எனது வீட்டினைச் சுற்றிச் சுற்றித்தான் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி!
இதய மாற்று அறுவை சிகிச்சை (29 ஆண்டுகளுக்குப் பின்பு) பல ஆண்டு காலம் Tread Mill என்ற நடை ஓட்டப் பயிற்சிக்கான மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்திய மருத்துவ அறிஞர்கள் - பிறகு சுமார் 10 ஆண்டுகாலமாக - Stent எல்லாம் போட்ட மீள் சிகிச் சைக்குப் பிறகு, எந்திரம்மூலம் நடைப்பயிற்சியைத் தவி ருங்கள்; கால்நடையாக நடந்தே சென்று நடைப்பயிற்சியைச் செய்யுங்கள் என்று சொன்னதால், இங்கும், தஞ்சை வல்லத் திலும், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலும் மேற்கொள்ளும் பழக்கமுடையவனாகி விட்டேன்.
அன்றாடப் பணிகளைப் பெரிதும் மனதில் நினைவூட்டி, ஒழுங்குபடுத்த (தனிமையில் செல்லும்போது) அது அருமையான வாய்ப்பாகக் கிடைக்கும். முக்கிய தகவல் தொடர்புகள் தேவைப்படும்போது மட்டுமே, கைத் தொலைப்பேசிமூலம் நண்பர்களிடம் உரையாடுவேன்.
மற்ற பெரும்பாலான நேரங்களில் பல்வேறு செய்தி களைப்பற்றி தனிமையில் சிந்திப்பது - நடந்தவைகளைப்பற்றி அசை போட்டு நன்றும் தீமையும் கண்டறிதல் போன்றவற்றிற்கு இந்த நடைப்பயிற்சி ‘நமக்கொரு நல்ல மாமருந்து’ என்று மகிழ்ச்சியடைவேன்.
புத்தநெறிகளை விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ள வியட்நாமைச் சேர்ந்த திச் நாட் யன் , பிரான்சு நாட்டிலேயே பல ஆண்டுகளைக் கழித்து, பல அரிய நூல்களை எழுதியுள்ளார். அதில் ஒரு நூல் ‘‘ளிஸீ விவீஸீபீயீuறீஸீமீss’’ எதைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, கவனம் செலுத்துதல் என்பதுதான் அதன் மய்யக் கருத்து.
விளையாடும்போது விளையாட்டில் மட்டுமே மனம். உண்ணும்போது உணவை சுவைத்து, மிகுந்த ஈடுபாட்டுடன் உண்ணல் (அது செரிமானத்திற்குக்கூட பெரிதும் உதவுமே), படிக்கும்போது அப்படியே - முழு கவனமும் அதிலேயே மய்யங் கொண்டிருத்தல் இவைகளை நாம் பழகிக் கொண்டு வாழ்வியலின் அன்றாட ஆக்கங்களாக்கிக் கொள்ளவேண்டும் என்பார் அந்நூலில், அந்த பவுத்த அறிஞர் பெருந்தகை!
நடைப்பயிற்சியின்போது வீட்டில் சுற்றிலும் எனது வாழ்விணையரின் கடும் உழைப்பு தெரியும். மருமகள், மாமியார் இருவருக்கும் தோட்டம்தான் இளைப்பாறுதல். வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்குப் பிறகு, வளரும் பிள்ளைகள் - செடிகளும் - பூச்செடிகளும், மற்ற கனி மரங்களும்தான்! எங்கே சென்றாலும் அங்கெல்லாம் அவர் வண்ண மலர்கள் பூக்கும் செடிகளையும், பயனுறு செடிகளையும் - நமது கல்வி நிறுவன வளாகங்களுக்கு முன்னுரிமை தந்துவிட்டு, பிறகு வீட்டில் உள்ள தோட்டத்திலும் வளர்ப்பதில் அவைகளை அவ்வப்போது உரிய தோட்டத் தொழிலாளர்த் தோழர்களை அழைத்து, அவற்றுக்கு மறு ஊட்டத்தை அளிப்பதில் கவனம் செலுத்துவர்.
பச்சை பசேல் செடிகள் பார்வைக்கு தரும் இதமும், வீசும் மெல்லியப் பூங்காற்றும் நடைபயிற்சியை சுகமாக்கும். பல வண்ணங்களில் சுமார் 10 வகை வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சி மனதிற்குத் தரும் மகிழ்ச்சி - பூங்காற்றின் வீச்சு தரும் இனிமையையும் வெல்லும்!
கரோனாவினால் அடைபட்டுள்ள மனிதர்களாகிய நம்மைப் பார்த்து, சுதந்திரமாகப் பறந்து செல்லும் பறவைகள் சிறகடிக்கின்றன.
வீட்டுச் செல்ல நாய் குடிக்க ஒரு தனிப் பாத்திரத்தில் தண்ணீர், அதில் காகம் வந்து தனது தாகம் தீர்க்கத் தண்ணீர் குடித்த காட்சி கண்டேன்; ஆறறிவு இல்லாத எங்களுக்குத் தண்ணீர் குடிப்பதில்கூட பேதம் இல்லை - ஆறறிவு - பகுத்தறிவு எல் லாம் பெற்ற மனிதர்களே, உங்களுக்கு ஏன் மதம், வர்ணம், ஜாதி என்ற பேதத்தினை வளர்த்து பெரும்பழி சுமந்த கறை படிந்த வரலாற்றைச் சுமந்துகொண்டு திரிகிறீர்கள் என்று கேட்காமல் கேட்பதுபோல் தோன்றுகிறது!
நடந்துகொண்டே பார்க்கிற போது மாமரங்கள் இரண்டும் உரிய பருவத்தின்போது, யாருக்காகவும், எதற் காகவும் காத்திராது - தளிர் - பூக்கள், பிறகு பிஞ்சுகள் - காய்கள், கொத்துக் கொத்தாகத் தொங்கு கின்றன.
மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்குக் கிளை பாரமா? என்ற திரையிசைப் பாடல் நினைவுக்கு வருகிறது!
பருவம் தவறாது மாமரம் தனது கொடையை மாம்பழங்களாகத் தரத் தயங்கியதில்லை.
தண்ணீர் ஊற்றியவர்களுக்கு மட்டுமா அப்பழங்கள் பயன்படு கின்றன? வழிப்போக்கர்களுக்கும், வல்லடி வம்பர்களுக்கும், ஏன் திருட்டுத்தனமாக பறிக்கின்றவர் களுக்கும் கூட அவை தித்திக்கத்தானே செய்கிறது!
அதற்கு சுயநலம் இல்லை. ஆறறிவில்லாத செடிகளும், மரங்களும் பொதுநலத்தில் மனிதர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசான்களாகி விடுகின்றன. மனிதனுக்கு இந்தக் கரோனா காலத்தில்கூட அதுவும் வளர்ந்த நாடான அமெரிக்கா போன்ற நாடுகள்கூட கடை திறந்தால், மக்கள் மடைவெள்ளமாகப் பாய்ந்து கடையைக் காலி செய்து, வீட்டில் முடக்கி ஒரு மளிகைக் கடை வைக்கும் எல்லையற்ற சுயநலம் வழிந்தோடுவது தெரிகிறதே!
மனிதர்கள் நாம் இயற்கையிடமிருந்து எப்போது பாடம் கற்கப் போகிறோம்?
மேலைநாடுகளில் நான்கு பருவங்கள் - அவைகள் தாங்களே தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு கடமை யாற்றுவதுபோல, நாம் தவறாது நம் கடமைகளை முறையாக ஆற்றுகிறோமா?
‘‘இயற்கையை நோக்கித் திரும்பு’’ (Back to Nature) என்று பிரெஞ்சு நாட்டு அறிஞர் ரூசோ ஏன் சொன்னார் என்பது இதன் பிறகு - இந்த தாவரங்களின் தன்னல மறுப்பைக் கண்ட பிறகுதான் புரிந்தது.
நாளும் நடந்துகொண்டே சிந்திக்கிறேன் - சுயநல மனிதர்களையும் தவறாமல் சந்திக்கிறேன்.
இயற்கையின் பயனை அனுபவிக்கும் மனிதன், அதிலிருந்து கற்கவேண்டிய பாடத்தை என்றுதான் கற்றுக் கொள்வானோ?
நடந்துகொண்டே இருக்கிறேன், இயற்கைக் காட்சி களும் கடந்துகொண்டே செல்கின்றன.
வற்றாத இன்பம், வளமான சிந்தனை - நல்வரவாகட்டும் நடைபயிற்சிகள்!
No comments:
Post a Comment