ரேபிட் டெஸ்ட் கருவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 24, 2020

ரேபிட் டெஸ்ட் கருவி


மிக விரைவில் கரோனா தொற்றை அறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கருவியை சீனா அறிமுகப்படுத்தியது. பரிசோதனைப் பணி வெகு தாமதமாக நடைபெறுவதால், கரோனா தொற்றின் உண்மை நிலையை அறிய முடியாத நிலை ஏற்பட்ட வந்தது.


சீனா அறிமுகப்படுத்திய இந்தக் கருவி அந்தக் குறையைப் போக்கவல்லது என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் ஏற்பட்டது.


பல நாடுகளும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு, அதை யார் முதலில் பெறுவது என்ற சர்ச்சைகள் வேறு!


கடைசியில் இன்றைய நிலை என்ன? இந்தக் கருவி என்பது நம்பிக்கைத் தன்மையற்றது என்று செயல்முறையில் தெரிந்து விட்டது. உண்மையிலேயே இது ஓர் அதிர்ச்சிக்குரிய செய்தியே! கரோனா எனும் கொடூர நோயால் உலகமே சுருண்டு கிடக்கும் நிலையில், அது தொடர்பான ஒரு மருத்துவ சாதனம் நம்பகத்தன்மையற்றது என்பது சாதாரணமானதுதானா?


பொதுவாக சீனாவில் தயாரிக்கப்படும் பொருள் என்றாலே மலிவானதுதான். ஆனால், தரமானதன்று என்ற ஒரு விமர்சனம், கருத்து உலகளாவிய நிலையில் நிலவி வருவதுண்டு. இந்த நிலையில் உயிர் காக்கும் மருத்துவப் பணிக்கு இன்றியமையாத ஒரு பொருளை உற்பத்தி செய்வதில்கூட சீனா இப்படி நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியுமா?


சீன நாட்டைச் சேர்ந்த ஹோங்கலில் உள்ள ஆல்டெக் பயோடெக் நிறுவனமும், குவாங்சுவில் உள்ள வோண்ட்போ பயோடெக் நிறுவனமும் இந்தக் கருவியைத் தயாரிக்கக் கூடியவை.


பிரிட்டன் இந்த நிறுவனங்களிலிருந்து 20 லட்சம் கருவிகளை வாங்கியது. இதற்காக ரூ.153 கோடியை செலவிட்டது. இந்தியாவும் இதில் கையைச் சுட்டுக் கொண்டு விட்டது. இந்தக் கருவியின் முடிவுகளில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன என்று கூறி, இதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறிவிட்டது.


இந்தக் கருவிகளை வாங்க வேண்டுமானால், மொத்த தொகையையும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் வேறு.


உலகம் முழுவதும் கடும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் பிரிட்டன் போன்ற நாடுகள் இறங்கியுள்ளன. உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தக் கருவிகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் இப்பொழுது என்ன கூறுகின்றன? இது ஒரு கூடுதல் பரிசோதனை வசதிதானே தவிர, இதுவே முடிவானதல்ல; முதற்கட்ட பரிசோதனைக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முடிவுகளை வைத்து சிகிச்சை அளிக்க முடியாது - கூடாது என்று சமாதானம் கூறுவதை எந்த வகையில் மதிப்பிடுவது?


முடிவைத் தெரிந்து கொள்ள முடியாததற்காகவா ஒரு கருவி தேவை?


கரோனாவுக்கு உரிய மருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பல்வேறு தகவல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.


பாரம்பரிய மருத்துவ முடிவுகளைப் பின்பற்றலாம், கபசுர  குடிநீர், நிலவேம்பு வழங்கலாம் என்று தலைக்குத் தலை கருத்துத் தானம் வழங்குவதில் மட்டும் குறைச்சல் இல்லை.


இந்தக் கரோனா நோய்க் கொடுமையின் தனித்தன்மை என்னவென்றால் எந்தவிதமான நோய் அறிகுறியும் கூட தெரியாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


நோயிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பியவருக்கும் கூட  நோய்த் தாக்குதல் மறுபடியும் தொடர்ந்துள்ளது என்பதை எல்லாம் வைத்து பார்க்கும்பொழுது, மிகுந்த விழிப்புணர்வுடன், அறிவியல்பூர்வமாக, ஆய்வின் அடிப்படையில் நிரூபணம் செய்யப்படாமல் விளம்பரப்படுத்துவது என்பது ஆபத்தானது. இதற்கொரு கட்டுப்பாட்டை அரசு ஏற்படுத்த வேண்டும்.


தற்போதைய நிலையில் இந்த நோய்க்கு அளிக்கப்படும் மருத்துவ முறையையும், மருந்துகளையும் வெளிப்படை யாகச் சொல்லுவது கூட நல்லதுதான் - குணம் பெற்றவர்கள் எந்த மருத்துவ உதவியின் அடிப்படையில் பலன் பெற்றார்கள் என்பது தெரிவிக்கப்பட்டால், மக்கள் மத்தியில் வீணான பீதி ஏற்படாமல் இருக்கும்.


இது பற்றி அரசும் - மருத்துவர்களும் சிந்திக்கலாம்.


No comments:

Post a Comment