சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து எதிலும் அரசியல் பார்வையில்லாமல் மனிதநேயத்துடன் செயல்படட்டும் தமிழ்நாடு அரசு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கட்சி மாறும் விளையாட்டை நடத்துவதா?
கரோனா தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்தாலும், மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது எப்படி என்றே பி.ஜே.பி. தலைமையும், அதற்கு மூலகர்த்தாவும், மூளையுமாக இருப்பவர் களும் இணைந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அரச வம்சத்தைச் சார்ந்த ஜோதிர் ஆதித்திய சிந்தியா தலைமையில் பெங்களூருவுக்கு (பா.ஜ.க. ஆளும் மாநில மாக உள்ளதால்) அழைத்துச் சென்று தங் கள் கட்டுப்பாட்டில் வைத்தனர். கரோனா பரவிக் கொண்டிருக்கும் வேளையில், ஜன நாயகத்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தினர். ஆளுநர்கள் எப்போதும் தயாராகவே நேரம் காலம் பார்க்காமல் ஒத்துழைக்கும் வகையில், (மகாராட்டிர அரசியலை நினைவுபடுத்திக் கொள்ளுங் கள்) தயார் நிலையில் இருப்பதால் ‘ஆயா ராம் காயாராம்' கட்சி மாறும் விளையாட்டை நடத்தி ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.
பா.ஜ.க.வின் ‘‘ஜனநாயகம்''
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திடும் முன்பு, கரோனா தீவிரமாகப் பரவுவதால், மத்தியப் பிரதேச சட்டமன்றத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கிறோம் என்று அந்த சபாநாயகர்மூலம் அறிவித்ததைக்கூட ஏற்காது, அவசர அரசியல் வேலைகளில் ஈடுபட்டு, அவ்வாட்சியைக் கவிழ்த்து, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவி யேற்றார்; அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்காத நிலையில், ஆட்சி மாற்றம் - காங்கிரசு ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு, பா.ஜ.க.வின் ‘‘அநாகரிக ஜனநாயகம்'' மலர்விக்கப்பட்டது!
வேதனையான ஒரு சூழல்!
பரிதாபத்திற்குரிய ஜனநாயகம் மலர்ந் தும்கூட அங்கே வாடி வதங்கிடும் மக்களின் நிலை குறித்து, அக்கட்சியில் முன்னாள் முக்கிய அமைச்சராக இருந்த அருண் ஷோரி போன்றவர்களே சுட்டிக் காட்டும் நிலை வந்திருப்பது எதைக் காட்டுகிறது? (அதுவும் கரோனா தொற்று அங்கே வேகமாகப் பரவிடும் பரிதாப நிலையில்) சுகாதார அமைச்சரோ மற்ற அமைச்சர் களோ நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு இல்லை என்பதுடன், சுகாதாரத் துறை செயலாளருக்கும் மற்றும் அத் துறையின் ஊழியர்களுக்கும் கூட கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது வேதனையான ஒரு சூழ்நிலையே!
ஜனநாயகம் படும்பாட்டை பார்க் கும்பொழுது இந்த கரோனா கொடூரம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், பேரா சிரியர் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே, மனித உரிமைப் போராளியும், சிறந்த எழுத்தாளருமான நவல்கா ஆகிய இரு வர்மீதும் உள்ள என்.அய்.ஏ. வழக்கினைத் தூசி தட்டி எடுத்து, அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, அவர்கள் நீதிமன்றங்கள்முன் சரணடைந் துள்ளனர்.
‘இந்து' ஆங்கில நாளேட்டின் கார்ட்டூன்
இந்தக் கொடூரமான கரோனா தொற்று சூழ்நிலையில், அதுவும் அம்பேத்கருக்கு ஒருபுறம் ‘‘ஜெயந்தி'' கொண்டாடிக் கொண்டே இப்படி ஒரு அரசியல் வன்மம் தேவையா? என்று ஜனநாயக உணர்வா ளர்கள் பலரும் கேள்விகளை எழுப்பு கிறார்கள். பீமா கோரேகான் வழக்கு - ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் எப்படிப் பறிக்கப்படுகிறது, ஜனநாயகம் எவ்வாறு மத்தியப் பிரதேசத்தில் வேடிக் கையான கேலிக் கூத்தாக பல வாரங்களாக உள்ளது என்பதற்கு நேற்று (16.4.2020) வெளிவந்த ‘இந்து' ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் நல்ல விளக்கமாகும். (கார்ட்டூன் அருகில் காண்க).
மத்திய - மாநில அரசுகள் செய்ய
முன்வருதல் அவசியம்!
இப்போதைய தேவை, அவதிப்படும் மக்களை கரோனாவிலிருந்து காப்பாற்று வதுதான் முதல் வேலை. கரோனாவின் தாக்கத்தால் விளைந்துள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர, தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மீட்டெடுத்து, அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே மத்திய - மாநில அரசுகள் செய்ய முன்வருதல் அவசியம்!
ஒரு மாற்றுச் சிந்தனைக்கு
மாநில அரசு முன்வரவேண்டும்!
பசிக்கு உதவ வருபவர்களையும் தடுத்து, அதிலும் அரசியல் ரீதியாக யாருக்கு என்ன பலன் என்று பார்க்கும் நேரமா இது? மக்களுக்குத் தன்னார்வமாக உதவ முன் வருவோரைத் தடுக்க அரசு இயந்திரத் தையும், சட்டத்தையும் பயன்படுத்தியதை ஏற்காமல், சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ள பிறகாவது, ‘‘அரசியல்'' பார்வையை விட்டு, மனிதாபிமானம் முக்கியம் என்ற ஒரு மாற்றுச் சிந்தனைக்கு - இனிமேலாவது மாநில அரசு முன்வரவேண்டும்!
மக்களுக்குத் தேவை சிகிச்சை மட்டுமல்ல - நோய்த் தடுப்பு மட்டுமல்ல - பசியையும், பட்டினியையும்கூட அறவே ஒழிப்பதும் முக்கிய கடமையாகும்.
மனிதாபிமானம் விடைபெற்றுச்
சென்றுவிடக் கூடாது
‘வாடிய பயிரைக் கண்டு வாடிய' வள்ளலார் வாழ்ந்த மண் நம் மண் - ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சுயமரியாதையில் பிறந்த திராவிட இயக்கம் பூத்து ஆட்சிக்குச் சென்றும் உள்ள இந்த மண்ணில், மனிதாபிமானம் விடைபெற்றுச் சென்றுவிடக் கூடாது என்பது மிகவும் முக்கியம் - அவசியம்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.4.2020
No comments:
Post a Comment