தமிழ்நாடு அரசின் அணுகுமுறைகளில் மாற்றம் இல்லாவிட்டால் மிகப்பெரும் துயரத்திற்கு மக்கள் ஆளாவார்கள் - எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

தமிழ்நாடு அரசின் அணுகுமுறைகளில் மாற்றம் இல்லாவிட்டால் மிகப்பெரும் துயரத்திற்கு மக்கள் ஆளாவார்கள் - எச்சரிக்கை!

40 நாள் ஊரடங்குக்குப்பின் போதிய பலன் இல்லாதது ஏன்?


சந்தடி சாக்கில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதா?


எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதுபோல செயல்படும் தமிழ்நாடு அரசின் போக்கால் ஏற்பட்டவை எதிர்விளைவுகளே!



எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டதாலும், மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளைக்கூட எதிர்த்துப் பேசாமலும்,  நியாயம் கேட்காமலும், குதிரைக்குமுன் வண்டியைப் பூட்டுவதுபோல காலக் குழப்ப அடிப்படையில் செயல்களைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்வதாலும், 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருந்தும், உரிய பலன்கள் ஏற்படவில்லை; அனைவரையும் அரவணைத்து மிகப்பெரிய சவாலைச் சந்திக்கவேண்டிய இந்தத் தருணத்தில் தமிழ்நாடு அரசின் போக்கில் மாற்றம் இல்லாவிட்டால் மிகப்பெரிய துயரத்திற்கு மக்கள் ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கும் வகையில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


கரோனா தொற்று நோயும், அச்சமும் உலகத்தையும், நம் நாட்டையும் மிகவும் அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடுமையான நேரம் இது.


ஊரடங்கு, வீட்டுக்குள் இருத்தல் என்பதெல்லாம் ஓரளவு வசதியானவர்கள் நடுத்தர மக்களுக்கு சரி; ‘ஓட்டைக் குடிசையில்' ஒன்றரைச் சாண் பாய்மேல் முடங்கி, ஒருவேளை சமைத்து, அதை நாள் முழுவதும் உண்டு, அடுத்த நாளும் பழைய கஞ்சியாக்கி உண்ணும் பாட்டாளி, ஏழை, எளிய மக்கள் பெருத்துள்ள நாட்டில், அவர்களுக்குள்ள போதாமை, வறுமை - அதன் காரணமாக ஏற்படும் மன இறுக்கத்திற்கு ஆளாகும் மக்களின் கதி என்ன? நாளும் உழைக்கத் தெம்பு இருந்தும், பிச்சைக்கார வாழ்வு வாழ்ந்து, அரைப் பட்டினி அலங்கோலத்தில் அவதிப்படும் மக்களே நிறைந்த நம் நாட்டில், ஆட்சியாளர்கள் ஆணை பிறப்பிப்பது என்ற நடைமுறையில், ஏன் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டிய தருணம்.


40 நாள்கள் கடந்தும் என்ன விளைவு?


40 நாள்கள் கடைப்பிடித்த முறைகளால் முழுப் பயன் - எதிர்பார்த்த பயன் விளைந்துள்ளதா என்ற சுய பரிசோதனையை, விருப்பு - வெறுப்பு, அரசியல் காழ்ப்புணர்வுக்கு இடமின்றி சிந்திக்கட்டும்; மக்களாட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பணியாளர்கள்தான் ஆட்சியாளர்கள் - மாமன்னர்களோ, சர்வாதிகார சாம்ராஜ்ஜியவாதிகளோ அல்ல என்ற சிந்தனையுடன் ஆய்வு செய்து கரோனா தடுப்பு - ஒழிப்புதான் முன்னுரிமையுள்ள முதன்மைப் பணியாகும் என்ற உணர்க!


இதுதான் சரியான சந்தர்ப்பம் - மக்கள் வீதிக்கு வந்து போராட முடியாத நிலை உள்ளதால், முன்பு நிறைவேற்ற நினைத்து மூலையில் வைத்த திட்டங் களை - குறிப்பாக தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங் களைச் செயல்படுத்தத் இதுதான் தக்க தருணம் என்பதுபோல -


கல்வியில் - ஏழை, எளிய, கிராமப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய அத்தணைப் பேரின் கல்வியில் மண்ணைப் போடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தக் கரோனா தொற்று நோய்க் கால கட்டத்தை வாய்ப்பாகக் கருதி நடந்துகொள்வது எவ்வகையில் நியாயம்?


எடுத்துக்காட்டாக,


காவிரி நதிநீர்ப் பிரச்சினை!


காவிரி நதி நீர் ஆணையத்தைத் திட்டமிட்டே ஒன்றுமில்லாத ‘‘பல்லில்லாத'' ஆணையமாக்கினார்கள். அதனை மத்திய நீர் வளத்துறையின் ஒரு பகுதியாக ஆக்கி அறிவித்துள்ளதும், கல்லூரிகளில் கலை அறிவியல் வகுப்புகளில் படிக்கக் கூட இனி நுழைவுத் தேர்வு எழுதித்தான் இடம்பெற முடியும் என்ற பரிந்துரையை அவசரமாகக் கொடுக்கும் நோக்கமும் என்ன? ‘ஆன் லைன்' என்ற கணினிமூலமே இனி எல்லா படிப்பும் என்று கூறுவதன்மூலம் கிராமப்புற ஏழை, எளிய பிள்ளைகளுக்கும், நகரத்து, வசதி வாய்ப்புள்ள  பிள்ளைகளுக்கும் ஒரு பேத நிலையை உருவாக்கிடும் நவீன வகை  ‘வருணாசிரம தர்மத்திற்கு' வித்திடுவதுதானே! இந்த காலகட்டத்தில் வேக வேகமாக இவை  நுழைக்கப்படுவது, துக்க வீட்டில், நடக்கும் திருட்டு போன்ற கொடுமை அல்லவா?


அந்நாளில் நம் கழக மாநாடுகளில் கூறும் ஒரு உவமைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.


ஒரு வீட்டில் கணவன் இறந்தான். அதனை நினைத்து அவனது மனைவி ஒப்பாரி வைத்து அழுது கொண்டே இருந்தாள். (ஒப்பாரி நாட்டுப்புற மக்களி டையே பல காலம் இருந்த பழக்கம்) ஒரு அக்கா - தங்கை  துக்க வீட்டிற்குச் சென்று ஒப்பாரியில் கலந்துகொண்டு, அங்கே பந்தலிலே காய்த்த பாகற்காய்மீது குறி வைத்து - தன் தங்கையிடம் ஜாடை காட்டியதும், அக்கா கெட்டிக்காரத்தனமாக கூறியதும் இது:


‘பந்தலிலே பாவக்காய் தொங்குதடி எக்காடி


பந்தலிலே பாவக்காய் தொங்குதடி எக்காடி!' என்று தங்கை பாடினாராம்!


அக்கா கெட்டிக்காரி, வீட்டுக்காரி கவனிக்கக் கூடாது என்பதற்காகவே, ‘‘போம்போது பாத்துக்கு வோம்; போம்போது பாத்துக்குவோம்'' என்று ஒப்பாரி யிலேயே பதில் சொல்ல, கூர்ந்து கவனித்த அந்தக் கணவனை இழந்த வீட்டுக்காரி அம்மா, ‘‘அய்யோ அது (பாவக்காய்) விதைக்கல்லோ விட்டிருக்கு, விதைக்கல்லோ விட்டிருக்கு'' என்று ஒப்பாரியிலேயே பதில் சொன்னாளாம்.


அதுமாதிரி பதில் சொல்லும் வீட்டுக்கார அம்மா ளாகவும், இங்குள்ள அரசு இல்லாமல், எதற்கெடுத்தாலும் ‘‘டில்லியே சரணம்'' என்று தலையாட்டும் அரசாக, மத்திய அரசு தர வேண்டிய பாக்கியைக்கூட உரிமையோடு கேட்டுப் பெறும் நிலையில் இல்லாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் - இதனைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்தாலும், அதனையும் உதறித் தள்ளும் வேதனையான போக்கு இருப்பது வெட்கப்படவேண்டிய ஒன்றே!


இதுவரை பல அறிவிப்புகளும், நடத்தைகளும் - நல்ல நோக்கமான கரோனா தடுப்புக்கான ஏற்பாடுகளும் உரிய முழுப் பலனைத் தரத் தவறியதற்கு என்ன காரணம்?


தேவை அரவணைப்பு


கூட்டுச் சிந்தனை - அனைவரையும் அணைத்து அரசியல், கட்சி, ஜாதி மாச்சரியமின்றி செயல் பட்டிருந்தால், நல்ல விளைவுகள் ஏற்பட்டு இருக்குமே! வண்டிக்கு முன்னே குதிரையா? குதிரைக்கு முன்னே வண்டியா? என்பது போன்ற குழப்ப நிலை முடிவுகளால் நேர் எதிரான விளைவுகள்தானே நடைமுறையில்?


நடைபெறுவது மக்களாட்சி - மக்களின் பிரதிநிதி களுக்கும், இதனைக் கண்காணிக்கும் உரிமையும், பங்கும் உண்டு என்கிறபோது, நல்லிணக்கம் முக்கியமல்லவா?


மிகப்பெரிய துயரம் -


எச்சரிக்கை!


அந்தக் கோணத்தில் மாநில உரிமைகளையும் பாதுகாத்து, மக்களில் குறிப்பாக ஏழைத் தொழிலாளர் கள், அன்றாடங்காய்ச்சிகள், விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், கூலித் தொழில் செய்வோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத முடிவுகள் முக்கியம்.


இந்த நேரத்தில் இந்தக் கண்ணோட்டத்தில் செயல்படாவிட்டால் மிகப்பெரிய துயரத்திற்கு மக்கள் ஆளாக நேரிடும், எச்சரிக்கை!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை 


30.4.2020


No comments:

Post a Comment