ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 25, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1: ஆளும் மத்திய, மாநில அரசுகள் கரோனாவை வைத்து அரசியல் இலாபம் தேட நினைக்கின்றனவா? - - வெங்கட இராசா, ம.பொடையூர்


பதில்: ஆளுங்கட்சிகள் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, இந்த கொரோனா கொடூர காலத்திலும் இப்படி நடந்து கொள்வது விரும்பத்தக்கதல்ல. வீடு பற்றி எரியும் போது, பிடுங்கியது லாபம் என்ற மனப்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் வரக்கூடாது! - ஆனால் நம் நாட்டில்தான் "எங்கும் அரசியல்" - "எதிலும் அரசியல் பார்வை" என்ன செய்வது?


கேள்வி 2: Social Distance என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியாக தமிழ்ப்ப படுதினால் சமூக இடைவெளி என்று வருமா ? அல்லது தனிநபர் இடை வெளி என்று வருமா? எது சரி? -- மன்னை சித்து, மன்னார்குடி - 1


பதில்: வெளிநாடகளில் அச்சொல்லுக்குப் பொருள் இல்லை. நம் நாட்டில் - ஜாதி - தீண்டாமை - நெருங்காமை - பாராமை - இருக்கும் நாட்டில் பொருள் வேறாக தொனிக்கக் கூடும். எனவே, தனிநபர் இடைவெளி' என்பதே சரியான சொல்லாக்கம் ஆகும்.


கேள்வி 3: கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் இவற்றின் கதவுகள் மூடப்பட்டதால் உலகம் பெற்ற நன்மைகள் என்ன? - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: குறைந்தபட்சம் - மூடநம்பிக்கை பக்திக்கு கொஞ்ச நாள் விடுப்பு - Holiday - விடுமுறை - அவ்வளவுதான்! -


கேள்வி 4: பாரதப் பிரதமர் என்று பலரும் சொல்வது சரியா? இது பார்ப்பனர் சூழ்ச்சிக்குப் பலியாவது ஆகாதா? இந்தியத் துணைக்கண்டம் என்றுதானே ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். இப்போது என்ன கேடு வந்தது? - - - - நற்குணச்செல்வன், திருச்சி 


பதில்: 'India, that is Bharat' என்றும் அரசியல் சட்டத்தில் வாசகம் உண்டே ! எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டப்படி சொல்ல முடியாது. இந்தியப் பிரதமர் என்றால் உலகம் முழுவதும் பயன்படும் சொல்லாட்சி சிறந்த ஒன்று.


கேள்வி 5: 1938 நீடாமங்கலம் ஜாதிய வன்கொடுமையைக் குறித்து டாக்டர். அம்பேத்கரின் பார்வை? - - இரா.அழகுப்பாண்டி, மதுரை-14


பதில்: இங்குள்ள இந்திய ஆங்கில ஏடுகள் அந்நாளில் அவரது கவனத்திற்குச் செல்லும் அளவுக்கு, அன்றைய பம்பாய் அளவுக்கு செய்திகளைக் கொண்டு செல்லவில்லை போலும். அவர் அதுபற்றி ஏதும் கூறவில்லை . இருந்தால் "What Congress and Gandhi have done to untouchables" புத்தகத்திலேயே எழுதியிருப்பார். தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக இருக்கலாம். 


கேள்வி 6: மனித உயிர் காக்கும் மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டது மனிநேயமற்ற செயல் அல்லவா? - - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.


பதில்: ஆம். கண்டனம் செய்து இரண்டு அறிக்கைகள் கழகச் சார்பில் வெளிவந்துள்ளனவே!


கேள்வி 7: உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவிற்கு அஞ்சுகின்ற நிலையில், சின்னஞ்சிறு நாடான கியூபாவின் மருத்துவக் கட்டமைப்பு உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது. இதனை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? - - - எஸ்.பத்ரா, வந்தவாசி.


பதில்: பிடல் காஸ்ட்ரோ கண்ட பொது உடைமை பூமியின் மனிதாபிமானம்! (வியட்நாமும் கூட ஓரளவுக்கு). இதயமெலாம் அன்பு நதியினில் நனைந்த பூமி - பொதுஉடைமை பூமி!


கேள்வி 8: மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறுவது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகா? - - சீதாலட்சுமி, திண்டிவனம்.


பதில்: கண்டிக்கத்தக்கது. கண்டித்துள்ளோம். விளக்கமான பதில் கூறியுள்ளோம் அரசியலில் ஆணவம் ஒரு போதும் வெற்றியடைந்ததில்லை.


கேள்வி 9: இலட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசு - வேலையை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுத் துறைகள், கழகங்கள், வாரியங்களில் உயர் பதவி முதல் கடைநிலைப் பிரிவு வரை காலியாக உள்ள பணி இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த அந்த துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை நியமிக்க அனுமதி உத்தரவு வழங்கப்பட்டு வருகிறதே? - மன்னன சித்து , மன்னார்குடி -1


பதில்: அரசின் தவறான அணுகுமுறை. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.


கேள்வி 10: பார்ப்பனர்கள் எல்லோருமே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பேசுவது எல்லாமே உளறலாக இருக்கிறது. இது நம்மை ஏமாற்ற வழியா? இல்லை அவர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா? நீங்கள் எப்படி எடுத்துக்குவீங்க? -- ஜி பாலகிருஷ்ணன், கோயமுத்தூர்


பதில்: அண்ணல் அம்பேத்கர் அழகாகச் சொன்னார் Brahmins are not intellectualls, only learned. பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்ல. தந்தை பெரியார் அவர்கள் "பார்ப்பானுக்கு எப்போதும் பின்புத்தி" என்பார்.


 


 


 


No comments:

Post a Comment