் மரணமடைந் துள்ளார் என்பது போன்ற செய்திகளைக் கேட்டவுன் நம் போன்றோரின் உள்ளம் அழுகிறது!
காரணம், போர்க் களத்தில் போரினை நடத்தும் தளபதிகளும், போர் வீரர்களும் பலியானால் எப்படி எளிதில் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்?
மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் தீராத களங்கம்
இந்நிலையில், மரணமடைந்த அந்த மருத்துவ மாமணியின் உடலை அடக்கம் செய்யச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி, சென்னையில் ஒரு பகுதியில் உள்ள மக்களால் புரியாமல் தடுக்கப்பட்டு, ஆம் புலன்ஸ் வாகனமும், ஓட்டுநரும் அடித்து காயப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் தீராத களங்கமாகும் - மனித குலத்திற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்!
இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு ஒரு தனிக் குழுவையே ஆங்காங்கு அமைத்து - அதற்குரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்ய - (எரியூட்டுதல்மூலம்) செய்திருந்தால் இந்நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும்.
எங்கெங்கும் அச்சம் பரவியுள்ள நிலை யில், மூர்க்கத்தனமும், முட்டாள்தனமும் இணைந்து இப்படிப்பட்ட அநாகரிகமான நடத்தைகள்மூலம் தீராப் பழியை வேண் டாத விளைவுகளை வரவழைத்து விட்டன!
எங்கள் உயிரை ஏன் பணயம் வைக்கவேண்டும்?
மருத்துவர்களான எங்கள் சகோதரர்கள், ‘‘நாங்கள் தொண்டாற்றியதையும் மறந்துவிட்டு, எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில்கூட, மனிதநேயம் பேண முடியாத - தெரியாத மக்களுக்கு நாங்கள் ஏன் மருத்துவப் பணி செய்து எங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டும்?'' என்று கேட்டு - அரசுக்கு அறிவிப்புக் கொடுத்திருப்பது, அரசுக்கு மட்டுமல்ல - நம் அனைவருக்குமே உள்ள முக்கிய பொறுப்பை - கடமையை - மனிதநேயத்தை மறந்த நிலையை நினைவூட்டியிருப்பதாகும்.
தமிழக அரசின் நிர்வாகம் இதற்கென மக்களின் தேவையற்ற அச்சத்திற்குச் சிறிதும் இடம்தராமல், மரணமடைந்தோரை எரியூட்டும் வரையில் தக்க பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
மருத்துவர்களின் மனக் காயத்திற்கு மருந்திட்டு, மனிதநேயத்தைப் பேணவேண்டும்
ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கிய வர்கள்மீது உரிய நடவடிக்கைகளை உட னடியாக எடுத்து, இனிமேலும் இத்தகைய விரும்பத்தகாத, வேதனையையும், துன்ப மும் தரும் நிகழ்வுகள் எங்கும் நடக்காது என்ற உத்தரவாதத்தினை - உறுதியை அரசு வழங்கி, மருத்துவர்களின் மனக் காயத்திற்கு மருந்திட்டு, மனிதநேயத்தைப் பேணவேண்டும்.
அதிர்ச்சியாலும், அச்சத்தாலும்
உறைந்து போயுள்ள மக்களுக்கு...
மருத்துவ மாமணிகளே, ‘‘மன்னிப்போம், மறப்போம் - எங்கள் மனிதப் பணியை உயிரையும் பணயம் வைத்து சேவையாற்ற - எம் பணி தொடரும்'' என்ற ஒரு ஆறுதலை - அதிர்ச்சியாலும், அச்சத்தாலும் உறைந்து போயுள்ள மக்களுக்குத் தந்து உயருங்கள் என்று அன்புடன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மனிதநேயம் எதனையும்விட பெரியது! பெரியது!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
21.4.2020
சென்னை
No comments:
Post a Comment