புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்: தமிழர் தலைவர் சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்: தமிழர் தலைவர் சூளுரை

புரட்சிக்கவிஞரின் பாதை - தந்தை பெரியாரின் புரட்சிப் பாதை


அவர்கள் காண விரும்பிய புதியதோர் உலகைப் படைப்போம்!



புரட்சிக்கவிஞரின் பாதை - தந்தை பெரியாரின் புரட்சிப் பாதை; அவர்கள் காண விரும்பிய புதியதோர் உலகைப் படைப்போம் என்று அவருடைய பிறந்த நாளான இன்று சூளுரை ஏற்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்


இன்று (29.4.2020) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள்!


புரட்சிக்கவிஞர் உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்.


புகழுக்கோ, பணத்திற்கோ, செல்வாக்குப் பெற்ற பதவிக்கோ என்றும்  அடிமையாகா சுயமரியாதை ஆளுமையின் வணங்காமுடி!


அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்த நம் அய்யா - அறிவு ஆசான் தந்தை பெரியாரை - அந்நாளிலேயே சரியாகப் புரிந்து, நெறியாக ‘சிக்'கென்று பிடித்து, இறுதிவரை உறுதி காட்டிய கொள்கைக் கோமான்! புரட்சிக்கவிஞரின் 130 ஆவது பிறந்த நாள் என்பது திராவிடர் இயக்க வரலாற்றில் ஆடிப்பாடி மகிழ்ந்து, உண்டாட்டம் - கொண்டாட்டம் நிகழ்த்திடுகிறது உலகம் என்று பெருமை கொள்ளவேண்டிய நாள் - முடியவில்லையே! கொடுமை தரும் கரோனா தொற்று காரணமாக கூடி மகிழ்ந்து கொண்டாட இயலாவிடினும், அவர்தம் கவிதைகளை, அவர் உருவாக்கிய ஈரோட்டுப் பூகம்பக் கவிதைகளைப் படித்து - பரப்பி - அவர் வழி - அதுதானே அய்யா பெரியாரின் ஈரோட்டுப் பாதை - அதன் வழி நடக்க சூளுரை மேற்கொண்டு - சுயமரியாதைச் சூடேற்றுவோம் உலகிற்கு.


‘‘செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்


இவ்வுலக மக்களில் என்ன பேதங் கண்டாய்?''


‘‘சுயமரி யாதைகொள் தோழா! - நீ


துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!


சுயமரி யாதைகொள் ...


உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ


உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;


துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று


சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!


அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்


ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்


பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்


பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!


சுயமரியாதைகொள் ...''


‘‘இனப்பெயர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்


மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.


‘நான்தான் திராவிடன்' என்று நவில்கையில்


தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!''


புதியதோர் உலகு செய்வோம்!


இப்படி கவிஞரின் இலக்கியத் தோட்டத்தின் சுயமரியாதை மணத்தில் சொக்கி மகிழ்ந்து அவரை வாழ்த்தி, அவர் விரும்பிய அறிவு ஆசான் இலக்காகிய ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற, மூடநம்பிக்கையற்ற சமத்துவமும், பகுத்தறிவும், சமதர்மமும் ஆளும் புதியதோர் உலகு செய்வோம்!


இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்!


வாரீர்! வாரீர்!!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை 


29.4.2020  


No comments:

Post a Comment